ஆக்காண்டி-வாசு முருகவேல்
ஆக்காண்டி-வாசு முருகவேல்
ஈழ இலக்கியம் என்றாலே சிங்களவர்கள் ஈழத்தமிழர்களை கொன்றொழித்த இன அழிப்பு குறித்து மட்டுமே எழுதப்படும் என்பது எல்லோருக்குமான ஒரு மேலோட்டமான பார்வை.
தமிழீழ விடுதலைக்காக உருவான தமிழ் இயக்கங்களுக்கு இடையேயான முரண்கள்,ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த நிலமிழந்து அலையும் அலைகழிப்புகள்,ஓலங்கள்,ஒப்பாரிகள் என நிறைய ஈழ இலக்கியங்கள் சிறுகதை வடிவிலும் நாவல் வடிவிலும் ஷோபா சக்தி,சயந்தன்,குணா கவியழகன் போன்றவர்களால் பாரிய கோணங்களில் எழுதப்பட்டுள்ளது.
வாசு முருகவேலின் ஆக்காண்டி நாவல் இலங்கை தமிழ் இஸ்லாமியர்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையேயான முரணைப் பேசுகிறது.சோனகர்கள் எனப்படும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் இலங்கை ராணுவத்துக்கு அனுசரணையாக இருந்து தமிழர்களின் உடைமைகளை அபகரித்து கொடுமைப் படுத்தினார்கள் என்ற தொனியில் நாவல் நிறைய நிகழ்வுகளை பதிவு செய்கிறது.
அதிகாரமும் சூழ்ச்சியும் கொண்ட சிங்கள ராணுவம் இஸ்லாமியர்களுக்கும்,
தமிழர்களுக்கும் இன முரணையும் பகையையும் ஊதிப் பெருக்கியது என்பதை நாவலின் மையமாக கொள்ளலாம்.
நாவலின் 87 வது பக்கத்தில்
"இலங்கையின் முப்படை தலைவரையே அடிபணிய வைக்கும் பிக்கு வாழ்க்கையை யார்தான் விரும்பாமல் இருக்க முடியும்.
இலங்கையின் வரலாற்றில் புத்தரை விட அதிகார ஆசை கொண்டவர்கள் யாரும் இருந்ததில்லை" என்ற வரிகள் வரும்.மதமும், அதிகாரமும் வேறு வேறு அல்ல.மதம் அதிகாரத்தையே அடிபணிய வைக்கிறது.உலகில் உள்ள அத்தனை அதிகாரங்களும் ஆட்சி பீடங்களும் மதத்தின் போர்வையில் உள்ளவை தான்.
எல்லா மதங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.மனிதர்களின் நல்லதற்கு என உருவாக்கப்பட்டவை பின்னாளில் அவர்களை கட்டுப்படுத்தியும்,பிறர் மதத்தினரை வெறுக்கவும் வெட்டிக் கொள்ளவும் வளர்ந்து நிற்கிறது.
புத்த மதம்,இஸ்லாம் மதம்,கிறிஸ்தவ மதம் என எல்லா மதங்களின் மீதும் ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது ஆக்காண்டி நாவல்.
ஆப்கானில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலைகளை இஸ்லாமிய மதத்தலைவர்களும் தலிபான்களும் தான் வெடி வைத்து உடைத்தார்கள்.
இலங்கையில் கடந்த காலங்களில் கிறித்துவ ஆலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தீவிர வாத அமைப்புகள் தான் காரணம் என்ற சமகால வரலாற்றையும் நாவல் பதிவு செய்கிறது.
கொஞ்சம் பிசகி பார்த்தால் இஸ்லாமிய வெறுப்பு பார்வை கொண்ட நாவல் என்று தவறாக புரிந்து கொள்ளக் கூடிய நாவலை அதிகாரம்,அடிப்படைவாதம் எப்படி செயல்படுகிறது என்பதை ஒரு தரப்பாக இல்லாமல் புனைவும் வரலாறும் கலந்து முன்வைக்கிறார் வாசு முருகவேல்.
ஒருவரின் துயருக்கு நாம் ஆறுதல் சொல்லலாம்.ஆனால் அந்த ஆறுதல் ஒருபோதும் அந்த துயருக்கு பதிலாக இருந்து விடுவதில்லை என்று சொல்லும் வாசு முருகவேலின் வார்த்தைகள் தான் ஈழத் தமிழர்களின் துயருக்கான உலகின் வார்த்தைகளும்.
ஆக்காண்டி,ஆக்காண்டி
எங்கே முட்டை வைத்தாய்?
கல்லைக்குடைந்து கடலோரம்
முட்டை வைத்தேன்.
ஆக்காண்டி குருவி அல்ல.அது இழப்பின்,வலியின் குறியீடு.
கச்சிதமான மொழியில்,கச்சிதமான பக்கங்களில் ஈழப்போருக்கு பின் உள்ள அரசியலை,அடிப்படை வாதத்தை ஆக்காண்டி நாவல் அகல பேசுகிறது.
Velu malayan
12.10.2024
Comments
Post a Comment