வம்ச விருட்சம் -எஸ்.எல்.பைரப்பா.

எஸ்.எல்.பைரப்பாவின் வம்ச விருட்சம் நாவலை முன் வைத்து:



தனது திரை(Avarana) நாவல் குறித்து பேசும் போது வரலாற்று பொய்களை முன்வைப்பதன் மூலம் தேசியவாதத்தை ஒருபோதும் வலுப்படுத்த முடியாது" என்கிறார் எஸ்.எல்.பைரப்பா.


சரித்திரப் புள்ளி விவரங்களில் எனது சொந்தக் கற்பனை எதுவும் இல்லை எனும் S.L.பைரப்பா


 "நமது முன்னோர்களின் எந்தெந்தச் செயல்களை நிராகரிக்க வேண்டும், எந்தெந்த சாதனைகளினால் கவரப்படவேண்டும் என்கிற விவேகம் இல்லாமல் இருந்தால் நாம் வளருவதில்லை.சரித்திரத்தின் மூலம் நாம் பெற்றுக் கொள்வது போலவே, அவற்றிலிருந்து விடுவித்துக் கொள்வதும் ஒரு முதிர்ச்சியின் அறிகுறி.இது ஒவ்வொரு மதம், ஜாதி,குழுக்களுக்கும் பொருந்தும் ஒரு வாசகம்" என்கிறார்.


திரை(Avarana) நாவலில் அமீரும்,லட்சுமியும்(ரஷியா) இருவரும் இஸ்லாமிய இந்து கலாச்சார விவாதங்களின் குறியீடுகள்.


வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இஸ்லாம் குறித்து நம் முன் நம்ப வைக்கப்பட்ட போலியாக போர்த்தப்பட்ட வரலாற்றின் மீதான திரையை விலக்கும் முயற்சியான திரை(ஆவரணா) போன்ற நாவலை தமிழில் எந்த எழுத்தாளரும் எழுதி விட முடியாது.அந்த அறிவு துணிச்சலும் நேர்மையும் எஸ்.எல். பைரப்பாவுக்கு உண்டு.அதற்கு வலுவான சாட்சிகள் தான் அவரது இலக்கியப் படைப்புகள்.


எஸ்.எல்.பைரப்பாவின் இன்னொரு நாவலான ஒரு குடும்பம் சிதைகிறது நாவல் இயற்கையின் ஒரு பெரும் திட்டத்தின் முன்னால் சிதைந்து போகும் ஒரு குடும்பத்தைப் பற்றிய நாவல்.


மிக இளம் வயதிலேயே கணவனை இழந்து விதவையாகும் கங்கம்மா பாத்திரம் எல்லோரையும் சபிக்கும் ஒரு வித எதிர் மனநிலையாகவும்,ஒரு பொறுப்பற்ற கணவன் இருந்தும் மாமியார் செய்யும் கொடுமைகளிலும்  வறுமையிலும்  நேர்மையான வழியில் பிழைக்கும் நஞ்சம்மா பாத்திரம் ஒரு பரிதாபகரமான ஒன்றாகவும்  உருவாக்கியிருப்பார் எஸ்.எல்.பைரப்பா.


தொடர்ந்து இயற்கையின் கோர விளையாட்டான பிளேக் நோய்க்கு தன் எல்லா பிள்ளைகளையும் பழி கொடுத்து விட்டு  தானும் இறந்து போகும் நஞ்சம்மாவும்,பிளேக் நோய்க்கு தப்பிப் பிழைக்கும் நஞ்சம்மாவின் கடைசி மகன் தேசாந்திரி சாமியார் மகாதேவய்யாவுடன் அந்த ஊரை விட்டு போகும் போது நம் முன் 

எஸ்.எல்.பைரப்பா எழுப்பும் கேள்வி என்பது நம் முன் இருக்கும் இந்த அபத்த வாழ்வின் பொருளென்ன என்பது தான்.ஒன்றுமின்மை என்பது தான் வாழ்வின் இறுதி இலக்கு என்பதே நாவல் உணர்த்தும் உண்மை.


வம்ச விருட்சம் நாவலின் இறுதியில் துறவு போகும் சீனிவாச பண்டிதர் வழியே பைரப்பா உணர்த்துவதும் இந்த வாழ்வின் பொருளற்ற நிலையைத்தான்.


எஸ்.எல்.பைரப்பா மரபின் மீது ஆழமான பற்று கொண்டவர். ஆனாலும் அந்த மரபை அப்படியே ஏற்றுக் கொள்பவரும் அல்ல.மரபின் மீதுள்ள பற்றையும்,சாஸ்திரங்களின் மீதான நம்பிக்கையும்,கோத்திரப் பெருமை மற்றும் வம்சப் பெருமையை பைரப்பா உடைக்கும் புள்ளியில் தான் இந்த நாவல் நமக்கு ஒரு பெரும் அதிர்ச்சியையும் தரிசனத்தையும் தருகிறது.


இந்த பிரபஞ்சத்தில் பிறந்த மனிதர்களுக்கு பிரதானமாக இருப்பது வம்ச உற்பத்தி தான்.அந்த வம்ச மரத்தின் வேர்களை ஆழமாக ஆராயும் நாவலாக வம்ச விருட்சம் இருக்கிறது.


பைரப்பா இந்த நாவலில் நிகழ்த்துவது பழைய மரபுக்கும் நவீனத்துவ மனதிற்கும் இடையே நிகழும் தர்க்கத்தைத் தான்.


மரபை பின்பற்றினாலும் அதிலிருந்து விலகி போகும் மன நிலையை பண்டிதரின் மருமகள் காத்தியாயினி பாத்திரம் வழியாக காட்டுகிறார். ஒருவருக்கு நாமிழைக்கும் துரோகம் நம் வம்சத்தை தொடர்ந்து வந்து தீங்கிழைக்கும் என்பதும் கர்மாவும் ஊழ்வினையும் காலம் கடந்தும் நம்மை தாக்கும் என்பதே வம்ச விருட்சம் நாவல் உணர்த்தும் இறுதி உண்மை.


சாஸ்திரத்தில்,பண்டித வம்சத்தில், அறவுணர்வில் நம்பிக்கை கொண்ட சீனிவாச பண்டிதர் ஒரு கட்டத்தில் தான் பண்டிதர் வம்சத்தில் பிறக்காமல் ஊர் ஊராக ஹரிகதையை சொல்லும் ஷாமதாசர் என்ற வழிப்போக்கனுக்கு பிறந்தவன் என்று தெரிய வரும் போது என் வம்சம் எது.என் பிறப்பில் புனிதம் எங்கே இருக்கிறது? என்று எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்து நலிந்து நிற்கும் சீனிவாச பண்டிதன் வழியே பைரப்பா பிறப்பின் புனிதம் குறித்தும் வம்ச விருட்சத்தின் பெருமை குறித்தும் ஒரு பெரிய கேள்வியை நம் முன் வைக்கிறார்.


சீனிவாச பண்டிதருக்கு மனைவி பாகீரதம்மாவும்,பேராசிரியர் சதாசிவ ராவின் மனைவி நாகலட்சுமியும் கணவனின் மீது அக்கறை காட்டும் அப்பாவியான சராசரி குடும்ப பெண் பாத்திரங்கள்.


சதாசிவ ராவின் இரண்டாவது மனைவியாக வரும் சிங்களப் பெண் கருணரத்னாவும்,ராஜா ராவின் மனைவியாகும் காத்தியாயினியும் நவீன மனம் கொண்டவர்கள்.


சீனிவாச பண்டிதரின் குடும்பத்தில் தன் கணவனை இழந்து அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக வாழும் லட்சுமி பாத்திரம் கிட்டத்தட்ட சீனிவாச பண்டிதரின் பெண் வடிவம் எனலாம்.


நாவலில் இரண்டு இடங்களில் சீனிவாச பண்டிதருக்கும், காத்தியாயினிக்கும் நடக்கும் தர்க்கம் மிக முக்கியமானது.


ஒன்று சீனிவாச பண்டிதரின் விதவை மருமகள் காத்தியாயினி தான் ராஜா என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பண்டிதரிடம் சொல்லும் போதும்,இரண்டாவதாக கார்த்தியாயினி ராஜாராவை திருமணம் செய்து கொண்ட பிறகு தன் மகன் சீனியை தன்னுடன் அழைத்துச் செல்ல வரும் போதும் அவளை எந்த விதத்திலும் எதிர்க்காமல் முடிவை அவளிடமே விட்டுவிடுகிறார்.


சீனிவாச பண்டிதர் எந்த இழப்புகளுக்கும் தன் புத்திர இழப்பிற்கே கூட உடைந்து அழாதவர்.பெரும் புயலிலும் அழிந்து விடாத அருகம்புல் போல மனப் பிடிமானமும்,கட்டுப்பாடும் கொண்டவர்.


சீனிவாசரின் மரபிற்கும் காத்தியாயினியின் உடல் இச்சைக்கும் நடக்கும் தர்க்கத்தில் காத்தியாயினியின் உடல் இச்சையே வெல்கிறது.


திருமணம் செய்து கொள்வதில் தன்னுடைய மாமனாரின் வீட்டு கௌரவம் தாண்டி இருபத்தி மூன்றே வயதான காத்தியாயினியின் உடல் இச்சை தன் மகனையும் விட்டு ராஜா வை மணந்து கொள்ளச் செய்கிறது.ஆனால் அவள் செய்தது சரிதான் என்று ஒரு கட்டத்தில் சீனிவாச பண்டிதர் உணர்ந்து கொள்கிறார்.


அதனால் தான் ஜெயமோகன் அவர்கள்  "பெண் தாய்மையின் வடிவம்.அவளை ஒழுக்க நியதிகளால் அளக்க முடியாது.அவளை அவள் பெற்ற குழந்தைகளினாலான கலாச்சாரம் ஒரு போதும் மதிப்பிட்டு விட முடியாது;நதியை மரங்கள் அளந்து விடமுடியாது என்பதைப் போல" என்கிறார்.


நாவலில் துரோகம் ஒரு முக்கிய இழையாக செயல்படுகிறது.சீனிவாச பண்டிதரின் தந்தை நஞ்சுண்ட பண்டிதர் சீனிவாச பண்டிதரின் சித்தப்பா கிருஷ்ணப்ப பண்டிதருக்கு சொத்துக்களை கொடுக்காமல் செய்யும் துரோகம் ஒரு புறம் என்றால்,


கணவனுக்கு எந்தவித பாதகமும் செய்யாத அப்பாவியான நாகலட்சுமியை விட்டு சிங்கள பெண்ணான கருணரத்னாவை சதாசிவராவ் திருமணம் செய்து கொள்வது ஒரு பக்க துரோகம்.


தனக்கு விருப்பமான ஒரு வாழ்க்கை தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் தான் பெற்ற மகனையும் தன்னை அரவணைத்து வளர்த்த மாமனாரையும் மாமியாரையும் விட்டு ராஜாவை திருமணம் செய்து கொள்ளும் காத்தியாயினியின் செயலும் ஒரு விதத்தில் பண்டித வம்சத்திற்கு செய்யும் துரோகமாக பார்க்கப்படுகிறது.


மனைவியை விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் சதாசிவராவும்,பெற்ற மகனை விட்டு வேறு திருமணம் செய்து கொள்ளும் காத்தியாயினியும் ஒரு வித இருநிலை மன சஞ்சலத்தில் உழன்று இறந்து போகிறார்கள்.



தன்னுடைய அம்மா காத்தியாயினி பேராசிரியராக இருக்கும் கல்லூரியிலே மாணவனாக சேரும் சீனிக்கு அவள் தான் தன் தாய் என்று தெரிந்தும் அவளை எல்லா விதத்திலும் நிராகரிக்கிறான்.

ஆனாலும் அவனுடைய அன்பையும் உணர்ச்சிகளையும் அவளுடைய அம்மாவின் எதிரில் காட்டாமல் தனிமையில் அழுது தீர்த்து வேறு கல்லூரிக்கு மாறி விடுகிறான்.

பெற்ற பிள்ளையே தாயை நிராகரிக்கும் ஒருவித நிராகரிப்பும் அவமானமும் தான் காத்தியாயினிக்கு தன் வாழ்க்கை எதுவுமற்ற ஒரு சூன்யம் என நோயில் விழ காரணமாகிறது.


ராஜாவுடனான வாழ்க்கையில் மூன்று முறை கருத்தரித்து கருக்கலையும் கார்த்தியினி மீண்டும் கருத்தரித்தால் இறக்க வாய்ப்புண்டு என்பதால்  குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் ராஜாவின் செயலும்,தன் மனைவி பாகீரதம்மாவுக்கு இரண்டாவது கரு தாங்கும் சக்தி இல்லை என்பதால் புலனடக்கம் கொண்டு உடல் மெலிந்து போகும் சீனிவாச பண்டிதரின் நிலை கண்டு பாகீரதம்மாவே தன் வீட்டில் இருக்கும் லட்சுமியுடன் உடல் உறவு வைத்துக் கொள்ள சம்மதித்தும் அதை நிராகரித்து நிற்கும் சீனுவாச பண்டிதரின் செயலும் ஒன்றே எனலாம்.


சீனிவாச பண்டிதரின் தந்தை நஞ்சுண்ட பண்டிதர் அவருடைய சித்தப்பா கிருஷ்ண பண்டிதருக்கு செய்யும் துரோகம் தான் சீனிவாச பண்டிதரின் மகன் நஞ்சுண்ட பண்டிதனை கபில நதி சுழலில் இழுத்து கொன்று விடுகிறது.


தன்னுடைய உடலும் தான் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கும் சொத்தும் தனக்கானது இல்லை என்று உணரும் சீனிவாச பண்டிதர் அதை தன்னுடைய சித்தப்பா கிருஷ்ணா பண்டிதரின் வாரிசுகளுக்கு எழுதி வைக்க ஒரு கட்டத்தில் அவர்களை தேடும் போது அவர்களை கண்டுபிடிக்க முடிவதில்லை என்பதால் சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கும் அனாதை ஆசிரமங்களுக்கும் எழுதி வைத்து விடுகிறார்.



கடைசியில் காத்தியாயினி இறக்கும் போது தான் சீனிவாச பண்டிதர் நாகலட்சுமியிடமும் ராஜாவிடமும்  கிட்டப்பா பண்டிதர் குறித்து விசாரிக்கும் போது கிட்டப்பா பண்டிதர் ராஜாவின் தாத்தா என்று தெரிய வருகிறது.


இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான கதையாக விரியும் நாவல் அந்தக் குடும்பங்களுக்கு இடையேயான முன் கதை,துரோகம் ஆகியவற்றை புதிராக ஒரு புள்ளியில் அவிழ்க்கிறது.நஞ்சனக்கூடு கிராமத்தையும் அதில் பாயும் கபிலை நதியையும்,சஞ்சீவ மலையையும் வாசிப்பவர்களின் மனம் மறக்காது.


இது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்ற எண்ணம் எழாமல் மொழிபெயர்த்த கே.நல்லதம்பி அவர்களின் மொழியாக்க ஆளுமை ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.இந்த நாவலை எவ்வித சலிப்பும் எழ வைக்காமல் தொடர்ச்சியாக வாசிக்க வழிவகை செய்வது நல்ல மொழியாக்கமும் ஒரு காரணம் எனலாம்.


ஒரு செல்வியல் படைப்பின் தரம் பக்கத்திற்கு பக்கம் கொண்ட நாவல்.


வம்ச விருட்சம்


எஸ்.எல். பைரப்பா


தமிழில்:கே.நல்லதம்பி


பதிப்பகம்: எழுத்து பிரசுரம்


விலை       :ரூ.600/-


Velu malayan

13.04.2024

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்