இலட்சிய இந்து ஓட்டல்

 இலட்சிய இந்து ஓட்டல்



விபூதி பூசன் வந்தோபாத்தியாவின் மிகச்சிறந்த நாவல்களில் இலட்சிய இந்து ஓட்டல் முதன்மையானது என்பேன்.ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான நம்பிக்கையின் கதை.அவனைச் சுற்றிய நல்ல மனம் கொண்ட பெண்களின்  கதை.


மனதில் எந்தவித மலினமான எண்ணங்களும்,தன்னை அவமானப்படுத்தியவர்களையும்,வஞ்சித்தவர்களையும் வாய்ப்பு கிடைத்தால்  பழி வாங்கலாம் என்ற எந்த மனக் குரோதமும் இல்லாத ஹஜாரியின் பாத்திரம் மனித மாண்பின் உச்சம்.


உண்மையும்,உழைப்பும்,நேர்மையும் இருந்தால் ஒருவனுடைய பயணமும் லட்சியமும் தடைபடாது என்பதை ஹஜாரி பாத்திரத்தின் வழியாக முன் வைக்கிறார் விபூதி பூஷன்.

தன்னை மறைத்துக் கொள்ளாமல் எளிமையையும் நேர்மையும் அன்பையும் வெளிப்படுத்தும் மனிதர்களுக்கு நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள்.தனியாக ஒரு ஓட்டல் வைக்க வேண்டும் என்ற ஹஜாரியின் லட்சியத்திற்கு பணம் கொடுத்து உதவும் அதஸி(ஜமீன்தார் மகள்),குஸீமா, சுவாஷினி(இடையர் குல பெண்கள்) ஆகிய மூன்று பெண்களின் பாத்திரம் அவ்வளவு அசல் தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது.


எளிய மனிதர்களின் சின்ன வாழ்க்கையும் சிறிய லட்சியத்தையும் எந்த வித அலங்கார பேச்சும் ஆபரண பூச்சும் இல்லாத ஒரு எழுத்தில் மிக பிரம்மாண்டமாக காட்டும் கலை வல்லமை விபூதி பூஷனின் எழுத்துக்களில் உள்ள பெரும்பலம் என்பேன்.


யார் மீதும் எந்த பொறாமையும் இல்லாமல் தன்னை வஞ்சித்தவர்களை வஞ்சிக்க வாய்ப்பு இருந்தும் அவர்களை வஞ்சிக்காமல் இருக்கும் ஒரு குழந்தைமை மனம் கொண்ட ஹஜாரியின் பாத்திரம் அசடன் நாவலில் வரும் மிஷ்கினின் பாத்திரத்துடன் ஒப்பிடக் கூடியது.


பத்மா எனும் பெண்ணின் பாத்திரம் அவ்வளவு எரிச்சலையும் கோபத்தையும் நமக்கு உருவாக்கக்கூடிய அளவுக்கு உருவாக்கியுள்ளார்.


ஓட்டல் முதலாளிகளாக வரும் பேச்சூ சக்கரவர்த்தி,ஜகதீஷ் பாண்ட்டுஜ்ஜே போன்றவர்களின் பாத்திரங்கள் ஒரு சராசரி ஓட்டல் முதலாளிகளுக்கே உண்டான குணாதிசயத்துடன் உருவாக்கியுள்ளர்.


சூர்ணி ஆற்றங்கரையும் அங்குள்ள வேப்ப மரம்,ராணாகட் ரயில்வே நிலையம் ஆகியவை கூட மனதில் நிலைக்கும் நிலப் பாத்திரங்களாக நமக்குள் நின்று விடுகிறது.




கல்கத்தா மக்கள் பயன்படுத்தும் உணவுகளான சந்தேஷ்(இனிப்புப் பண்டம்),மீன் வகைகள் போன்றவை அந்த மக்களுக்கான உணவுகளாக நாவலில் முன் வைக்கப்படுகிறது.


வனவாசி நாவலில் காட்டின் ரகசியத்தையும் அழகையும்,நெருங்கி வரும் இடியோசை நாவலில் பஞ்சத்தின் கொடூரத்தையும் காட்டிய விபூதி பூஷன் லட்சிய இந்து ஓட்டல் நாவலில் ஒரு எளிய சமையல்காரனின் நேர்மையையும் அவனுடைய வளர்ச்சியையும் கலைப் பண்பும் மனித மாண்பும் கொண்டு அவனுடைய உலகை கண் முன் காட்டுகிறார்.

Comments

Post a Comment

Popular posts from this blog

ஜனநாயகச் சோதனைச் சாலையில்