பாபாசாஹேப் -அம்பேத்கருடன் என் வாழ்க்கை :சவிதா அம்பேத்கர்

 பாபாசாஹேப்: அம்பேத்கருடன் என் வாழ்க்கை - சவிதா அம்பேத்கர் நூலை முன் வைத்து:



அம்பேத்கர் எனும் பேராளுமை குறித்து எழுதப்பட்ட நூல்களிலிருந்தும் பொது வெளியில் அவர் குறித்து நிறுவப்பட்டுள்ள பிம்பங்களிலிருந்தும்

இந்த புத்தகம் வேறு ஒரு கோணத்தில் அவரை அணுகும் வாய்ப்பாக எழுதப்பட்டுள்ளது.


மருத்துவம் படித்த சாரஸ்வத் பிராமண சமூகத்தைச் சேர்ந்த சவிதா என்பவர் 1948 ல்அம்பேத்கர் திருமணம் செய்து கொள்கிறார்.1948 முதல் 1956 வரையான எட்டு ஆண்டுகளில் அம்பேத்கருடன் தான் வாழ்ந்த எட்டு வருடங்களின் வாழ்க்கை பதிவாக சவிதா அம்பேத்கர் அவர்களால் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.


இந்தியாவின் அரசியலமைப்பு சிற்பியாக,சட்ட அமைச்சராக,தொழிலாளர் அமைச்சராக,பொருளாதாரம்,இலக்கியம்,வரலாறு என பல்வேறு துறைகளில் பேரறிவு கொண்டிருந்த அம்பேத்கரின் வெளியில் தெரியாத ஆளுமைகளை இந்த புத்தகத்தின் மூலம் நாம் அறிய முடிகிறது.


அவர் தன் மனைவி சவிதா அம்பேத்கருக்கு எழுதிய பல்வேறு காதல் கடிதங்களில் அவர் எவ்வளவு காதல் மனம் கொண்டவர் என்பதை அறிய முடிகிறது.


உலகின் மிகப்பெரிய அறிவாற்றல் கொண்ட ஆறு மனிதர்களில் ஒருவராக கருதப்படும் அம்பேத்கருக்கு கார் ஓட்டத் தெரியாது என்பது ஆச்சர்யமான ஒரு தகவல்.


வாழ்நாள் முழுக்க தன் வாழ்க்கை மிகப் பெரிய சாதிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு பல்வேறு தருணங்களில் அவமானப்படுத்தப்பட்டிருந்தாலும் ஒரு ஒழுக்கமான தூய வாழ்க்கையை வாழ்ந்தவர் அம்பேத்கர்.தன் உடல் பல்வேறு நோய்களால் சூழப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையின் படி அவரது உடல் உறக்கம் கொள்ள கொஞ்சம் மது எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியும் கூட ஒரு துளி மதுவைக் கூட நுகராத மனிதர் அம்பேத்கர்.


தன் மனைவிக்கு சமையல் செய்து கொடுக்கும் ஒரு கணவராக,தன் மனைவி சவிதாவுக்கு மார்பக புற்று என தெரிந்ததும் நீ இல்லாமல் போனால் நான் மீண்டும் அனாதையாகி விடுவேன் சவிதா என சிறு குழந்தையைப் போல படுக்கையில் முகம் புதைத்து அழும் அம்பேத்கரின் கனிவான நாம் கேள்விப்படாத உருவத்தை இந்நூல் நமக்கு அளிக்கிறது.


உயர் ரத்த அழுத்தம்,உயர் சர்க்கரை,நரம்பு தளர்ச்சி  என உடல் சுகக் கேட்டின் உச்சத்தில் இருந்திருந்தாலும் கடைசி வரை தலித்துகளின் நலன்களுக்காகவே அல்லும் பகலும் சிந்தித்து உழைத்தவர் அம்பேத்கர்.ஆனால் அப்படிப்பட்ட அம்பேத்கர் தான் நம்பியே சொந்த சமூகத்து மக்களால் 1952 மற்றும் 1954 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸின் கெளரவத்தைக் காப்பதற்காக நேருவும்,பட்டேலும் கூட அம்பேத்கரின் முதுகில் குத்தியிருக்கிறார்கள்.


வாக்கு அரசியலின் தோல்வி,தொடர்ந்து தன் உடலை வருத்திக் கொண்டிருந்த நோய்மை, தலித்துகள் மீது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட இந்து மதத்தின் மைய கொடுமையான சாதிய  கொடுமை ஆகியவற்றின் தீர்வாக பெளத்தத்தை தழுவினார்.ஒருபோதும் இந்து மதத்தில் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது.மனித சமத்துவத்தை பெற பௌத்த மதம்தான் தலித்துகளுக்கு பாதுகாப்பான மதம் என நாக்பூரில் லட்சோப லட்ச தலித்துகளின் மத்தியில் மதம் மாறினார் அம்பேத்கர்.


உடலில் நோய்கள் தன்னை ஒரு புறம் வாட்டிக் கொண்டிருந்தாலும் மனதிடத்தின் காரணமாக தன் வாழ்நாளின் கடைசி காலத்தில் புத்தர் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு "புத்தரும் அவரது தம்மமும்" நூலை எழுதினார் அம்பேத்கர்.அவர் இறந்த பிறகு தான் அந்த நூல் முழுமை பெற்று வெளியிடப்பட்டது.


அந்த நூலுக்கு அம்பேத்கர் எழுதிய முன்னுரையில் தன்னுடைய உடல்நலத்தை தொடர்ந்து கவனித்துக் கொண்ட தன்னுடைய மனைவி சவிதா மற்றும் மருத்துவர் மால்வன்கர் ஆகிய இருவரையும் நன்றியுடன் கூறியிருப்பதை வேண்டுமென்றே அந்த நூலில் வரவிடாமல் தடுத்து இருக்கிறார்கள் அம்பேத்கர் விசுவாசிகள்.அம்பேத்கரின் மரணத்திற்கு பிறகு சவிதா அம்பேத்கர் பல்வேறு அவதூறுகளுக்கும் அச்சறுத்தல்களுக்கும் ஆளாயிருக்கிறார்.


அம்பேத்கர் தன்னுடைய உதவியாளராக இருந்த ரட்டுவின் வாய்மொழியின் படி சவிதா அம்பேத்கருக்கு அதிகமான இன்சுலின் கொடுத்து அவரை கொல்ல திட்டமிட்டார் என்றும்,சவிதா தான் அம்பேத்கரை விஷம் வைத்து கொன்று விட்டார் என்றும் அம்பேத்கரின் ஆதரவாளர்களால் சவிதாவை நோக்கி விஷச் செய்தி பரப்பப்பட்டது.அம்பேத்கரின் மகன் யஷ்வந்த் அம்பேத்கரும் சொத்து பிரிப்பதில் சவிதாவை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறார்.


அம்பேத்கருடைய எழுத்து ஆதாரத்தின் படி தன்னுடைய வாழ்நாளை நீட்டித்தவர் தன்னுடைய மனைவி சவிதா என்று பல்வேறு கடிதங்களில் அவரே குறிப்பிட்டுள்ளார்.அப்படி இருக்க அம்பேத்கரை சவிதா விஷம் வைத்து கொன்று விட்டார் என்று அம்பேத்கர் ஆதரவாளர்களால் பொய் செய்தி பரப்பப்பட்டு அதற்கு டி.ஐ.ஜி சக்சேனா தலைமையில் அம்பேத்கர் மரணம் குறித்து ஒரு விசாரணை கமிஷனும் அமைத்து பின் இந்த கமிஷன் அம்பேத்கருடைய மரணம் இயற்கையானது தான் என அறிக்கை சமர்ப்பித்தது.


மிகவும் கொந்தளிப்பான அம்பேத்கருடைய கடைசி எட்டு வருடங்களின் வாழ்க்கைத் தொகுப்பு இந்த புத்தகம்.அம்பேத்கர் குறித்து நாம் அறியாத கோணங்களை அறிந்து கொள்ள உதவும் மிகச் சிறந்த ஆவணம் இந்த புத்தகம்.


Velu malayan

7.4.2024

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்