ஜனநாயகச் சோதனைச் சாலையில்
///ஜெயமோகன் எழுதிய ஜனநாயகச் சோதனைச்சாலையில் நூலை முன்வைத்து
ஜனநாயகம் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளவும்,இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மக்கள் மனதில் ஆழ ஊன்றி வைத்துள்ள வாக்கரசியல் உளவியலை புரிந்து கொள்வதற்குமான ஒரு மிகச் சிறந்த கையேடு இந்த புத்தகம்.
அரசியல் கட்சிகள் நடத்துபவர்களின் பித்தலாட்டங்கள்,ஊழல்,மக்களை வாக்கு மந்தைகளாகவே வைத்திருக்க அவர்கள் செய்யும் தந்திரங்கள் போன்றவற்றை எளிய வாசகனும் எளிதில் அணுகக்கூடிய பார்வையில் எழுதியிருக்கிறார் ஜெயமோகன்.
என் சொந்த சாதிக்காரனுக்குத் தான் நான் வாக்களிப்பேன்.என் சொந்த மதத்தைச் சேர்ந்தவனுக்குத்தான் நான் வாக்களிப்பேன் என்ற உளவியலை ஒவ்வொரு இந்திய வாக்காளனின் மனதில் உருவாக்கி வைத்திருக்கிறது அரசியல் கட்சிகள்.
அப்படி சுயசாதி காரனுக்கும்,சுய மதத்தை சேர்ந்தவனுக்கும் வாக்களிக்க நினைக்கும் ஒரு வாக்காளனின் மனநிலை இந்த புத்தகத்தை படித்தப் பிறகு மாறலாம்.
சமூக ஊடங்கள் செய்யும் பொய் பரப்பும் தன்மை,விவாத நிகழ்வுகள் என்ற பெயரில் அவர்களே செய்யும் ஜோடிப்பையும்,நடிப்பையும் ஜெயமோகன் இந்நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
நமக்கு வழங்கப்பட்ட ஜனநாயக கடமையை நாம் சரியாக பயன்படுத்தாமல்,தவறான மனிதர்களை தேர்தல் அரசியலில் தேர்ந்தெடுத்து விட்டு அரசியல்வாதிகளையும் ஆட்சியாளர்களையும் குறை சொல்கிறோம்.அந்த குறையை உருவாக்கியவர்களே நாம்தான்.
நம்முடைய அறியாமை,நம்முடைய அலட்சியம்,நம்முடைய சுயநலம் தான் ஜனநாயகத்தை சரியாக பயன்படுத்த முடியாமல் போனதற்கு காரணம்.
நம்மிடம் இருக்கும் அந்த அறியாமையை,அலட்சியத்தை, சுயநலங்களை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
ஜனநாயகத் தன்மை,இந்தியாவின் அரசியல் கட்சிகள்,அரசியல்வாதிகளின் இன்னொரு பக்கம் ஆகியவற்றினை தெரிந்துகொள்வதற்கும்,புரிந்துகொள்வதற்குமான ஒரு அரசியல் ஆத்திச்சூடி இந்த நூல்.
வாக்களிக்கப்பதற்கு போகும் முன் இந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்து விட்டு செல்லும் ஒரு இந்திய வாக்காளன் நிச்சயம் தனக்கான ஒரு நல்ல மக்கள் சேவகனை தேர்ந்தெடுப்பான் என்பது தான் இந்தப் புத்தகம் கொடுக்கக் கூடிய கனமான தரிசனம் என்பேன்.
மிக எளிதில் வாசித்து உள்வாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு மொழிநடையில் எல்லாக் கட்டுரைகளையும் ஜெமோ எழுதியுள்ளார்.
சமஸ் எழுதிய அரசியல் பழகு,எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய அரசியல் எனக்கு பிடிக்கும் ஆகிய புத்தகங்கள் கூட இதைப் போன்றே முக்கியமான புத்தகங்கள் எனலாம்.
நிச்சயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த புத்தகம் ஜனநாயகச் சோதனைச் சாலையில்///
Velu malayan
01.10.2021
Comments
Post a Comment