உலகப்புகழ்பெற்ற மூக்கு

///பஷீரின் உலகப்புகழ்பெற்ற மூக்கு சிறுகதை தொகுப்பை முன் வைத்து வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தவை பால்யகால சகி மற்றும் மதிலுகள் ஆகிய இரண்டு நாவல்களும் தான். பால்யத்தில் ஏற்படக்கூடிய நட்பின் அடர்த்தியை,காதல் கைகூடாமல் போன ஒரு மனிதனின் உச்ச வலியை பால்யகால சகி நாவலில் பதிவு செய்திருப்பார் பஷீர். மதிலுகள் நாவலில் ஒரு சிறைக்கைதியின் நிறைவேறாத காதலை ஒரு மெல்லிய துயர் கனக்கும் உணர்ச்சியுடன் சொல்லியிருப்பார் பஷீர். ஒரு பத்திரிகையாளர்.சுதந்திர போராட்ட வீரர்.இலக்கின்றி பல்வேறு தேசங்களில் பயணம் செய்தவர் பஷீர்.ஒரு சூஃபி போன்று சிந்தித்தவர். இந்த உலக புகழ்பெற்ற மூக்கு சிறுகதைத் தொகுப்பில் பெரும்பான்மையான கதைகள் பஷீரின் சொந்த அனுபவங்களை புனைவில் ஊற்றி எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன. உலகின் யதார்த்த முகங்களையும், மனிதர்களையும் தன் படைப்புகளில் பேசியவர் பஷீர்.பஷீரையும் பகடியையும் பிரிக்க முடியாது. அவரது படைப்புகளில் துயரையும், ஏமாற்றத்தையும் கூட பகடி செய்யும் அவரது கலை தொனி தவிர்க்க முடியாததாக இருக்கும். ஜென்ம தினம் என்ற கதையில் தன்னுடைய பிறந்த நாளில் ஒரு வேளை...