தண்ணீர்

 ///அசோகமித்திரனின் தண்ணீர் நாவலை முன்வைத்து



அசோகமித்திரனின் படைப்புகளில் எனக்கு நெருக்கமான நாவல் என்று 18வது அட்சக்கோடு நாவலைச்  சொல்வேன்.


அதற்கு அடுத்ததாக நிச்சயம் தண்ணீர் நாவலைத் தான் சொல்வேன்.


புறத்தில் தண்ணீர் பிரச்சினைகளைப் பற்றி பேசக்கூடியதாக இருக்கும் இந்த நாவலின் உள் மடிப்பில் மூன்று பெண்களின் துயர் கதைகளை பேசியிருப்பார் அசோகமித்திரன்.


மனித உள் மனதின் இறுக்க உணர்ச்சிகளை தன் எழுத்துக்களில் பிரதிபலிப்பவர் அசோகமித்ரன்.


ஜமுனா,சாயா மற்றும் டீச்சரம்மா ஆகிய மூன்று பெண்களின் பின் உள்ள துயர் இழைகளின் பின்னலில் தான் நாவல் நகர்கிறது.


சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று ஜமுனாவை ஏமாற்றும் பாஸ்கர ராவ் கதாபாத்திரம் எதார்த்த சினிமா உலகில் உள்ள ஏமாற்று மனிதர்களின் ஒற்றை உருவத்தின் பிரதிபலிப்பாய் புனையப்பட்டுள்ளது.


திருமணமான பாஸ்கர ராவ் உடன் பழகும் ஜமுனாவுக்கு பின்னால் ஒளிந்துள்ள அங்கீகாரம் தேடும் ஏக்கம்,துயர் போலவே  15 வயதில்  நாற்பத்தைந்து வயதான தன் கணவனை மணக்கும் டீச்சரம்மா முதலிரவில் இருமல் வியாதி காரணமாக தன் கணவன் முடங்கிப் போவதால் தன் உடல் ஏக்கம் மறைத்து வாழ்வதின் பின் உள்ள துயர்,ராணுவத்தில் உள்ள கணவனுக்காக காத்திருக்கும் சாயாவின் துயர் என நாவல் பெண்களின் துயரை முன் நிறுத்துகிறது.


தற்கொலை செய்துகொள்ளலாம் என நினைக்கும் ஜமுனாவை டீச்சரம்மா தான் தன் கஷ்டங்களைச் சொல்லி ஜமுனாவின் மனதை மாற்றுகிறாள்.


தண்ணீர் இல்லாத காலங்களில் தெருக்கோடி வீட்டு அம்மாள் வீட்டில் தண்ணீர் பிடிக்க எல்லோரும் நிற்பார்கள்.கொஞ்ச நாளில் கார்ப்பரேசனிலிருந்து தண்ணீர் டாங்கியை தெருவில் வைத்து விடுகிறார்கள்.


இனி யாரும் நம் வீட்டிலும் தண்ணீர் பிடிக்க வரமாட்டார்கள்,நாம் யாரிடமும் தண்ணீர் அதிகமாக பிடிக்காதீர்கள்,தண்ணீர் அவ்வளவுதான் என அதிகாரம் செய்ய முடியாது என்ற வருத்தத்துடன் அந்த டாங்கியை தெருக்கோடி வீட்டு அம்மாள் பார்த்து செல்வதாக எழுதியிருப்பார் அசோகமித்திரன்.


இதில் சாயாவின் பாத்திரம் தைரியமாக,சமுதாயத்தில் தனித்தே கூட வாழலாம் என்ற மனதிட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.


பாஸ்கர ராவ் தன் அக்கா ஜமுனா வீட்டுக்கு வரும்போதெல்லாம் பாஸ்கர ராவை முடிந்த அளவுக்கு அவமானப்படுத்தி அடிக்கவும் செய்கிறார் சாயா.


ஐந்து ஆறு மாதத்துக்கு பிறகு ஜமுனா வசிக்கும் பகுதியில் கார்ப்பரேஷன் குழாயில் தண்ணி வருகிறது.குழாய் தண்ணீரில் சாக்கடை நீரும் கலந்து வருகிறது.அப்போது பாஸ்கர் ராவ் ஜமுனாவிட் தண்ணி வந்துடுச்சு போல என்று கேட்கும்போது,சாயா பாஸ்கர் ராவைப் பார்த்து சாக்கடைத் தண்ணீர் என்கிறாள்.


இந்த நாவலில் பெண்கள் தண்ணீர் தேடி அலைவதை போலவே தங்கள் வாழ்க்கையை தேடி அலைகிறார்கள்.



பாஸ்கர் ராவால் மூன்று மாதம் கர்ப்பம் அடையும் ஜமுனாவை பாஸ்கர் ராவ் திருமணம் செய்ய மறுத்து விடுகிறான்.


அப்போது சாயா பாஸ்கர்ராவ் ஆகியோருக்கு வாக்குவாதம் வந்து அவனை அடித்துவிடுவதால் அவன் அங்கிருந்து வெளியேறி விடுகிறான்.


அவனை வெளியே போக விடாமல் சாயா இழுக்கப்போகும் போது குழந்தைக்கு அப்பா அவன்தான்னுசொல்ல வைக்கலாம் இல்லையா? என்கிறாள் சாயா.

அவன் அப்பான்னு சொல்லிட்டா அவன் அப்பாவாயிட முடியுமா? அப்பா எதுக்கு?நம்மளுக்கு எல்லாம் அப்பா இருந்தாளா? என்கிறாள் ஜமுனா.

என்ன பேத்துற ஜமுனா என்பதற்கு ஏதோ நம்பறதுதானே? நம்மலைன்னா அதுக்கு என்ன பண்ண முடியும் என்கிறாள் ஜமுனா.


ஜமுனா ஏன் பாஸ்கர் ராவை நம்புகிறாள்.சாயா பஸ்கர் ராவை அடிக்கும் போது கூட போய் தடுக்கிறாள்.ஜமுனாவை தன் தங்கை சாயாவால் கூட புரிந்து கொள்ள முடியவதில்லை.


உண்மையில் அசோகமித்திரன் நாவல்களில் நீண்ட சிறுகதை வடிவத்திலான ஒரு நாவல் தண்ணீர் என்பேன்.


மனித மனங்கள்  உற்பத்தி செய்யும் மெல்லிய உணர்ச்சிகளை நுட்பமாக கவனித்து எழுத்தில் கொண்டு வருபவர் அசோகமித்திரன்.


நாவலில் ஓரிடத்தில் ஜமுனா ஒரு மாமியிடம் நாம் ஒரு நிமிஷம் மாதிரி இன்னொரு நிமிஷம் இருக்கிறோமா மாமி? என்பாள்.


அப்படி நிலையில்லாமல் மாறிக்கொண்டே இருக்கும் மனிதர்களை,மனித மனதின் உணர்ச்சிகளை நுட்பமாக சித்தரிக்கும் ஒரு நாவல் என தண்ணீரைக் கூறலாம்///


velu malayan

24.5.2021

❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்