மாயாதீதம் - என்.ஸ்ரீராம்
என்.ஸ்ரீராம் எழுதிய மாயாதீதம் நாவலை முன்வைத்து:
என் பெரியப்பாவின் கடைசி மகள் பெயர் மகேஸ்வரி.அவள் என் வயதொத்தவள்.அவளுக்கு ஒரு கண் பூ விழுந்தது போல் வெண்மையாக பார்வையற்று இருக்கும்.
அவள் தீர்த்தமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கண் அவளுக்கு நன்றாக தெரிந்துக் கொண்டு தான் இருந்தது.என் பாட்டி சந்திரமதி தான் அவளை கோயில் குளம் என கூட்டிச் சென்று தீர்த்தமலை தீர்த்தத்தை எல்லாம் கண்ணில் விட்டு அந்த இன்னொரு கண்ணும் காணும் திறனை இழக்க வைத்தாள் என்று என் பெரியம்மா அழுது கேட்டிருக்கிறேன்.
மனிதர்கள் அவர்களுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வாழ்வின் சிக்கல்களுக்கு கடவுளை நம்புகிறார்கள்.விஞ்ஞானம் மருத்துவம் பெரும் வளர்ச்சி கண்டிருக்கும் இந்த சூழலிலும் கூட என் கிராமத்தில் உள்ள மக்களுக்கு உடல் சுகக் கேடு என்றால் முதலில் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதும், உடல் நலமில்லாதவர்களை உட்கார வைத்து சாமி எடுத்து அவர்களைச் சுற்றும் முறை இன்றும் உண்டு.
தற்போது இது போல் நடப்பது குறைந்திருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதன் வீரியம் அதிகம் இருந்ததை நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன்.
நம்மை மீறி நம் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை கொடுப்பவை கடவுளும், தொன்மமும் என நம் மனக்கூறுகளில் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். தொன்மம்,புராணம் வழியாக நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் வெளிப்படுத்திய சிந்தனையின் தொடர்ச்சி தான் நாமே.அதனால் தான்
"புராணங்களிலும் இதிகாசங்களிலும் வெளிப்படுவது ஒரு குறிப்பிட்ட தனிநபரின் தனிச்சிந்தனை அல்ல, மக்களின் கூட்டுச்சிந்தனையே" என்கிறார் மார்க்சிம் கார்க்கி.
எல்லோருக்கும் சொல்வதற்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது.எல்லோருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையை கடவுள் தொன்மம் கலந்த ஒரு புனைக்கதை வழியாக மாயாதீதம் என்ற ஒரு சிறந்த நாவலை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் என்.ஸ்ரீராம்.
நாவலின் முதல் அத்தியாயத்திலேயே கோட்டை மாரியம்மனால் கதை சொல்லி சூலாயதத்தால் பிடறியில் குத்தப்படும் நாவலின் முடிவு போல சொல்லி விட்டு நாவல் கதை சொல்லி வழியாக நாவல் முதலிலிருந்து ஆரம்பிக்கிறது.
கதை நிகழும் களமாக சங்கரண்டம் பாளையம்,தாயம் பாளையம்,நல்லி மடம் என திருப்பூர் காட்டப்படுகிறது. பெரும்பாலும் யுவன் சந்திரசேகர் அவர்களின் பெரும்பாலான படைப்புகளில் அவர் பிறந்த ஊரான கரட்டுப்பட்டி வரும் அதே போல இந்த நாவலிலும் கதை சொல்லியின் ஊராக வரும் நல்லி மடம் என்பது எழுத்தாளர் என்.ஸ்ரீராம் பிறந்த ஊர்.
வேணு என்ற பதின் வயது சிறுவனின் கண் வலி பிரச்சனைக்கு கோட்டை மாரியம்மனிடம் சென்று அந்த மாரியம்மனால் குணமடைந்து அவன் வளர்ந்த பின் ஒரு பொய் சத்தியம் செய்வதால் அதே சாமியால் அவன் தண்டிக்கப்படுவதையும்,அவனுக்கு சிறுவயதில் ஏற்பட்ட கண் வலி பிரச்சனை அவனுக்கு பிறக்கும் குழந்தைக்கும் தொடர்வதை கடவுள், தொன்மக் கூறுகள் என ஒரு அமானுஷ்யம் கலந்து விவரிக்கிறது நாவல்.
நாவலின் பெரும் பலம் என நான் பார்ப்பது நாவலில் கதை சொல்லி மற்றும் நாவலின் பிற கதைமாந்தர்களின் கதைகளை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக மட்டும் சொல்லாமல் அந்த நிலப்பரப்பில் இருக்கும் மரம்,செடி,கொடி பறவைகள்,பாம்பு,ஆறு என அந்த சூழலை அப்படியே பிரதிபலிப்பது தான்.
கோட்டை மாரியம்மன் கோவிலில் இருக்கும் வரதநாராயண மரத்தின் நுண் பழுப்பிலைகள்,அங்கு கத்தும் ஆள்காட்டிகள்,வேலமரம் அதில் கத்தும் வெயில் பூச்சிகளின் சத்தம்,கோவில் திண்ணையின் ஆட்டுப்புழுக்கை நாற்றம் என இயற்கையின் கூறுகளை நாவல் முழுக்க காட்டியிருக்கியிருக்கிறார் என்.ஸ்ரீராம்.
நீலகண்டப்பறவை மற்றும் வனவாசி போன்ற செவ்வியல் படைப்புகளில் வரும் நிலப்பரப்பும் அந்த சூழலின் நுண் விவரணைகளும் அதன் பதிவுகளும் இந்த நாவலிலும் நிகழ்த்தப்பட்டுள்ள வகையில் இந்த நாவலை ஒரு செவ்வியல் படைப்பாகவே பார்க்கிறேன்.
மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு சூட்டப்படுவது வெள்ளரளி,செவ்வரளி மலர்களே போன்ற நுட்பமான விஷயங்கள் நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயிலின் தங்கும் மடமான கொட்டகார மடத்தில் தங்கி தன் கண் வலி தீர பக்கத்து கிராமங்களில் அமுதெடுக்கும் வேணுவின் சித்தப்பாவின் உருவம் தான் நாவல் முழுக்க வேணுவை பெற்ற தந்தையை விட ஒரு உயர்ந்த பிம்பத்தை உருவாக்குகிறது.
அமுதெடுப்பது என்பது பிறரிடம் பிச்சையெடுத்து உண்பது. வேணுவிற்கு கண் வலி நீங்கி நீண்ட ஆயுள் நிலைக்க நிழற் பிரார்த்தனை செய்யச் சொல்லும் தேசாந்திரிக்காரனும்,பஞ்சப் பாண்டவர்களுக்கு துணையாக வந்த சாளுவன் என்ற நாய் போல வேணுவை தொடரும் அந்த கருநாயும் ஒரு வித தொன்மக் குறியீடாக நாவல் முழுக்க வந்து கொண்டேயிருக்கிறார்கள்.
பீமன் மடை பாறையில் வேணு வரையும் பஞ்சப் பாண்டவர் ஓவியத்தில் தர்மருக்கு கண்ணும் அவர் கையில் ஈட்டியும் கொடுத்து வரைந்து முடிக்கும் வேலையில் இவன் கண் வலி போக்கவும் ஆயுசு நீடிக்கவும் இவனது ஓவிய திறமையை ஓவிய ஆசிரியருக்கு தெரியச் செய்த தேசாந்திரிக்காரன் ஆத்துக்கால் பாறையில் செத்துக் கிடப்பதை பீமன் மடையில் உடும்பு பிடிக்கும் வயோதிகன் வழியாக அறிந்து வேணுவும் அவரது சித்தப்பவும் அனாதையாக திரிந்த தேசாந்திரிக்காரனுக்கு பெற்ற பிள்ளை ஸ்தானத்தில் நின்று சடங்கு செய்கிறார்கள்.
வேணுவிற்கும் பார்கவிக்குமான காதலும் அதன் பிரிவும் ஆழமாக எழுதப்பட்டுள்ளது.நாக மடையில் வேணுவும் பார்கவியும் எதிர்மீன்கள் பிடித்து காதல் வளர்க்கும் உணர்வையும்,பார்கவியின் ராமபானப்பூ சூடிய கூந்தலின் வாசனையையும் அவ்வளவு இயல்பாக நமக்குள் கடத்தியுள்ளார் என்.ஸ்ரீராம்.
மூன்று நிலப்பரப்பும்,மூன்று ஆறுகளும் வேணுவின் வாழ்வில் வருகிறது.ஒன்று அவன் பிறந்த இடத்தில் பாயும் அமராவதி ஆறு. இரண்டாவது வேணுவின் அப்பா அஸ்ஸாம் காசிரங்கா தேசிய பூங்காவில் வேலை செய்யும் போது அங்கு அவன் பார்க்கும் பிரம்மபுத்திரா நதி.மூன்றாவது அவன் பிரபல ஓவியரும் கன்னட கலை இயக்குனருமான ராமகிருஷ்ணராஜ் அவர்களிடம் உதவியாளராக பெங்களூர் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அப்பச்சண்ணா கொப்பலு என்ற இடத்தில் பாயும் காவிரி ஆறும் அங்குள்ள ராமன் (அ)ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயம் என இயற்கையின் வடிவங்கள் நாவல் முழுக்க வருகிறது.
வேணுவின் சித்தப்பா பையனாக வரும் மனநலம் குன்றிய கார்த்திக்கு பார்கவியை திருமணம் செய்து வைத்து விடுகிறாள் வேணுவின் சித்தி.பார்கவியுடன் இரண்டு முறை கூடி வேணுவால் தான் பார்கவி கர்ப்பம் அடைகிறார் என்பது தெரிந்தும் தன் மகனின் மனவளர்ச்சி குன்றிய நிலையை கருத்தில் கொண்டு அவனுக்கு வேறு யாரும் பெண் தர மாட்டார்கள் என்று பார்கவியைப் பிடித்து தன் மகனுக்கு கட்டி வைத்து விடுகிறாள்.
வேணுவை தன்னுடைய சொந்த மகன் போல தான் பாவித்து அவன் மீது அன்பு செலுத்துகிறாள் அவளது சித்தி.ஆனால் தம் சொந்த மகனின் நலன் என்று வரும் பொழுது வேணுவிற்கு துரோகத்தை செய்து விடுகிறார்.வேணுவின் சித்தப்பா நல்லவர்.பார்வதிக்கு குழந்தை பிறந்த பிறகும் கூட வேணுவுடன் நீ குழந்தையை தூக்கிக்கொண்டு ஊரைவிட்டுப் போய் நன்றாக வாழ் என்று சொல்லுகிறார்.
ஒருவருக்கு நாம் செய்யும் துரோகம், பொய் சத்தியம் போன்றவை நம் பின் உள்ள சந்ததியைத் தாக்கும் அதை நிகழ்த்துவது தெய்வம் என எண்ணி அதனை தீர்க்க தெய்வத்தை நாடுகிறோம்.
பார்கவிக்கும் வேணுவிற்கும் பிறக்கும் பிள்ளைக்கு வேணுவிற்கு வந்த அதே கண் பிரச்சனை வரும் போது குழந்தையின் கண் குணமடைய மூன்று முறை நீரில் மூழ்கி நீர் சொட்ட சொட்ட சித்தப்பாவின் கையிலிருந்த அமுத கலயத்தை வாங்கி குழந்தையை தோள் மேல் போட்டுக் கொண்டு வேணு அமுதெடுக்க கிளம்பும் போது வழியில்
"மாயை மறைக்க மறைந்த மறைபொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்"
என தேசாந்திரிக்காரன் பாடுவதாக வேணுவும்,பெரியப்பா கருநாய் ஏனோ நிக்கமாக ஊளையிடுது பாருங்க என பையன் கூறும் போது நாயி எங்கடா ஊளையிடுது தேசாந்திரிக்காரன் தான் பாடுறான் என்றதும் பையனும் வேணுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதுடன் நாவல் முடிகிறது.
வேணு நாவலில் சொல்வது போல புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை வாழ்க்கை ஏன் தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது.எல்லா கணத்தின் நிகழ்வுகளும் எதார்த்தம் வெளியில் நிகழாமல் மாய பிராந்தியத்தில் நிகழ்கிறது என்று அவனையே கேட்டுக் கொள்வான்.
இந்த நாவல் அப்படி இயற்கை,மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டு நடக்கும் மனித வாழ்வின் சிக்கல்கள் அதற்கான விடை நோக்கிய தேடல் குறித்து பேசியிருக்கிறது.
நாவல் முழுக்க இயற்கையின் கீழ் இயங்கும் மரம்,கோரை,பறவைகள் என நிறைய விஷயங்களை சம்பவங்களின் நிலக் காட்சிகளுக்கு இடையே காட்டிக் கொண்டேயிருக்கிறார் எழுத்தாளர்.
வானாஞ் சிட்டுக்கள்,மணிப்புறா தவிட்டு புறா,நீர் காகங்கள்,தச்சன் குருவி,சர நாணல்களில் கூடமைத்து குஞ்சு பொறிக்கும் இலைக் கோழிகள், நீலவர்ண மார்புச் சம்பங் கோழிகள்,தசரதப் பட்டாம்பூச்சி,
புழு சுமந்த புள்ளக் குழுவி, குறுட்டாந்தைகள்,காராட்டுப் பூனைகள்,சூரியகாந்திப் பூவின் வாசனை,நாகமரங்கள்,கன்னி விழிப் பூக்கள்,கடம்பப் புற்கள்,சம்புக் கோரைகள்,கோவைக் கொடி,குடைச் சீத்தை மரங்கள்,கம்பரிசிநாகம், ஆற்றங்கரை நாணல்களில் உள்ள வங்குநரிகள் என எவ்வளவு இயற்கை உயிர்களை நாவலில் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.
வேணுவிற்கு கண் மூன்று நாட்களுக்குள் குணமடையவில்லை என்றால் இருக்கிற திசை பக்கமே வரமாட்டேன் என்று சொல்லி விட்டு கண் வலி சரியாகாமல் வேணுவை கூட்டிக் கொண்டு போகும் போது
"நாடு நகரம் இழந்து வேறு தேசம் செல்லும் தோற்றுப் போன பஞ்சபாண்டவர்களின் நிலையில் சித்தப்பாவின் முகம் இருந்தது" என்று எழுதுகிறார் என்.ஸ்ரீராம்.
நாவலின் பன்னிரண்டாவது பக்கத்தில் கோட்டை மாரியம்மன் கோவிலில் கல் படிக்கட்டில் வேணுவும் அவனது அப்பாவும் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது
"அப்பா பலமாக யோசித்தபடி என்னிடம் ஏதோ பேச முயல்வது தெரிந்தது.தீவிரமான தயக்கம் அப்பாவை என்னிடம் பேச விடாமல் செய்தது.அது அம்மாவைப் பற்றிய ரகசியமாகக் கூட இருக்கலாம்" என்ற வரிகள் வரும்.
எரசனம்பாளையம் அய்யன் பிழிந்து விடும் கோவைக் கொடி சாறினால் வேணுவிற்கு கண் வலி சரியான உடனே அஸ்ஸாம் கோஹரா வனசரத்து வேலைக்குப் போகும் வேணுவின் அப்பா அங்கேயே வேறு கல்யாணம் செய்து கொண்டார் என ஊர் பேசுகிறது.கடைசி வரை அவர் ஊர் திரும்புவதில்லை.
வேணுவின் அம்மா எப்படி மரணித்தார் என்பது நாவலில் சொல்லப்படுவதில்லை.வேணு பார்கவியை நான் ஏமாற்றவில்லை என்று அவருடைய சித்தப்பாவின் முன் கோட்டை மாரியம்மன் கோயிலில் கற்பூரம் அடித்து பொய் சத்தியம் செய்வதால் தெய்வ சாபனையாக அவனுக்கு பிறக்கும் குழந்தைக்கும் கண் பிரச்சனை தொடர்வதாகவும்,
வேணும் சித்தப்பாவின் மகன் கார்த்திக்கு மனநலம் பிசுகுவது என அந்த குடும்பத்திற்கே ஏதோ கடவுளின் சாபம் தொடர்வதாக நாவலில் சொல்லப்படுகிறது.
கிட்டத்தட்ட 100த் தாண்டிய குறைந்த பக்கங்களில் எழுதப்பட்ட இந்த நாவல் உள்ளடக்கத்தில் மிக வலுவான தொன்மைக்கூறுகளையும்,ஆழமான காட்சிப் படிம விவரணைகளையும் கொண்ட ஒரு சிறந்த நாவல்.
வாசகன் தன்னை விரித்தெடுத்துக் கொள்வதற்கான நிறைய உள்ளடக்குகளை கொண்ட நாவல்.
எழுத்தாளர் என் ஸ்ரீராம் அவர்களுக்கு மாயாதீதம் நாவல் பெரிய பெயரை பெற்றுத் தரும்.பரவலான வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்படுவதே அதற்கு ஆதாரச் சான்று.அவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.
பதிப்பகம்:தமிழ்வெளி
விலை : ரூ.120/-
❤️
Comments
Post a Comment