வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள்

 ///வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் நூலை முன்வைத்து



1997ஆம் ஆண்டு வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல வனவிலங்கு புகைப்பட காரர்களான கிருபாகர் - சேனானி இருவரும் வீரப்பனுடன் காட்டிலிருந்த அனுபவங்களை "Birds,Beasts and Bandits:14 days with Veerappan" என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய நூலினை எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் தமிழில் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்.


பொதுவெளியில் வீரப்பனைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களிலிருந்து வீரப்பனின் வேறு பக்கத்தை இந்த புத்தகம் பதிவு செய்கிறது.


வனவிலங்கை படம் பிடிக்கும் கிருபாகர் - சேனானி இருவரும் பெரிய காட்டிலாகா அதிகாரிகள் என நினைத்து வீரப்பன் கடத்தி விடுகிறான்.


இவர்களுடன் பெங்களூரில்  விஞ்ஞானியாக இருக்கும் வங்காளத்தைச் சேர்ந்த சத்யவிரத மைத்தி என்ற விஞ்ஞானியையும், ராஜு மற்றும் பாஷா என்ற இரு தொழிலாளர்களையும் கடத்தி விடுகிறான்.


14 நாட்கள் காட்டில் வீரப்பனுடன் இருந்த இந்த அனுபவ பதிவு நூலில் கொலைகாரன்,கடத்தல்காரன் எனக்கூறப்படும் வீரப்பன் சேனானியிடம் நீ இறந்துபோன என் தம்பி அர்ஜுனனைப் போல இருக்கிறாய் என சொல்லி கண் கலங்குகிறான்.


சந்தன மரம் வெட்டுபவன், யானையின் தந்தங்களை திருடுபவன்,காட்டை அழிப்பவன் என வெளி உலகில் பேசப்படும் வீரப்பன் உண்மையில் காட்டை நேசிப்பவன்,பிறர் திருடும் தந்தங்களுக்கும் தான் பழி சுமப்பவன் என இந்நூல் பதிவு செய்கிறது.நான் யானைகளை கொல்வதை நிறுத்தி பல வருஷங்களாகி விட்டது  சொன்னால் யாரும் நம்புவதே கிடையாது என்கிறான் வீரப்பன்.


தாங்கள் ஒரு கொடிய மனிதனான வீரப்பனால் கடத்தப்பட்டுள்ளோம் என்ற பிரக்ஞை இல்லாமல் வீரப்பனுடைய விருந்தினர்கள் போலவே கிருபாகரும்,சேனானியும் வீரப்பனுடன் உரையாடுகிறார்கள்.


காட்டில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை போலவே அச்சு அசலாக குரல் எழுப்பும் திறன் வீரப்பனுக்கு இருக்கிறது. காட்டினுடைய அத்தனை சூட்சுமங்களும்,மர்மங்களையும் அறிந்தவன் வீரப்பன் என்கிறார் சேனானி.


தாங்கள் கடத்தப்பட்டு உள்ளோம் என்ற பரபரப்பும்,பயமும் மனதின் உள்ளே இருந்தாலும் ஒரு மெல்லிய பகடி கலந்த தொனியில் தங்களுடைய அனுபவத்தை எழுதியுள்ளார்கள் கிருபாகரும், சேனானியும்.


லாங்கூர் குரங்கு கறி,மான்கறி என வீரப்பன் கூட்டாளிகளுடன் விருந்து உண்கிறார்கள் கடத்தப்பட்ட அனைவரும்.


வீரப்பனின் முக்கிய கூட்டாளிகளான சேத்துக்குளி கோவிந்தன், அன்புராஜ்,மாதேஷ் மற்றும் ரங்கசாமி ஆகியோர்களைப் பற்றி நெருங்கி பதிவு செய்கிறது இந்நூல்.


14 நாட்களுக்கு பிறகு கடத்தப்பட்ட 5 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.


விடுதலை செய்யப்பட்ட பம்ப் ஆப்பரேட்டர்  ராஜீவின் மனைவி அய்யோ அந்த வீரப்பன் இவன எதுக்கு விடுதலை செஞ்சானோ தெரியலையே?நான் என்ன பாவத்தை செஞ்சேன் அவன் வீடு விளங்காமல் போவ என சாபமிடுகிறாள்.இனி குடிச்சிட்டு தினமும் வந்து என்னை அடிப்பானே  என புலம்பும் இடம் இடிந்து நம்மை சிரிக்க வைக்கிறது.


வீரப்பனைப் பற்றி நிறைய புத்தகங்கள்,நிறைய சினிமாக்கள் எடுக்கப்பட்டுள்ளது.ஆனால் நாம் இங்கு இதுவரை அறியாத வீரப்பனின் இயல்பான பக்கத்தை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது.


பத்திரிக்கைகள் தொலைக்காட்சி செய்திகள் போன்றவற்றில் இயல்புக்கு மாறாகவே வீரப்பனைப் பற்றி பிம்ப்படுத்தப்படுகிறது என்பதை இந்நூலின் வழியாக நாம் அறியலாம்.


துப்பாக்கி முதுகில் வைத்து எங்களை கடத்திய வீரப்பனின் கூட்டாளிகள் நாங்கள் விடுதலையாகி  அவர்களை பிரியும் போது ரங்கசாமியும் மாதேசும் அழுவதைப் பார்த்து "சிரிப்பும் பகையும் ஒரே இதயத்தின் வெளிப்பட்டு முறைதான்" என யாரோ சொன்னதை நினைத்துக்கொள்கிறார்கள் கிருபாகரும்,சேனானியும்.


இந்த புத்தகத்தை வாசிக்கும்போது காட்டில் நாமும் வீரப்பனுடன் பயணப்படும் உணர்வை தருகிறது இந்நூல்.


வீரப்பன் நிறைய பேரை கொலை செய்தவனாக இருந்தாலும் அவனின் இயல்பான இன்னொரு பக்கத்தை பதிவு செய்வதால் இந்நூல் மற்ற வீரப்பனைப் பற்றிய நூல்களிலிருந்து மாறுபட்டு நிற்பதால் வாசிக்கலாம்///


Velu malayan

20.5.2021


❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்