திமிங்கல வேட்டை


/ஹெர்மன் மெல்வில்(Herman Mellvile) எழுதிய திமிங்கல வேட்டை(Moby Dick) நாவலை முன் வைத்து



கடற்பயண புனைவு நாவல்களில் எப்போதும் என் விருப்பத்திற்குரியது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் "கிழவனும்,கடலும்" நாவல் என்பேன்.


சாண்டியாகு எனும் மீன் பிடிக்கும் கிழவனுக்கும்,இயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டத்தை ஹெர்னஸ்ட் ஹெமிங்வே  எழுதி அந்நாவலுக்காக நோபல் பரிசும் பெற்றார்.


நடு சமுத்திரத்தில் ஒரு ராட்சத மீனுக்கும்,கிழவனுக்கும் நடக்கும் போராட்டத்தை சாகச உணர்வுகள் மோலோங்க எழுதப்பட்ட ஒரு சிறந்த நாவல் கிழவனும் கடலும்.


ஒரு வயதான கிழவனின் தன்னம்பிக்கையும்,மன போராட்டத்தையும் மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல் அது.


கிட்டத்தட்ட கிழவனும்,கடலும் நாவலைப் போலவே கடற்பயணத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நாவல் திமிங்கல வேட்டை(Moby Dick).


நீண்ட நாட்கள் மீன் கிடைக்காத ஒரு கிழவன் தன்னை ஒரு  மீனவன் என நிரூபிக்க கடலுக்குள் பயணம் செய்து மீன் பிடித்து வரும்  வைராக்கிய உணர்வை அடிப்படையாக கொண்ட கிழவனும் கடலும் நாவலைப் போல,

திமிங்கல வேட்டை(Moby Dick) நாவல் ஒரு வெள்ளை திமிங்கலத்தால் (Moby Dick) தன் ஒரு காலை இழந்த ஆகாப் என்ற கப்பல் கேப்டனின் பழிவாங்கல் உணர்வை அடிப்படையாக கொண்டது.


இந்நாவலின் ஓரிடத்தில்


"உலகில் பணத்தால் அளக்க முடியாத பல விடயங்கள் இருக்கின்றன.

பழிக்குப்பழி வாங்குவதும் அதில் ஒன்று" என்று கூறுவான் ஆகாப் .


ஆகாப்பின் பழி வாங்கும் எண்ணமும்,வன்ம உணர்வும் தான் இந்நாவிலின் மைய விசை.


ஆகாப்புக்கும்,வெள்ளை திமிங்கலத்துக்கும் இடையே நிகழும் போராட்டம் என்பது நமக்கும் நமக்குள்ளிருக்கும் ஆசை மற்றும் அதிகாரத்திற்கு எதிரான போராட்டமாக கூட எடுத்துக் கொள்ளலாம்.


இங்கு மோபி டிக் என்பது மனிதன் ஓயாமல் தேடி அலையும் பணத்தின் குறியீடு.


மனித மனக்கடலில் ஓயாமல் எழும் ஆசை,அதிகார வெறியெனும் அலையின் குறியீடு.


வெள்ளை திமிங்கலமான மோபி டிக்கின் தோலுக்கு அடியில் உள்ள பிளப்பர் எனப்படும் எண்ணெய் இயந்திரங்களுக்கு எரி பொருளாக, உயவு எண்ணெய்யாகவும் பயன்படுவதாலும்,


மேலும் வெள்ளை திமிங்கலத்தின் வயிற்றுப்பகுதியில் உள்ள அம்பர்கிரிஸ் எனப்படும் பொருள் நறுமணப்பொருள் தயாரிக்கப் பயன்படுவதாலும் வெள்ளைத் திமிங்கலங்கள் அதிகம் வேட்டையாடப்படுவதாக சொல்லப்படுகிறது.


மோபி டிக் என்ற வெள்ளை திமிங்கலத்தை பிடிக்க பெக்கோட் எனும் கப்பலில்  இந்நாவலின் கதை சொல்லி இஸ்மாயில்,கேப்டன் ஆகாப்,பழங்குடி மனிதன் குயூகுயெக்,ஸ்டார்பக்,தெஸ்தாகோ ஆகியோர் பயணம் செய்கின்றனர்.


இறுதியில் மோபி டிக்  பெக்கேட் கப்பலை மோதி உடைத்து மூழ்கடித்து விடுகிறது.


மோபி டிக்கை பழிவாங்கவும்,

கொல்லவும் துடிக்கும் ஆகாப் இறுதியில்  கடலில் மூழ்கி இறந்து விடுகிறான்.


ஆகாப் மோபி டிக்கிடம் தோற்று விடுகிறான்.இயற்கையிடம் மனிதன் தோற்று தானே ஆக வேண்டும்.அது தான் இயற்கை வகுத்துள்ள  இறுதி நியதி.


மோபி டிக் கப்பலை மோதி கப்பலை கவிழ்த்து விடுவதால் இஸ்மாயில் தவிர கப்பலில் உள்ள அனைவரும் கடலில் மூழ்கி இறந்து விடுகிறார்கள்.


இஸ்மாயில் ஒருவன் மட்டும் பிழைத்து விடுகிறான்.அவன் பார்வையில் தான் இந்த நாவல் சொல்லப்படுகிறது.


1851ல் ஹெர்மன் மெல்வில் எழுதிய இந்நாவல் உலகின் தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.


இன்றும் அமெரிக்க இலக்கிய பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படுகிறது Moby Dick.


ஆங்கிலத்தில் மிக அதிகமான பக்க அளவுகளில் எழுதப்பட்ட பெரிய நாவலான Moby Dick தமிழில்  மோகன ரூபன்  என்பவரால் வெறும் இருநூறு பக்கங்களுக்குள் சுருக்கி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பேரிலக்கியமாகவே விரித்து எழுதியிருக்கலாம்.நன்றாக இருந்திருக்கும்.


மிக சுமாரான சுவாரஷ்யமற்ற மொழிபெயர்ப்பு தான்.ஆனாலும் யாரும் தமிழில் மொழிபெயர்க்காத சூழலில் மோகன ரூபன் அவர்கள் மொழிபெயர்த்திருப்பது  வரவேற்கக்கூடிய ஒன்று.


தமிழின் மிகச் சிறந்த மொழி பெயர்ப்பாளர்களாக நான் கருதும்

 ஜி.குப்புசாமி,சுகுமாறன், ஆர்.சிவக்குமார்,யூமா வாசுகி போன்றவர்கள் யாராவது மொழிபெயர்த்திருந்தால் இந்நாவல் வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும் என்பது என் எண்ணம்.


எனக்கு கிழவனும்,கடலும் நாவல் கொடுத்த திருப்தியை, சுவாரஸ்யத்தை இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு கொடுக்க தவறிவிட்டது என்றே கருதுகிறேன்.


போராட்டம் நாவலில் மட்டுமல்ல.இந்த நாவலை நான் தேடி கண்டுபிடித்து வாங்கியதுமே ஒரு போராட்டம் தான்.


ஒரு பெரும் கடலின் பிரம்மாண்ட பேரனுபவத்தையும்,வாழ்க்கையின் போராட்ட தரிசனத்தையும் தரக்கூடிய நாவல் இது.


ஒரு பெரும் கடலின் பிரம்மாண்டத்தை சுருக்கி தமிழில் ஒரு குளமாக காட்டும் முயற்சி இந்த திமிங்கல வேட்டை நாவல்.ஆனாலும்

நாவலை வாசிக்கும் போது நாமும் கடலில் பயணம் செய்யும் ஒரு பேரனுபவத்தை நாவல் கொடுக்கிறது.


வாசிக்க வேண்டிய மகத்தான நாவல்///


Velu malayan

20.3.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்