உலகப்புகழ்பெற்ற மூக்கு

 ///பஷீரின் உலகப்புகழ்பெற்ற மூக்கு சிறுகதை தொகுப்பை முன் வைத்து



வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தவை பால்யகால சகி மற்றும் மதிலுகள் ஆகிய இரண்டு நாவல்களும் தான்.

பால்யத்தில் ஏற்படக்கூடிய நட்பின் அடர்த்தியை,காதல் கைகூடாமல் போன ஒரு மனிதனின் உச்ச வலியை பால்யகால சகி நாவலில் பதிவு செய்திருப்பார் பஷீர்.

மதிலுகள் நாவலில் ஒரு சிறைக்கைதியின் நிறைவேறாத காதலை ஒரு மெல்லிய துயர் கனக்கும் உணர்ச்சியுடன்  சொல்லியிருப்பார் பஷீர்.

ஒரு பத்திரிகையாளர்.சுதந்திர போராட்ட வீரர்.இலக்கின்றி பல்வேறு தேசங்களில் பயணம் செய்தவர் பஷீர்.ஒரு சூஃபி போன்று சிந்தித்தவர்.

இந்த உலக புகழ்பெற்ற மூக்கு சிறுகதைத் தொகுப்பில் பெரும்பான்மையான கதைகள் பஷீரின் சொந்த அனுபவங்களை புனைவில் ஊற்றி எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன.

உலகின் யதார்த்த முகங்களையும், மனிதர்களையும் தன் படைப்புகளில் பேசியவர் பஷீர்.பஷீரையும் பகடியையும் பிரிக்க முடியாது.

அவரது படைப்புகளில் துயரையும், ஏமாற்றத்தையும் கூட பகடி செய்யும் அவரது கலை தொனி தவிர்க்க  முடியாததாக இருக்கும்.

ஜென்ம தினம் என்ற கதையில் தன்னுடைய பிறந்த நாளில் ஒரு வேளை உணவு கிடைக்காமல் அவஸ்தையுறும், அவமானப்படும் ஒரு எழுத்தாளனின் துயரை எழுதியிருப்பார்.

கதையில் மிதியடி விற்க்கும் சிறுவனுக்கு இரண்டு அணாவில்  செல்லாத ஓரணாத்துட்டை கொடுத்துவிட்டு சிரிக்கும் ஒருவனைப் பற்றியும் பதிவு செய்கிறார்.

ஐசுக்குட்டி எனும் சிறுகதையில் பெண்களின் பெருமையடிப்புகளை பற்றி எழுதுகிறார்.

பிரசவத்தின்போது டாக்டர் வந்து பிரசவம் பார்த்தால் தான் அது கௌரவமான பிரசவம் என தன் கணவனை கடன்காரனாக்கும்

ஐசுக்குட்டி என்ற பெண்ணின் பிரசவத்தை பற்றியும்,பெண்களின் பிடிவாத குணத்தைப் பற்றியும இக்கதையில் பேசியிருப்பார் பஷீர்.

அம்மா எனும் சிறுகதையில் காந்தியடிகள் வைக்கம் துறைமுகத்திற்கு வந்த போது காந்தியை கையால் தொட்டுப் பார்த்தஅனுபவத்தையும்,போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைபட்ட அனுபவத்தையும் தன் அம்மா அவருக்காக இரவும் பகலும் தூங்காமல் காத்திருந்ததையும் இந்தக் கதையில் சொல்கிறார். 

நீல வெளிச்சம் என்ற சிறுகதை தமிழில் புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை சிறுகதை போல ஒரு அமானுஷ்ய பேய் கதை போன்றது.



குறிப்பிட்டு சொல்லக்கூடிய பூவன் பழம்,உலகப் புகழ்பெற்ற  மூக்கு,சிங்கிடி முங்கன் போன்ற சிறந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளது.

கதைகளின் சுல்தான் எனப்படும் பஷீர் வாழ்க்கையை கதைகளாக்கியவர்.

பஷீரின் படைப்புகள் நவீன மலையாள இலக்கியத்தின் அடையாளமாக கொண்டாடப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற மூக்கு என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு நல்ல சிறுகதை தொகுப்பு.வாசித்து பாருங்கள்///


velu malayan

26.5.2021

❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்