பல நேரங்களில் பல மனிதர்கள்

 ///பாரதி மணியின் "பல நேரங்களில் பல மனிதர்கள்" நூலை முன்வைத்து



உண்மையில் ஒரு நல்ல நூலை  வாசித்த அனுபவத்தைக் கொடுக்கிறது இந்த நினைவு கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

அதுவும் 74 வயதில் ஒரு மனிதன் இதுவரை தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள்,தன் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு துணுக்குகளை தொகுத்து ஒரு நூலாக எழுதுகிறார் என்றால் உண்மையில் அந்த அனுபவங்கள் குறைந்த பட்சம் உண்மை கலந்தவையாகவும், சுவாரஷ்யமாகவும்

தான் இருக்கும்.அப்படித்தான் இருக்கிறது புத்தகம்.

பாரதி மணி அவர்கள் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கும் மேலாக டில்லியில் வாழ்ந்த தன் வாழ்பனுபவங்களை நினைவு கட்டுரைகளாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.

பாரதி மணி அவர்கள் அடிப்படையில் ஒரு மத்திய அரசின் பல்வேறு  பணிகளில் இருந்தவர்,நாடகக் கலைஞர்,சினிமா நடிகர்.

பாரதி மணி அவர்கள் எழுத்தாளர் கா.நா.சு வின் மருமகன்.

தமிழில் பாரதி படத்திலும் ரஜினி நடித்த பாபா,விக்ரம் நடித்த அந்நியன் படத்திலும் நடித்திருப்பார்.

இந்தியாவின் மிகப் பிரபல்யமான அரசியல் தலைவர்கள்,பர்மிய போராளி ஆங் சான் சூகி,பங்களாதேஷ் முன்னால் பிரதமர் ஷேக் ஹசீனா என எல்லோருடனும் அவர் பழகிய அனுபவங்களின் தொகுப்பு இந்நூல்.

இந்நூலின் முதல் கட்டுரையான "ராஜீவ் காந்தியின் பொறுமை" 1978ஆம் ஆண்டு எமர்ஜென்ஸிக்கு பிறகு நடந்த தேர்தலில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்த காலத்தில் ராஜிவ்காந்தி பயணித்த விமானத்தில் பாரதிமணியும் பயணம்  செய்த போது கூறும் நிகழ்வு அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்வை பதிவு செய்கிறது.

இத்தாலியிலிருந்து  டெல்லி விமான நிலையத்தில் இறங்கும் ராஜீவ்காந்தியை வேண்டுமென்றே மூன்று மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அவருடைய பெட்டிகளை சோதனையிட்டு சித்ரவதை செய்த போதும் ராஜீவ்காந்தி சிரித்துக்கொண்டே நின்றதையும்,விமான நிலைய அதிகாரியாக பணிபுரியும் தன்னுடைய நண்பன் ரங்கராஜனிடம் டேய் அவர் ஒரு முன்னாள் பிரதமரின் மகன் அவரை ஏன் இப்படி அவமானப் படுத்துகிறார்கள் என்று கேட்டதற்கு குறைந்தது இரண்டு மூன்று மணி நேரமாவது அவரை தாளித்து அனுப்ப வேண்டுமென்று மேலிடத்திலிருந்து உத்தரவு என்கிறார்கள் அதிகாரிகள்.

இந்த நிகழ்வுக்குப் பிறகும் இறைந்து கிடந்த துணிகளை கட்டி எடுத்துக்கொண்டு புன்னகை மாறாத முகத்துடன் ராஜீவ் காந்தி விமான நிலையத்தை கடந்து சென்றதை பதிவு செய்கிறார்.

21 வயது இளைஞனாக இருந்த பாரதி மணியின் தோள் மீது ஜவஹர்லால் நேரு கை போட்டு பேசியது,

பங்கபந்து என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானுடனான நட்பு,

1975 ஆம் ஆண்டு ஷேக் முஜிபுர் ரஹ்மான் சுட்டு கொல்லப்பட்ட பிறகு அவருடைய மகள் ஷேக் ஹசீனாவுக்கு இந்திராகாந்தி ஆதரவளித்து இந்தியாவில் தங்க வைத்த போது பங்களாதேசத்திலிருந்து ஹீல்ஸா மீன் கொண்டு வந்து ஷேக் ஹசீனாவுக்கு கொடுத்தது,

நோபல் பரிசு பெற்ற பர்மிய போராளியான ஆங் சான் சூகி டெல்லியில் படித்துக் கொண்டிருந்தபோது இரண்டு ஆண்டுகள் இந்தியாவில் அவர் தங்குவதற்கான குடிமை நீட்டிப்பு ஆணையை வாங்கி கொடுத்தது,

பூர்ணம் விஸ்வநாதன் அவர்களுடனான நாடக வாழ்க்கை நட்பு, 

1965ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை மலையாள படமான செம்மீனுக்கு கிடைக்க வேண்டுமென்று தான் ஜீரி கமிட்டி மெம்பர்களிடம் செய்த சிபாரிசு,

அண்ணா உடனும்,எம்ஜிஆர் உடனும் அவருக்கிருந்த நட்பு,

தமிழ் எழுத்தாளர்களானசுஜாதா,வெங்கட் சாமிநாதன், ஜானகிராமன், குஷ்வந்த் சிங் ஆகியோருடன் இருந்த நட்பு என ஏராளமான விசயங்களை பதிவு செய்கிறார் பாரதிமணி இந்த புத்தகத்தின் வழியே.

அணுசக்தி கழகத்தின் முதல் தலைவராக இருந்த விக்ரம் சாராபாயின் தங்கையான மிருதுளா சாராபாய் மீது நேருவுக்கு இறந்த Crush,

சர்தார்கள் பாகிஸ்தானிலிருந்து பாசுமதி அரிசியை இந்தியாவிற்கு கொண்டு வந்து பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் இந்தியாவை எப்படி முதல் இடத்திற்கு கொண்டு வந்தார்கள் என்பதையும்,

சர்தார்களின் கடின உழைப்பு,உதவும் குணம்,அவர்களின் இரட்டை அர்த்த ஜோக்குகள் என ஏராளமான நிகழ்வுகளின் கருவூலமாக இருக்கிறது இந்த புத்தகம்.



இந்த புத்தகத்தில் எனக்கு மிக பிடித்த கட்டுரைகள்

 "தில்லியின் நிகம்போத் சுடுகாடு"

 "தலைவர்களும் தனையர்களும்"

"பங்களாதேஷ் நினைவுகள்"

"சுஜாதா சில நினைவுகள்"

"அன்னை தெரசா"

"நான் வாழ்ந்த திருவிதாங்கூர் சமஸ்தானம்"

"சிங் இஸ் கிங்"ஆகியவைகள் தான்.

தனிநபர்கள் சார்ந்த வரலாற்று துணுக்குகள் வழியாக இந்நூல் நம்மை பழைய காலகட்டத்திற்கு மனதை பயணிக்க வைக்கிறது.

வாசிக்க வேண்டிய ஒரு நல்ல புத்தகம்.///

velu malayan

23.5.2021

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

வீடில்லா புத்தகங்கள்