ரயில் நிலையங்களின் தோழமை

 ///எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய"ரயில் நிலையங்களின் தோழமை" நூல்   குறித்து 



மனித இனம் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயபணப்படாமல் இருந்திருந்தால் நாகரிகம் என்ற ஒன்றே உருவாகி இருக்காது.


ஓடாத நதியும்,தேடாத மனமும் தெளிவு கொள்ளாது என்று சொல்லுவார்கள்.


பயணங்களின் வழியே நாம் கண்டடைவது பல்வேறு இடங்களை,இதுவரை நாம் கண்டு கால்பதிக்காத நிலப்பரப்புகளை மட்டுமல்ல,நம்மையும் கண்டடைந்து கொள்வதற்கான வழியை அலைதல் தியானமான பயணமே கொடுக்கிறது.


இதுநாள் வரை உங்கள் மனம் கட்டமைத்து வைத்திருக்கும் சொந்த இடம்,சொந்த ஊர்,சொந்த சாதி போன்ற எண்ணங்களை உடைத்து உங்களை அடையாளமற்ற ஒரு பறவையாக உணரச் செய்ய வைப்பது பயணமே.


நிறைய  பயணம் செய்தும்,

இலக்கியம் செய்தும் தன் வாழ்வின் பெரும் பகுதியை கரைத்துக் கொண்டவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.


காற்றில் இலக்கின்றி திரியும் ஒரு பறவையின் இறகைப் போல பல்வேறு இடங்களைக் காண ஒரு தேசாந்திரியாக திரிந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன்.


அவர் பயணம் செய்த இடங்களை பற்றிய பயண அனுபவங்களின் தொகுப்பு தான் இந்த நூல்.


ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கற்கால குடியம் குகையை பற்றித் தொடங்கும் பயண கட்டுரை கடைசியில் தில்லி யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள காந்தியின் சமாதியில் முடிகிறது.


எஸ்.ராமகிருஷ்ணன் கனடா, அமெரிக்கா,துபாய்,ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்ற பயண அனுபவங்களை கட்டுரைகளாக இந்நூலில் பதிவு செய்திருந்தாலும் அதிக கட்டுரைகள் இந்தியாவில் உள்ள மிக முக்கிய இடங்களை பற்றியது.


எஸ்.ராவின் எழுத்தின் பலமென்பது தன்னுடைய பயண அனுபவங்களின் வழியே கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகளையும் பொருத்தி பார்ப்பது தான்.



எஸ் ராமகிருஷ்ணன் ஆறாவது படிக்கும் போது பள்ளி சுற்றுலா மூலம் மைசூர் அரண்மனையை காண கடைசி நேரத்தில் தலைமை ஆசிரியரால் பேருந்தில் ஏற்றிக் கொள்ள மறுக்கப்பட்ட தன்னுடைய பள்ளி நண்பன் ஜெயபாலுவின் அழுகை,ஏக்கத்தின் வழியே என் மனம் கடந்த கால ஆறாம் வகுப்பு வாழ்க்கையை பின்னோக்கிச் சென்று பார்க்க வைக்கிறார் .


நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் பள்ளியிலிருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றார்கள்.சுற்றுலா செல்வதற்கான பணத்தை என்னால் அப்போது கட்ட முடியவில்லை.


ஜெயபாலுவைப் போலவே அந்த சிறு வயது  கொண்டாட்டத்திற்கான சந்தோஷத்தை இழந்து வருத்தப்பட்டவன் நானும் தான்.


என் பள்ளி சுற்றுலா ஒரு சோகத்துடன் முடிவடைந்தது.ஆறாம் வகுப்பு பெயிலானதாலும் சீனியர் என்பதாலும் முருகன் என்ற மாணவன் தான் எங்களுக்கு கிளாஸ் லீடராக இருந்தான்.


அவன் பள்ளி சுற்றுலாவின் போது இரவில் மாடியிலிருந்து தவறி விழுந்ததால் அவனுடைய மேல் வரிசையில்  இரண்டும் கீழ் வரிசையில் இரண்டும் மொத்தம் நான்கு பற்களும்,வலது கையின் நடுவிரல் பாதியாக உடைந்து உயிருடன் காப்பாற்றப்பட்டான். 


அந்த நிகழ்விற்குப் பின் அவனுக்கு பல் விழுந்து வாய் பொக்கையாக இருந்ததையும்,அவன் உடைந்த நடுவிரலை போல நாங்கள் கையை மடக்கியும் அந்த வயதில் அவனைக் கேலி செய்திருக்கிறோம்.


நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலத்தில் எதேச்சையாக கேள்விப்பட்ட போது முருகன் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டான் என ஒரு செய்தியாக தெரிந்து கொண்டேன்.


அதே போல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள்,ஊர்கள் பற்றி பேசும் போது அது தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்களையும் நமக்கு கூடுதல் தகவலாக தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.


வட மாநில உணவுகள் பற்றி பேசும்போது மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய உணவு நூல் பற்றி கூறுகிறார்.


ராஜஸ்தான்  மாநிலத்தில் உள்ள சமண மத புண்ணிய ஸ்தலமான ரணக்பூர் ஜெயின்  கோயிலைப் பற்றிய அனுபவங்களை குறிப்பிடும் போதுமயிலை சீனி வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் நூலையும் குறிப்பிடுகிறார்.


கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் அமைந்துள்ள திப்பு சுல்தானின் கோடை மாளிகையைசுற்றிப் பார்த்த அனுபவத்தை பகிரும் போது திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்று நாவலான "டணாயக்கன் கோட்டை "நாவல் பற்றி குறிப்பிடுகிறார்.


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கும்பல்கர் கோட்டைப் பற்றி குறிப்பிடும் போது ராஜஸ்தானத்து அந்தப்புரங்களில் வசித்த பெண்களின் துயரங்களைப் பற்றி ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய "ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்" என்ற  நூல் பேசுவதை பதிவு செய்கிறார். 


ஒரிசாவின் உதயகிரியில் உள்ள காரவேலனைப் பற்றி குறிப்பிடும் அதி கும்பா கல்வெட்டு மற்றும் சில்கா ஏரியில் டால்பின்கள் துள்ளிக் குதிப்பதை சிலாகித்து பேசும் எஸ்ரா ஒரிசாவில் வரலாற்றாய்வாளர்,ஐ.ஏ.எஸ் ஆர்.பாலகிருஷ்ணன் உட்பட 11 க்கும் மேற்பட்ட தமிழக அதிகாரிகள் ஒரிசா மாநில அரசில் சிறப்பான பதவிகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். 


கிருஷ்ணரின் லீலைகளை கதையாக விளக்கக் கூடிய கொட்டிபுவா  நடனம் பூரி ஜெகநாதர் கோவில் விழாவில் இடம் பெறுவதை குறிப்பிடுகிறார்.


ராஜஸ்தான் பயணத்தை பற்றி குறிப்பிடும் போது ராஜஸ்தானில் உள்ள கிராமங்கள் கல்வி,மருத்துவம்,சுகாதாரம் கட்டமைப்பு என எல்லாவற்றிலும் ஒரு நூற்றாண்டு பின் தங்கியே உள்ளது என்கிறார்.


கடந்த மாதம் வட மாநிலங்களுக்கு பயணம் சென்று வந்த எனது நண்பர்களும் எஸ்ரா கூறியதையே என்னிடம் கூறியிருக்கிறார்கள்.


நயாகரா அருவியின் சாரல்,கனடாவில் உள்ள மிக உயர்ந்த கட்டிடத்தில் சுழலும் உணவகம்,ஊட்டியை உருவாக்கி ஆங்கிலேயர் ஜான் சல்லிவன் நினைவிடம்,அந்தியூர் குதிரை சந்தை,கர்நாடகாவின் குப்பள்ளியில் உள்ள கன்னட எழுத்தாளர் குவெம்புவின் நினைவிடம், திருநெல்வேலியில் உள்ள கம்பரின் நினைவிடம்,ஜப்பானில் உள்ள ஜென் கவிகளின் பிதாமகர் கவிஞர் 

பாஷோவின் மியூசியம் என நிறைய இடங்களில் பயண அனுபவங்களைப் பற்றி எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் படிக்கும் நம்மையும் அவர் பயணம் செய்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதைப் போன்ற உணர்வை உருவாக்குகிறார்.


2018 ஆம் ஆண்டு தர்மபுரி புத்தக திருவிழாவிற்கு வருகை தந்தபோது மருத்துவர் திரு.இரா.செந்தில் அவர்களின் வீட்டில் எஸ்ரா கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேல் கலை,இலக்கியம் வரலாறு,அறிவியல் அரசியல் என எல்லாத் தளங்களிலும் பேசினார்.


எஸ்.ராவின் தலையெல்லாம் தகவல் களஞ்சியம். எல்லாவற்றைப் பற்றியும் அவரால் தரவுகளுடன் சரளமாக பேச முடிகிறது.


இன்றைய இளைய தலைமுறையை வாசிக்க வைத்ததில் எழுத்தாளர் எஸ்.ராவுக்கு பெரும் பங்குண்டு.


எல்லோரும்  வாசிக்கக்கூடிய புத்தகமாக இருப்பினும் குறிப்பாக பயணம் செல்ல விரும்புபவர்களுக்கு  இந்த புத்தகம் அதிகம் பிடிக்கும்///


velu malayan

5.1.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்