அனார்யா(Akkarmashi)

 ///சரண்குமார் லிம்பாலே எழுதிய அனார்யா(Akkarmashi)நூலை முன்வைத்து



இந்தியாவில் ஒரு தலித்தாக வாழ்வதில் உள்ள சிக்கலை நீங்கள் ஒரு தலித்தாக இருந்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். 


எனக்கு முன்பு நண்பனாக இருந்த இடைநிலைச் சாதியைச் சார்ந்த  ஒருவன் தலித்துகளுக்கு இப்போது என்ன பிரச்சனை? நல்ல கல்வி கிடைக்கிறது,அதன் மூலம் நல்ல வேலை கிடைக்கிறது.எல்லா விதத்திலும் வளர்ந்து ஒரு நிலையை எட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

பின் ஏன் எங்களை ஆண்டார்கள், அடிமைப்படுத்தினார்கள் என்று பிலாக்கணம் பாடி புலம்புகிறீர்கள் என்றான்.


அவன் கூறியது போலவே தலித்துகள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.ஆனால் அப்படி கல்வியும், வேலையும் கிடைத்தும் கூட ஒரு தலித்தை இந்த சாதிய கட்டமைப்பில் இயங்கும் பொது சமூகம் எப்படி பார்க்கிறது,அவனை எப்படி அணுகுகிறது என்பதை ஒரு தலித்தாக நான் அறிவேன்.


கடந்த ஆண்டு அரூர் திரு.வி.க நகரில் நான் வாடகைக்காக வீடு தேடிக்கொண்டிருந்த போது ஒரு வீடு காலியாக இருந்ததை வீடு காட்டும் தரகரின் மூலம் அறிந்து அந்த வீட்டின் உரிமையாளரை நானும்,தரகரும் அணுகிய போது அவர் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவராக இருந்தார்.


நான் தீர்த்தமலை பள்ளியில் பயின்று கொண்டிருந்த போது எனக்கு ஆசிரியராக இருந்தவர் அவர்.


வீடு வாடகைக்கு வேண்டும் என்று நான் அவரிடம் கூறியபோது வீடு இப்போதைக்கு யாருக்கும் வாடகைக்கு விடுவதில்லை என்று நாகரிகமாக கூறிவிட்டார். 


பிறகு நான் வேறு வீடுகளை பார்க்க சென்று விட்டேன்.ஒரு இரண்டு மூன்று நாட்கள் கழித்த பிறகு வீடு பிடித்துக் கொடுக்கும் அந்த தரகர் சார் அன்றைக்கு வீடு பார்க்க போயிருந்தோமே உங்களுக்கு கூட வாத்தியாராக இருந்தார் என நீங்கள் சொன்னீர்களே அவர் என்னிடம் ஏன் அன்பழகா நல்ல ஆளுங்களை பார்த்து கூட்டினு வரமாட்டயா. காலனிக்காரங்களத்தான் கூட்டினு வருவியா என்று என்னிடம் பேசினார் என்று அந்த தரகர் என்னிடம் கூறினார்.இப்படித்தான் இருக்கிறது இன்றைய  சாதியமுறை.


இப்ப எல்லாம் யாரு சாதி பாக்குறாங்க என சொல்பவனின் வாயில எங்க ஊரு பொம்பளைங்க சாண்ட புடிச்சி தான் ஊத்தனும்.


முற்போக்கு பேசி,தீவிர இலக்கியம் வாசிக்கக் கூடிய  இடைநிலை சாதிய பெருமிதமும்,இறுமாப்பும் கொண்ட நண்பன் சொன்னது போல என்னிடம் நல்ல கல்வியும்,ஒரு வேலையும்,அதன் மூலம் கிடைக்கக் கூடிய சிறிது பொருளாதாரமும் இருக்கிறது.ஆனாலும் இது எல்லாம் இருந்தும் அவன் என்னை நிராகரிக்கின்றான். எனக்கு வீடு தர மறுக்கிறான்.


எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்கள் எழுதிய "நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்" என்ற சிறுகதை தொகுப்பு நூலில் "காக்கை குருவி எங்கள் சாதி" என்ற ஒரு சிறுகதை உண்டு.


அந்தசிறுகதையில் வரும் ஒருவன் தலித் அல்ல.அவன் ஒரு இடைநிலை சாதியை சேர்ந்தவன்.அண்ணல் அம்பேத்கர் மீது தீராத பற்று கொண்டவன்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புத்தகங்களையும், படங்களையும் தன் வீட்டில் வைத்துள்ளதால் சாதிய இந்துக்களால் நெருக்கடி கொடுக்கப்பட்டு வீடு காலி செய்ய வைக்கப்படுகிறான். பின் அவன் வீடு தேடி அலைந்து கடைசியில் அம்பேத்கர் நகரில் குடியேறுவதாய் அந்த சிறுகதை முடியும்.


ஒரு குறிப்பிட்ட சமூகம் தவறானது, வன்முறையானது என்ற பொது எண்ணத்தை சாதிய சமூகம் வகுத்து வைத்துள்ளது.


இந்தியாவில் உண்மையில் உடைமை,உயிர் ரீதியாக அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகள் தான்.


பள்ளியில் படிக்கும் போதும்,வேலை செய்யும் இடங்களிலும் சாதிய தாழ்வுணர்ச்சியிலும்,அவமான  உணர்ச்சியிலுமே ஒரு தலித்தாக பிறந்தவன் வாழ வேண்டியிருக்கிறது.


அரசியல்,அதிகாரம் எல்லாவற்றிலுமே இங்கே சாதி தான் நிரம்பியுள்ளது.


இப்போது எல்லாம் யார் சார் சாதி பார்க்கிறார்கள்,யார் சாதிபார்த்து பழகுகிறார்கள் என்று பொது சமூகத்தின் வாயிலிருந்து மேற்கண்ட பொதுக்கூற்று  ஒன்று உலவுவது உண்டு.


மேற்கண்ட கூற்றில் பாதி உண்மையும் பாதிப் பொய்யும் உண்டு.இப்போது சாதியும் பார்க்கிறார்கள் நன்றாக பழகவும் செய்கிறார்கள். 


இது எல்லோருக்குமே பொருந்துமா என்றால் இல்லை என்று நான் கூறுவதற்கு என்னுடன் இன்றும் இணக்கமாக பழகும் நிறைய சாதிய பார்வையற்ற இடைநிலை சாதியைச் சேர்ந்த நண்பர்கள்  உண்டு.


முன்பெல்லாம் பெயருக்கு பின்னாடி தீர்த்தகிரி கவுண்டர், நடேச முதலியார் என ஒட்டிக்கொண்டிருந்த சாதியும்,சாதி பெருமையும் இப்போது மனித மனங்களில் ஒட்டிக் கொண்டுள்ளது அவ்வளவு தான் வித்தியாசம்.


பொது சமூகம் எப்பொழுதுமே தலித்துகளின் மீது ஒரு மன விலக்கத்தை கொண்டுள்ளது.


அவர்களை தங்களுக்கு சரி சமமாக கருத மறுக்கிறது.அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் தள்ளி நின்று மௌனித்து மனதில் வேடிக்கை பார்க்கிறது.


அதற்குக் காரணம் தீண்டத்தகாதவர்கள் என்று தங்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பயன்படுத்தி ஓரளவுக்கு நிறைவான வாழ்க்கையை வாழ முயல்வதை சாதி இந்துக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.


ஒரு காலத்தில் சாதி இந்துக்களுக்கு தாங்கள் செய்து வந்த கீழ்த்தரமான வேலைகளைச் செய்வதற்கு இப்போது தலித் மக்கள் தயாராக இருக்கவில்லை.


பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விலங்குகளைப் போல வாழ்ந்து வந்த தலித் மக்கள் இப்போது தங்களுக்கு சமமானவர்களாக வாழ்வதை உயர் சாதி இந்துக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


பாட்டீல் என்ற உயர் சாதிய மனிதனுக்கும்,மஹர் என்ற தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் பிறந்த சரண்குமார் லிம்பாலே என்பவரின் தன்வரலாற்று நூல் தான் அனார்யா.


1984 ஆம் ஆண்டு மராட்டிய மொழியில் Akkarmashi என்ற பெயரில் சரண்குமார் லிம்பாலேவினால் எழுதப்பட்ட இந்த நூல்  மராட்டிய தலித் இலக்கியத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்.


Akkarmashi என்றால் அரை சாதிக்காரன் என்று பொருள்.


நான் இதுவரை வாசித்த தலித் தன் வரலாற்று நூல்களில் எனக்கு மிகவும் நெருக்கமானவை என்று தமிழில் பாமாவின் கருக்கு, ராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம் மற்றும் கன்னடத்தில் அரவிந்த் மாளகத்தி எழுதிய கவர்மெண்ட் பிராமணன் ஆகிய மூன்று நூல்களையும் குறிப்பிடுவேன்.அந்த வரிசையில் சரண் குமார் லிம்பாலே எழுதிய அனார்யா(Akkarmashi) நூலும் சேர்கிறது.


இதற்கு முன் சரண்குமார் லிம்பாலேவின் "தலித் பார்ப்பனன்"என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன்.


பெரும்பான்மையான தலித் தன் வரலாற்று நூல்கள் பேசுவது தலித்துக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள்,அநீதிகள் போன்ற தேய்வழக்கான(Cliche) ஒன்றை என்றாலும்,அனார்யா

மிக மிக உண்மை ஊற்றி எழுதப்பட்ட ஒரு தன் வரலாற்று நாவல்.


உண்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்டு எழுதப்பட்டது தான் இந்நூலின் பலம்.


உடல் ரத்தத்தில் ஒரு பாட்டீல் சாதிய காரனாகவும்,வளர்ப்பில் ஒரு மஹர் சாதிக்காரனாகவும் ஒரு அரைச் சாதிக்காரனாக வாழ்ந்த அவஸ்தை, அவமதிப்பு, அவருக்கும் அவர் சார்ந்த மஹர் சாதி மக்களுக்கும் நிகழ்ந்த அநீதி ஆகியவற்றை நிஜத்தன்மையுடன் எழுதியுள்ளார் சரண் குமார் லிம்பாலே.


இந்தியாவின் எந்தப் பகுதியில் பிறந்த ஒரு தலித்தாக இருந்தாலும் இந்த நூலை வாசிக்கும் போது தன் வாழ்க்கையை தன்னுடைய வலியை, தன்னுடைய அவமானத்தை,தனக்கு நேர்ந்த அநீதியை இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் நிச்சயம் உணர்வான் என்பது தான் இந்நூலின் பெரும் பலம் என கருதுகிறேன்.



தன் தாய் மற்றும் பிற மஹர் சாதிப் பெண்கள் அனைவரும் உயர் சாதிய பாட்டீல் சாதி ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்வதை சுட்டிக்காட்டுகிறார்.


சரண்குமார் லிம்பாலேவின் தாய் தன்னை  ஹனுமந்தா லிம்பாலே என்பவனுக்கு பெற்றதையும், தனக்கு பிறகு தன் தாய் 4 பேரை காகா என்ற பாட்டீலுக்கும் பெற்றதையும் பதிவு செய்கிறார்.


தங்களுடைய குடும்ப வறுமையை போக்க சாராயம் விற்றதையும்,

மாட்டு சாணத்தில் செரிக்காமல் இருந்த தானியங்களையும் அரைத்து தின்றதை பதிவு செய்கிறார் லிம்பாலே.


படித்து பட்டம் பெற்று அகமத்பூரில் தபால் தந்தி அலுவலகத்தில் வேலையில் சேரும் சரண்குமார் லிம்பாலே தான் குடியிருக்கும் இடத்தில் தான் ஒரு தலித் என்பதை காட்டிக்கொள்ளாமல் வாழ்கிறார்.


அப்படிதான் தலித் என்று தெரிந்தால் தனக்கு யாரும் வீடு கொடுக்க மாட்டார்கள் என்று தன்னிடம் உள்ள அம்பேத்கர் புகைப்படங்கள் அம்பேத்கர் பற்றிய புத்தகங்களை எல்லாம் பொட்டியில் வைத்து பூட்டிவிட்டு காண்டேகரின் புத்தகங்களை வாசிக்கிறார் என்று கூறும் இடத்தில் உண்மையில் தலித்துகளுக்கு எவ்வளவு பாதுகாப்பற்ற,ஒரு அந்நியப்பட்ட நாடு இந்தியா.


பிறப்பிலிருந்தே  ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் வளர்ந்த ஒருவன் தன் அடையாளத்தை மறைத்து தான் அவமானப்படக் கூடாது என பொது சமூகத்துடன் சேர்ந்து வாழ தான் ஒரு தலித்தாக வாழ்ந்தாலும் ஒரு தலித் பார்ப்பனனைப் போல் வாழ்ந்தேன் என்று நேர்மையாக பதிவு செய்கிறார் லிம்பாலே. 


அறிவாசான் அம்பேத்கர் பிறந்த மண்ணில்,அம்பேத்கர் பிறந்த மஹர் சாதியில் பிறந்தவர் சரண்குமார் லிம்பாலே. அண்ணல் அம்பேத்கர்  என்னை சக மனிதானாக கருதாமல், என்னை தாழ்த்தப்பட்டவனாக கருதும் தேசம் எப்படி என் தேசம் ஆகும் என்றார்.அதையே தான் சரண்குமார் லிம்பாலேயும் இவ்வாறு பதிவு செய்கிறார்.


"கடவுள் மனிதர்களுக்கிடையில் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறார்.

அவர் ஒரு மனிதனை பணக்காரனாகவும் மற்றவனை ஏழையாகவும் படைக்கிறார்.

ஒருவனை உயர்சாதி காரணமாகவும் மற்றவனை தீண்டத்தகாதவனாகவும்  படைக்கிறார்.


மனிதர்கள் ஒருவரையொருவர் வெறுக்கும்படி செய்த கடவுள் எப்படிப்பட்டவர்? 


நாங்கள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்று கருதப்படுகிறோம். 

அப்படியானால் நாங்கள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறோம்? 


இந்த கடவுளையும்,இந்த மதத்தையும் இந்த நாட்டையும் எங்களால் அங்கீகரிக்க முடியாது. 

ஏனெனில் நாங்கள் ஒதுக்கி வைக்கப்படுவதற்கு இந்த கடவுளும், இந்த மாதமும்,இந்த நாடும் தான் காரணம்"


இது போன்ற  ஒரு தலித்தின் வாழ்க்கை அவலங்கள் பற்றிய நூல் பொது சாதிய சமூகத்திடம் வேண்டுவது தலித்துகளை நோக்கிய உங்கள் கருணையையோ, கண்ணீரையோ,பரிவையோ அல்ல.

ஒரு திறந்த உரையாடலை.சக மனிதனை சமமாக எண்ணும் மன அளவுகோலை.


தலித் தன்வரலாற்று நூல்களில் ஒரு நேர்மையான ஆக்கம் அனார்யா (அக்கர் மாஷி)////


velu malayan

11.5.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்