குரவை - சிவகுமார் முத்தய்யா

 குரவை -சிவகுமார் முத்தய்யா



தமிழில் மரமார்ந்த நாட்டுப்புற கலைகள் குறித்தும் அதை வாழ்வாதாரக் கலையாக ஒழுகும் மனிதர்களின்  பின்னணி குறித்தும் எழுதப்பட்ட  மிகச் சிறந்த படைப்பாக குரவை நாவலை பார்க்கிறேன்.


கால மாற்றத்தின் சடுதியில் நலிந்து போன கலை குறித்தும் அதை நம்பி வாழ்ந்த மனிதர்கள் குறித்தும் எந்த வித கருணைக் கோரலும் இன்றி எதார்த்தமாய் அந்த மனிதர்களின் வாழ்வை நேர்மையாக பதிவு செய்துள்ளது இந்த நாவல்.


இதில் வரும் பெண் பாத்திரங்கள் வாழ்க்கையின் மீது எந்த புகாரும் இன்றி தனக்கு வாய்த்த வாழ்க்கையை அல்லது திணிக்கப்பட்ட வாழ்க்கையை அவர்கள் போக்கில் ஏற்று வாழ்கிறார்கள். காவியத் தன்மையுள்ள பெண் பாத்திர சிருஷ்டிப்புகள்.


நாவலில் வரும் பெண்கள் இரவு முழுக்க உடல் வலிக்க ஆடுவதால்  குடிக்கிறார்கள் தனக்கு பிடித்தவர்களோடு படுக்கிறார்கள்.

விஜயா,நித்யா,பேபி, வசந்தா,சித்ரா, செவத்தக் கன்னி, நீலவேணி என அவ்வளவு அடர்த்தியான கதைகள் கொண்ட பெண் பாத்திரங்கள்.


தவில் வித்வானாக வரும் கலியமூர்த்திக்கும் வசந்தாவுக்கும் இருக்கும் உறவு முறையற்ற உறவு என்றாலும் அதில் ஒரு ஆழமான அன்பும் உயிர்த் தன்மையையும் இருக்கிறது.ஆரம்பத்தில் வீடு தேடி கடன் கேட்க வரும் வசந்தாவை அசிங்கமாக பேசும் கலியமூர்த்தியின் மனைவி பாப்பா என்கிற லதா வசந்தாவின் கணவன் இறந்து போகும்போது ஈமச்சடங்கிற்கு காது கையில் இருக்கும் நகையை கழட்டி கொடுப்பதும்,வசந்தா தற்கொலைக்கு முயன்று பிழைத்து கொள்ளும்போது கலியுமூர்த்தியிடம் அவளுக்கு யார் இருக்கிறார்கள் போய் பார்த்துவிட்டு வரலாமா என்று கேட்கும் போதும் எளிய மனிதர்களின் மனம் தற்காலிகமான கோபமும்,வஞ்சமும் கொண்டது என்பதை சிவக்குமார் முத்தையா எழுதியுள்ளது அவ்வளவு எதார்த்தம் கலந்த ஒரு வாழ்க்கைப் பதிவாக உள்ளது.


தவில் கலைஞர்கள்,நாதஸ்வரம் கலைஞர்கள்,பறையிசைப்பவர்கள்,

பறை செய்பவர்கள் என நாம் இன்று மறந்து விட்ட மனிதர்களின் முகங்களை இந்த நாவலில் நமக்கு காண்பிக்கிறார் சிவக்குமார் முத்தையா.


தஞ்சை எப்பொழுதுமே நீருக்கும்,சோறுக்கும்,கலைக்கும் பஞ்சம் இல்லாத ஒரு பூமி.அந்த பூமியில் வாழ்ந்த குரவைக் கூத்து கலை மனிதர்களின் வாழ்க்கை பதிவை மிக நேர்மையாக பதிவு செய்துள்ளது இந்த நாவல். 


நாவல் மனிதர்கள் வாழும் களமாக வரும் தப்படித்தான் மூலை என்ற இடம் தமிழ் இலக்கியத்தில் நீண்ட காலம் நீங்காத ஒரு இடத்தை பிடித்துக் கொள்ளும்.குறவன் குறத்தி ஆட்டம் என நாம் ஒரு கேளிக்கையாக,

வெறும் ஆபாச வசனங்கள் பேசுபவர்களாக நம் வாழ்வில் பார்த்த மற்றும் முகம் பார்க்காத நிறைய மனிதர்களின் கதைக் கோவை குரவை நாவல்.இந்த வருடம் வாசித்த இன்னொரு இலக்கிய தரம் வாய்ந்த படைப்பு குரவை.நண்பர்கள் வாசிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.🙏

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்