ஒற்றன்

 ///அசோகமித்திரன் எழுதிய "ஒற்றன்" நாவலை முன்வைத்து



அசோகமித்திரன் படைப்புகளில்கரைந்த நிழல்கள் மற்றும் 18வது அட்சக்கோடு நாவல்களை இதற்கு முன் வாசித்திருக்கிறேன்.


அசோகமித்திரன் அவர்களின் எழுத்து என்பது தமிழில் ஒரு தனித்த நடை வகை கொண்டது.


கூர்நுண்ணுணர்வு கொண்ட வாசகர்கள் மட்டுமே அணுகக் கூடியவையாக இருப்பவை அவரது படைப்புகள். 


அசோகமித்திரன் படைப்புகளில் இருக்கும் எளிமை மேலோட்டமான வாசகனை திருப்தி கொள்ள செய்யாது.


அவரைப் போலவே அவரது படைப்புகளிலும் ஒரு மெல்லிய அமைதி இருக்கும்.


அவரது படைப்புகளில் எவ்வித பரபரப்பும்,வாசகனை வலிந்து திருப்தி செய்வதற்கான அலங்கார சொற்செட்டுகளும் இருக்காது.


அவரது கதைகளில் ஒரு கலை அமைதி இருக்கும்.


ஒரு எழுத்தாளனுக்கு வணிகப்பலனுக்கான எந்தவித உத்ரவாதத்தையும் கொடுக்காத தமிழ் இலக்கியச் சூழலில் வாழ்நாளெல்லாம் எழுதியே தன்னை கரைத்து கொண்டவர் அசோகமித்திரன்.எழுத்தை ஒரு அந்தரங்க தவமென கருதி வாழ்ந்தவர்.


பொது மந்தை மனநிலை வாசகர்களின் மனங்களை நிறைவாக்க பரபரப்பையும், பகட்டையும் தன் எழுத்தில் கூட்டி எழுதும் திருட்டுக்கலையை ஒருபோதும் அறியாதவர் அசோகமித்திரன்.


அதனால் தான் ஜெமினி வாசன் அசோகமித்திரனைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:


"மிக குறைவான மளிகை பொருட்களை வைத்துக்கொண்டு சிக்கனமாக சமைக்கும் கீழ் நடுத்தர குடும்பத்து தலைவியின் செய்கைகளை போன்றது அசோகமித்திரனின் எழுத்துக்கள்" என்று.


அன்றாட வாழ்வில் வரும் எளிமை மனிதர்களின் அவமானம்,அழுகை, உதாசீனங்களை போகிற போக்கில் தன் படைப்புகளில் எழுதிச் சென்றவர் அசோகமித்திரன்.


ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய  அனுபவங்களிலிருந்து கரைந்த நிழல்கள் நாவலில் திரைத்துறையில் இருக்கும் மனிதர்களின் அவலங்களை பேசியிருப்பார்.


18வது அட்சக்கோடு நாவலில் தன் பால்ய வயதின் நினைவுகள் வழியாக ஹைதராபாத் நிஜாம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு வழியாக நிகழ்ந்த மதக்கலவர நிகழ்வுகளை பேசியிருப்பார்.


கரைந்த நிழல்கள் மற்றும் 18வது அட்சக்கோடு ஆகிய இரண்டு நாவல்களுமே இலக்கிய நுட்பங்கள் நிறைந்த நாவல்கள் என்பேன்.


அவருடைய ஒற்றன் நாவலும் அப்படிப்பட்ட நாவல் தான்.எவ்வித வடிவங்களுக்குள்ளும் ஒடுங்காத நாவல் என ஒற்றன் நாவலைக் கூறலாம்.


இது ஒரு பயணக் கட்டுரைகளின் தொகுப்பு அல்லது அசோகமித்திரனின் அமெரிக்க அனுபவங்களின் திரட்டு எனலாம்.


ஆனால் ஒருவகையில் இதனை ஒரு பயண கட்டுரைகளின் நிறம் கொண்ட நாவல்  என எடுத்துக் கொள்ளலாம்.


அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பெயரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்கு சென்று அசோகமித்திரன் அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை புனை கதை வடிவில் எழுதியது தான் ஒற்றன் நாவல்.


நாவல் முழுக்க நாம் மேலோட்டமாய் உணர முடியாத ஒரு அங்கத உணர்வை அசோகமித்திரன் கடத்தி செல்கிறார்.


கண்ணாடி அறை எனும் 12வது அத்தியாயத்தில் அங்கத உணர்வு கொஞ்சம் வெளிப்படையாய் இருக்கும். 


என் வாயும்,மனமும் ஒரு சேர வெடித்து சிரிக்கும் அளவுக்கு அங்கத தொனியில் என்னைப் பெரிதும் கவர்ந்த புத்தகம் செல்வம் அருளானந்தம் அவர்கள் எழுதிய எழுதித்தீராப் பக்கங்கள் என்பேன்.


எழுதித் தீராத பக்கங்கள் புத்தகமும் ஒற்றன் நாவலைப் போலவே பயண அனுபவங்களை கட்டுரைகளாக கொண்ட நூல்.


ஆனால் அசோகமித்திரன் படைப்புகளில் அங்கதம் அப்படி வெளிப்படையாய் இருப்பதில்லை.


தன்னைக் கூவி எவருக்கும்  வெளிப்படுத்திக் கொள்ளாத ஒருவித ஞானக்கூச்சம் கொண்டவர் அசோகமித்திரன்.



அவர் உடலிலிருக்கும் நிதானமும், எளிமையும் அவர் படைப்புகளிலும் பிரதிபலிக்கும்.


அதனால்தான் நாவலில் ஒரு இடத்தில் "என் அறையில் எல்லா வசதிகளுடன் சவுகரியமாக இருப்பதே பெரும் பாவம் போலத் தோன்றியது" என்கிறார்.


ஒற்றன் நாவல்  ஒரு பயண புனைவு வகை நாவல் என்றாலும் இதில் கலாச்சார ஒவ்வாமைகள்,பல்வேறு நாட்டு மனிதர்களின் இயல்பான உணர்ச்சிகள்,அதன் இழப்புகள் ஆகியவற்றை துல்லியமான பார்வையில் பதிவு செய்திருக்கிறார் அசோகமித்திரன். 


நாவலில் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த  எழுத்தாளர் அபே குபேக்னா உடனான நட்பு,ஜப்பானின் கஜுகோ என்ற பெண்ணால் அவர்களின் நட்பில்  ஏற்படும் முரண் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த இலாரியா என்ற பெண்ணுடன் ஏற்படும் நட்பு மற்றும் அவளின் காதல் தோல்வி என நிறைய நாட்டு மனிதர்களுடன் உடனான உறவை நாவலில் பேசுகிறார்.


கைகடிகாரம் பழுதாகி விட்டதால் அமெரிக்காவின் கே- மார்ட் பகுதியில் வாங்கிய புதிய பேனா கடிகாரம் தொலைந்து விட்டதை தேடும் அத்தியாயம் ஒரு இழப்பிற்கான பதற்றத்தை நமக்கு கொடுக்கிறது.


கடிகாரம் இன்றி அவர் அவஸ்தையுறுவதை "ஒருவன் ஒழுங்காக உயிர் தரித்து இருப்பதற்கு பிராண வாயுவுக்கு அடுத்தபடி கடிகாரம் தான் என்கிறார்".


அசோகமித்திரன் படைப்புகளை வாசித்து முடிக்கும்போது வாசகனுக்குள் திருப்தியின்மை போன்ற ஒரு உணர்வு எஞ்சி நிற்கும் அதுதான் அசோகமித்திரன


ஒற்றன் நாவலில் பெரு நாட்டு எழுத்தாளர் பிராவோ என்பவனைப் பற்றி ஒரு வரி வரும் "இலக்கியத்தை ஒரு துல்லியமான தொழில்நுட்பமாக மாற்றியவன்" என்று.


உண்மையில் அந்த வரி அசோகமித்திரனுக்கு தான் பொருந்தும்.


தமிழ் இலக்கியத்தில் நுட்பமான வடிவ நடையை உருவாக்கியவர் அசோகமித்திரன் தான்.


ஒற்றன் நாவலும் அதுபோன்ற ஒரு வடிவ உத்தி கொண்ட நாவல்தான்.


அசோகமித்திரனின் படைப்புகளை வாசித்து முடிக்கும்போது வாசகனுக்குள் ஒரு திருப்தியின்மை போன்ற ஒரு உணர்வு எஞ்சி நிற்கும்.


அதுதான் அசோகமித்திரன் படைப்புகளின் பலமும்,பலவீனமும் என நான் கருதுகிறேன்.///


velu malayan

21.5.2021


❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்