இடக்கை

 ///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இடக்கை நாவலை முன்வைத்து



நானறிந்த முகலாயர்கள் மற்றும் இன்ன பிறர்களின்  வரலாறு என்பது பள்ளிக்காலங்களில் வெறும் மதிப்பெண்களுக்காக படித்தவை.


கரும்பு சக்கையை போன்ற சுவாரஸ்யமற்ற,மேலோட்டமான ஒரு கூர்மையற்ற அவதானிப்புகளைத்தான் பள்ளி வயதில் வரலாறு நமக்கு கொடுத்திருக்கும்.


வரலாற்றை புனைவாக,ஒரு நாவலாக அணுகும்போது அது கொடுக்கும் அக அனுபவம் அலாதியானது.


அப்படி ஒரு அனுபவத்தை முகலாய பேரரசன் அவுரங்கசீப்பின் இறுதி காலத்தை மையப்படுத்தி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் இடக்கை நாவல் கொடுக்கிறது.


வரலாற்றின் வயிறு முழுக்க துரோகமும்,பழிவாங்கல் உணர்வும்,கொலையும்,அதிகார மமதையும்,நீதி புறக்கணிப்புகளுமே நிரம்பி கிடக்கின்றன.


அவுரங்கசீப்பின் இறுதி காலத்தில் தொடங்கும் நாவல் அவரின் மரணத்திற்குப் பிறகு அவரின் விசுவாசத்துக்கு உரியவர்கள் மற்றும் அந்நாட்டின் எளிய மக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதியை புனைவின் வடிவில் ஆவணப்படுத்துகிறது இடக்கை நாவல்.


பேரரசுகளின் வீழ்ச்சிகளின் வழியாக எளிய மக்கள் மீது நிகழ்ந்த அவலங்களையும்,நீதி மறுக்கப்பட்ட துயரையும் இடக்கை பேசுகிறது.


சாமர் எனப்படும் தாழ்ந்த சாதியில் பிறந்த தூமகேது மற்றும் அவுரங்கசீப்பின் பணியாள் திருநங்கை அஜ்யா பேகம் ஆகிய இருவரின் நீதி மறுக்கப்பட்டதின் ஊமைக் குரலின் வலியை இடக்கை நாவல் வரலாற்று சம்பவங்களின் ஊடே பதிவு செய்கிறது.


ஒரு பேரரசின் அரசனாக இருக்கும் ஒளரங்கசீப்பிற்கு எவர் மீதும் நம்பிக்கை கொள்ளாத இடத்தில் அஜ்யா பேகம் அரசனின் நம்பிக்கைக்கும்,விசுவாசத்திற்கும் பாத்திரமாகிறாள்.


ஒரு பணியாளரின் மீதான நம்பிக்கையைக் கூட தன் தந்தை தன் மீது வைக்கவில்லையே  என அவுரங்கசீப் மறைவிற்கு பிறகு அஜ்யா பேகத்தை சிறையில் அடைக்கிறான் ஒளரங்கசீப்பின் மகன்.


ஒளரங்கசீப் இறக்கும் முன் தான் கையால் செய்த ஒரு குல்லாவையும், நூறு பொன் காசையும் அஜ்யா பேகத்திடம் கொடுத்து இதை பிர் கான்பூர் தர்காவிலிருக்கும் ஒருவரிடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார்.பிர்கான்பூரில் ஒளரங்கசீப் தர்கா சென்ற போது அந்த நபர் ஒளரங்கசீப்பிற்கு குல்லா கொடுத்து உதவிக்கு செய்நன்றியாக மேற்கண்ட உதவியை செய்யுமாறு அஜ்யா பேகத்திடம் ஒளரங்கசீப் ஒப்படைக்கிறார்.


அதை ஒப்படைக்கச் செல்லும் போது அந்த பெட்டியை திருடன் ஒருவன் திருடிச் செல்லும் போது பெட்டியை உடைத்து அதிலுள்ள குல்லாவை ஒரு பிச்சைக்காரனிடம் போட்டுவிட்டு சென்றுவிடுகிறான்.


கடைசியில் அஜ்யா பேகம் தூக்கிலிட்டு கொள்ளப்படுகிறாள்.


திருடாத ஆட்டை திருடியதாக பழி சுமத்தப்படும் தூமகேது காலா எனப்படும் சிறையில் அடைக்கப்படுகிறான்.


நாவல் முழுக்க நீதி தேடி அலையும் குரலாக தூமகேது வருகிறான்.


சாமர்கள் எல்லோரும் இடக்கைப் பழக்கம் கொண்டிருந்தார்கள் அது தற்செயல் இல்லை.மாறாக அவர்கள் வலது கையை பயன்படுத்தக்கூடாது என தண்டிக்கப்பட்டு இருந்தார்கள் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. 


சாமர்களின் கடவுளான கோகாவிற்கும்,சிவனுக்கும் பன்றி வேட்டை சண்டையில் சிவன் கோகாவின் வலது கையை துண்டித்து விட்டதோடு அவன் வம்சாவளியில் எவரும் வலது கையை பயன்படுத்தக்கூடாது என்று சாபம் விடுகிறான்.


அதனால் தான் இன்றைக்கும் சாமர்கள் இன்றைக்கும் வலதுகை பயன்படுத்துவதில்லை.

தூமகேதுவும் இடக்கைப் பழக்கம் உள்ளவன்தான்.


எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு மிகச் சிறந்த கதைசொல்லி என்பதற்கு இந்நாவலில் பல இடங்கள் உதாரணங்களாக இருக்கிறது.

நாவலில் நிறைய உப கதைகள் வருகிறது.


மண் உருவம் கொண்ட லகியா என்ற பெண் அழுது அவள் உடல் கரைவதில் போதை இருப்பதால் அதை குடித்து போதையேற்றிக் கொள்ளும் அவள் கணவன் தொடர்ந்து அவளை அழ வைப்பதால் கடைசியில் அவள் ஒரு கிணற்றில் விழுந்து கரைந்து விடுகிறாள்.அந்த கிணற்று நீரை குடித்துப் பார்க்கும் அவன் கிணறு நீர் முழுதும் போதை நீராகி விடுவதால் அதை யாருக்கும் தெரியாமல் மூடி விடுகிறான் என்ற கதையும், 


துவாபர யுகத்தில் பசிக்காக ஊர்ந்து செல்லும் தன் கணவன் புழுவை ரதம் ஏற்றி கொன்றவருக்கு எதிராக வானுலகில் நீதி கேட்கும் பெண் புழுவின் கதையும் என நிறைய உபகதைகள் நாவலின் உள்ளே.


தன்னுடைய இறுதி மரணம் எப்படி நிகழும் என்பதை தெரிந்து கொள்ள சூபி ஞானியான முகைதீனை சந்திக்க ஒளரங்கசீப் தார் பாலைவனத்தில் செல்லும் போது சூபி ஞானிக்கும்,ஒளரங்கசீப்பிற்கும் இடையே நிகழும் உரையாடலில் பாலைவன மணற்குன்றின் அருகிலுள்ள கிணற்றிலிருந்து ஒரு கைப்பிடி நீரை கொண்டுவரச்சொல்லுகிறார் சூபி ஞானி. 


ஆனால் ஒளரங்கசீப்பால் ஒரு கைப்பிடி நீரைக் கூட கொண்டுவர முடிவதில்லை.ஒரு துளி தண்ணீரை கூட உன்னால் காப்பாற்ற முடியவில்லை.இது தான் உன் விதி. இதுதான் உன் தேசத்தின் விதி. என்கிறார் சூபி ஞானி.


ஏன் இப்படி ஆனது? என்ன தவறு செய்தேன்?என   ஒளரங்கசிப் கேட்பதற்கு உன் கைகள் ரத்தக்கறை படிந்தவை.எந்த கரங்கள் தூய்மையானதாக அடுத்தவரை தாங்கி பிடிப்பதாக அன்போடு  இருக்கிறதோ அந்த கரங்களில் தான் தண்ணீர் தேங்கி நிற்கும்.

உன் கரங்கள் பேராசையின் கறை படிந்தது.அப்பாவிகளின் குருதிக் கறை படிந்தது.அதிகாரத்திற்காக ஆயிரமாயிரம் துரோகச் செயல்கள் செய்தது.இந்த கைகளால் ஒரு துளி தண்ணீரை காப்பாற்ற முடியாது.


 உன் செயல்களே உனது இறுதியை தீர்மானிக்கின்றன.நீ உன் மரணம் எவர் கைகளாலும் நிகழாது.ஆனால் நீ நோயால் அவதியுற்று இறந்து போவாய் என அந்த சூபி ஞானி கூறுவார்.


உண்மையில் அவுரங்கசீப்பிற்கும், சூபி ஞானிக்கும் இடையே நிகழும் இந்த உரையாடல் நாவலில் ஒரு சூபி கவிதைப் போல் இருக்கும்.


நாவலில் என்னை பெரிதும் துயர எண்ணத்தில் உழற்றியவர்கள் தூமகேதுவின் மகன் மஞ்சாவும், தூமகேதுவும்தான். 


சிறுவன் மஞ்சா பசி அடங்காமல் எதையாவது தின்று கொண்டே இருப்பான்.


சில நேரம் கீழே கிடக்கும் கற்களைக் கூட எடுத்து கடித்து பார்ப்பான். இந்த கற்களை மட்டும் தினமும் தின்பதாக இருந்தால் எளிதாக பசி அடங்கி விடும்.ஏன் இந்த கற்களை கடிக்க முடியவில்லை.கல் ஏன் ருசியே இல்லாமல் இருக்கிறது என்பான் சிறுவன் மஞ்சா.ஆட்டுக்குட்டியுடன் சேர்ந்து புல்லைத் தின்பான்.


ஒரு நாள் தன் நண்பன் கின்பத் உடன் துராய் பஜாரில் சோலங்கி வீட்டு விஷேஷத்தில் வயிறுமுட்ட பருப்பு போட்டு நெய் ஊற்றி பாயாசத்துடன் சாப்பிடுகிறான். மஞ்சாவின் அம்மா நளா அவனை நீ மட்டும் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு வந்தாயா என விறகுகட்டையை அடிக்க எடுப்பதால் கோட்டைச் சுவர் நோக்கி ஓடிவிடுகிறான்.மறுநாள் மஞ்சாவின் தம்பி கினு நளாவிடம் அழுது கொண்டே சொல்கிறான் அம்மா மஞ்சா கோட்டைச் சுவரின் ஓரத்தில் வயிறு உப்பி ஈக்கள் மொய்க்க இறந்து போயிருக்கிறான் என்று.


பசிக்கு ஏதோ காட்டு காய்களை கடித்துத் தின்றதால் மஞ்சா இறந்து போயிருக்கிறான்.


நளா வறுமையின் கோரத்தால் கோதுமை மாவு வண்டியை வழிபறித்து கொள்ளையடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுடன் நகலி ஊரை விட்டே சென்று விடுகிறாள்.


சத்கர் தேசத்தை ஆளும் பிஷாடன் மன்னன் சமகாலத்தில் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் சிலபேரை ஞாபகப்படுத்துகிறான்.

அநாம் என்ற குரங்கு தான் பிஷாடன் மன்னனின் உற்ற தோழன்.

அந்தக் குரங்குடன் தான் அவன் தினமும் சதுரங்கம் விளையாடுவான்.

விலங்குகளை விதவிதமாக சித்திரவதை செய்து ரசிப்பவன்.பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்து ரசிப்பவன்.


என் நாட்டு மக்களை நான் சித்திரவதை செய்வதற்கு கூட எனக்கு உரிமை இல்லையா?என்று கேட்க கூடிய மிகச்சிறந்த  அரசன் பிஷாடன்.


மக்களை,வணிகர்களை சித்திரவதை படுத்துவதால் ஒரு கட்டத்தில் கண்களிரண்டும் பிடுங்கப்பட்டு இறந்து போகிறான் பிஷாடன்.


செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படும் தூமகேது ஒரு கட்டத்தில் அங்கிருந்து தப்பி தன் மனைவி நளா மற்றும் குழந்தைகளை தேடி தேசம் முழுதும் அலைகிறான்.


எந்த குற்றமும் செய்யாத தூமகேது தன் மனைவி குடும்பத்தை இழந்து நிற்கிறான்.சமகாலத்தில்  எந்த தவறும் செய்யாத பேரறிவாளன் போன்றவர்களை நியாபகப்படுத்துகிறான் தூமகேது.


தன் குடும்பத்தை தேடி அலைந்து முதுமையில் தள்ளாடி வந்த இடத்தில் தூமகேது அமர்ந்திருக்கும் போது ஞானி ஷரீப் தர்காவிற்கு யாத்திரை செல்பவர்களில் ஒரு ஒரு பிச்சைக்காரன் தனது தொப்பியை கழட்டி தூமகேது நோக்கி வீசி செல்கிறான்.



அந்ததொப்பி பேரரசர் அவுரங்கசீப் தன் கைகளால் செய்த குல்லா என்பது தூமகேதுவிற்கு தெரியாது.


ஆனால்தன் தலைக்கு அந்த குல்லா பொருந்தி இருப்பது நினைத்து சந்தோஷம் கொள்கிறான்.


யாத்திரீகர்களில் ஒருவன் தன் கையில் வைத்திருந்த சாமந்தி மாலை ஒன்றை தூக்கி தூமகேதுவை நோக்கி வீசுகிறான்.அந்த மாலை தூமகேது மடியில் வந்து விழுகிறது.


பத்து வயதில் காளி கோயிலில் இருந்த சாமந்தி மாலையை கழுத்தில் அணிந்ததற்காக ஒரு கீழ் சாதிக்காரன் நாய் எப்படி சாமந்திப்பூவை கழுத்தில் அணியலாம் என பிராமணர்களால் சூடு வைக்கப்பட்டு சாணி கரைத்து தலையில் ஊற்றப்படும் தூமகேது அந்த சாமந்தி மாலையை எடுத்து முகர்ந்து பார்த்து கழுத்தில் அணிந்து கொள்கிறான்.


அவனை அறியாமல் நளா நளா  நான் எப்படி இருக்கிறேன் என அவனுடைய மனைவியை கேட்பது போல் கேட்டு அவள் இங்கு இல்லை என்ற நினைப்பு வந்தவுடன் தாங்க முடியாத வருத்தத்துடன் தலை கவிழ்கிறான். 


நடந்து செல்லும் யாத்ரிகர்கள் அடிக்கும் உற்சாக மேள சத்தம் தூமகேதுவின் துக்கத்தையும்,வேதனையையும் மீறி அவன் அறியாமல் அவனது இடக்கை தாளமிட்டு கொண்டிருந்தது என நாவல் முடிகிறது.


நாவலில் குவாலியர் வேசை விடுதியில் இருக்கும் குலாத்தி மற்றும் இரண்டு அடி மட்டுமே உள்ள குள்ளமான காதம்பரி ஆகிய இருவரிடமும் காதல் கொண்டு இருவரையும் ஏமாற்றி கடைசியில் குலாபியை ஒரு வியபாரிக்கு விற்றுவிடும்

ஓவியன் நியோகி உணர்த்துவது காமம், காதல்,துரோகம் மூன்றும் வேறு வேறா அல்லது மூன்றும் ஒன்றா? என்பது தான்.


17ஆம் நூற்றாண்டில் மட்டுமல்ல சமகாலத்திலும் ஒரு சாமானியனுக்கு நீதி என்பது அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை.


அது உயர் பிரிவினர்களால் கட்டமைக்கப்பட்டு எளியவர்களை வீழ்த்துவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


நீதி குறித்த சந்தேகத்தையும்,அதன் விளக்கத்தையும் வரலாற்றுப் பார்வையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிப் பார்த்த ஆவணம் தான் இடக்கை நாவல்.


நீதிக்கு காத்திருப்பது என்பது தனிநபரின் பிரச்சினை மட்டுமில்லை.தேசமும் தனக்கான நீதிக்காக காத்துக் கொண்டுதான் இருக்கிறது.எவருக்கும் நீதி கிடைப்பது எளிதாக இல்லை.நீதியுணர்வு நெருப்பைப் போன்று பாரபட்சமற்றது என்பார்கள். ஆனால் நடைமுறையில் அது கானல் நீரைப் போல வெறும் மாயத்தோற்றமாக உள்ளது. 


காலம் நீதிக்காக மனிதர்கள் வடிக்கும் கண்ணீர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனை மனிதர்கள்,எத்தனை விதமான வழக்குகள்,நெடிய காத்திருப்புகள்,விசாரணைகள் சாட்சியங்கள் ஆனாலும் மனிதர்கள் நம்பிக்கை இழப்பது இல்லை. நீதிக்காக காத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் தனக்கு நீதி கிடைத்துவிடும் என உறுதியாக நம்புகிறான்.


அந்த நம்பிக்கை கண்முன்னே பொய்த்துப் போகும் போது கூட அவன் மனம் தளர்வதில்லை. இன்னொரு இடத்தில் தனக்கான நீதி கிடைக்கக் கூடும் என தேடிச் செல்கிறான்.பொருட் செலவு செய்கிறான்.ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறான்.ஆனால் நீதியின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையும் கைவிடுவதே இல்லை என்கிறார் எஸ்.ரா.


நாவல் முழுக்க வரலாற்று குறிப்புகளும்,தத்துவங்களும் நிரம்பி கிடக்கின்றன.


"எல்லா வெற்றிகளும் சந்தோசங்களும், துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கின்றன என்பது எவ்வளவு வேதனையானது. இவ்வளவுதானா மனித வாழ்க்கை. வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு மட்டும்தானா?"


"பிடிக்காத விஷயங்கள் தான் மனதில் ஆழமாக தங்கிவிடுகின்றன"


"அதிகாரத்தை ருசிக்க விரும்புகிறவன் கடவுளை ஏமாற்றவே முயற்சிக்கிறான்.அவன் மனக்குரல் கடவுளைச் சாந்திப்படுத்த என்ன செய்ய வேண்டும்.கடவுளிடம் எப்படி மன்னிப்புக் கேட்கவேண்டும் என கற்றுத்தருகிறது.ஆகவே கடவுள் அனுமதிக்கப்படாத குற்றங்களைச் செய்ய அவனை எந்த விசையும் தடுப்பதே இல்லை"


"எந்த ஒன்றிலாவது நீ முழுமையான அனுபவத்தை அடைந்திருக்கிறாயா?போரில்,பெண்களில்,உணவில் எதிலும் நீ முழுமையடையவில்லை சாப்பிடத் தெரியாத குழந்தை விருந்தில் கிடைத்த எல்லா உணவையும் அள்ளி வாயிலிட்டுத் துப்புவது போன்றதுதான் உனது வாழ்க்கை. நீ எதையும் அனுபவித்து அறிந்திருக்கவில்லை"


"அறிந்து செய்கிற குற்றத்தை விட மோசமானது ஒரு குற்றத்திற்கு தான் காரணம் என அறியாமலே இருப்பது"


"காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி அநீதிக்கு சமமானதே"


"எல்லா உண்மைகளும் பாதி உண்மைகள் தானே. முழு உண்மை யாராலும் அறிய முடியாது"


"தண்டனையால் மனிதர்கள் ஒருபோதும் நீதியை உணர்வதில்லை"


"மனிதரிடம் தவற்றை விரும்புகிறவர்கள்.தவறு தான் அவர்களுக்கு பாடமாக அமைகிறது ஆனால் தவறிலிருந்து அதிகம் கற்றுக் கொள்வதில்லை. தவறு செய்வது என்பது ஒரு சுகம். அதை அனுபவித்துப் பார்த்தால் இதில் விட முடியாது"


"கழுகும் கொசுவும் ஒரே வானில் பறந்தாலும் இரண்டும் ஒன்றில்லையே"


"கொல்வது எளிதானதில்லை. அதற்கு வலிமை இருந்தால் மட்டும் போதாது.பைத்தியக்காரத்தனம் தேவை"


"ஒருவனுக்கு தன்னைத் தவிர வேறு ஏமாற்றாத துணை ஏதிருக்கக்கூடும்"


"விளக்கின் இயல்பு வெளிச்சம் தருவது. இருள் மீதான பகையில் அந்த வெளிச்சம் உருவாவதில்லை."


இப்படி நிறைய அடிக்கோடிட்டு படிக்கக்கூடிய வரிகள் நாவல் முழுதும்.


எப்பொழுதுமே எளிய மனிதர்களைப் பற்றி தன் படைப்புகளின் வழியே பேசியும்,எளிய மனிதர்களுக்காகவும் எழுதும் எஸ்.ராமகிருஷ்ணன் இந்நாவலில் வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட எளிய மனிதர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட கதையை இடக்கை நாவல் என்ற பெயரில் தன் வலக்கையில் எழுதியுள்ளார்.


இடக்கை என்பது உடலில் ஒரு புறக்கணிப்பான உறுப்பு.அது எதற்கும் முன்னிலைப்படுத்தப்படுவதில்லை.அப்படி இந்த சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட தாழ்ந்த குலத்தில் பிறந்த தூமகேதுவின் துயர் குரலையே இடக்கை பதிவு செய்திருக்கிறது.


வரலாறு முழுக்க நீதி மறுக்கப்பட்டவர்களின் அவலத்தை வரலாற்று புனைவின் ஊடாக பதிவு செய்ததிலும்,அரசர்களுக்கு அரணாக இருந்த திருநங்கைகளைப் பற்றி பதிவு செய்ததிலும் இடக்கை நாவல் தமிழில் மிக முக்கியமான இலக்கிய ஆக்கம் எனலாம்///


Velu malayan

16.5.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்