வெளியேற்றம்

 வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்.



அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் அடைபடாத மாற்று மெய்மைகளின் தேடல் தான் யுவன் சந்திரசேகர் எழுதிய அவரின் முதல் நாவலான குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலின் களம்.


அதன் தொடர்ச்சியாகவே வெளியேற்றம் நாவலையும் கருதலாம்.நடைமுறை வாழ்க்கையின் சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை தேட முனையும்,வாழ்க்கையின் சிடுக்குகளின் சிரமம் தாளாமல் குடும்பத்தை உறவுகளை விட்டு திருமணம் ஆன நாளன்றே வீட்டை விட்டு வெளியேறும் வேதமூர்த்தி,ஜய்ராம்,வயிரவன் செட்டியார்,மன்னாதி குற்றாலிங்கம், பால்பாண்டி,சிவராமன்,நிறைய பொம்பளளைங்களிடம் போனதால் நோய் வாங்கும் ராமலிங்கம் பிறகு அது யானைக்கால் என வேதமூர்த்தியால் சரி செய்யப்படுகிறது,கண் தெரியாத ஹரிஹரன், கோவர்த்தனம், என பல்வேறு மனிதர்களின் கதைகளை தேடிச் சென்று கேட்கும் சந்தானம் என எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு வித தொடர்பு இருப்பதை முடிச்சிடுகிறது நாவல்.


வீட்டை விட்டு வெளியேறும் மேற்கண்ட பெயர் கொண்ட எல்லாரும் சென்று சேர்வது வேதமூர்த்தி என்ற சாமியாரைத்தான்.


வீட்டைத் துறந்து இலக்கற்று திரியும் மனிதர்களை நாம் அன்றாடம் பார்க்கலாம்.அவர்களில் மனப்பிறழ்வுக்கு உள்ளாகி அழுக்கான உடையோடு அவர்களுக்குள்ளே பேசிக் கொள்ளும் மனிதர்களையும் கவனித்திருக்கிறேன்.


திருவண்ணாமலை,காசி போன்ற இடங்களில் காவி உடை உடுத்தி தங்களை சாதாரண மனிதர்களிலிருந்து விலகி யோகி என்ற பெயரில் வாழ்பவர்களையும் காணலாம்.உண்மையில் இவர்கள் முற்றிலும் இந்த வாழ்விலிருந்து தங்களை துண்டித்து கொண்டவர்களா?ஆனால் யுவன் இப்படியும் இருக்கிறார்கள் என்பதை தன் புனைவு வழியே நிறுவுகிறார்.


எது இதுபோன்ற மனிதர்களை குடும்ப அமைப்பிலிருந்து அறுத்து அலையவிடுகிறது.பெண் சுகம் மறந்து உடல் வேட்கை வடியாத வயதில் எப்படி எல்லோரும் லெளகீக வாழ்வை விட்டு வெளியேற முடியும்.புத்தர் கூட ஒரு பெண்ணுடன் புணர்ந்து விட்டு குடும்பம் நடத்தி விட்டு தானே ராஜ்ஜியத்தை விட்டு வெளியேறினார். மனதை அடக்கத் தெரிந்தவன் குடும்ப அமைப்பின் வேரிலிருந்து தன்னை அறுத்துக் கொள்ள முடிவது சாத்தியம் தான் என்பதை யுவனின் புனைவுகள் முன் வைக்கிறது.


இந்த நாவலில் குடும்ப வாழ்வின் கனமும்,பிற நெருக்கடிகளும் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான உந்துதலை தருகிறது.பிறகு அவர்களால் குடும்பங்களுடன் வந்து மீண்டும் ஒட்டி வாழாமல் தனி வாழ்க்கை நடத்துகிறார்கள்.


மனைவிக்கு தாலி கட்டி விட்டு அன்றைக்கே அவளை விட்டுப் பிரிந்து போக வேதமூர்த்திக்கு ஏற்படும் எண்ணத்துக்கு காரணம் என்ன?


தன் மூச்சை தானே கட்டுப்படுத்தி காசியில் அவர் தன்னை மூச்சற்ற மனிதராக மாற்றி மரணமடைவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன?

என வெளியேற்றம் நாவல் மனிதர்களின் வாழ்க்கை,மரணம் குறித்து பல்வேறு தரிசனங்களை முன்வைக்கக்கூடிய நாவல்.


"அறிவியலாகட்டும் ஆன்மிகவியலாகட்டும் இரண்டுமே வரையறைகள் உள்ள வெறும் நிலைப்பாடுகள்தான்.பொது மனதை வசீகரிப்பதற்கான தர்க்கமுறைகளை தொடர்ந்து வளர்த்து வருபவை. இவ்விரண்டு புலன்களையும் சமமாக கணக்கிலெடுத்து அல்லது சமமாக புறக்கணித்துவிட்டு தம் போக்கில் நகர்ந்து செல்வதற்கு கலை வடிவங்களுக்கு மட்டுமே திராணி உண்டு"இன்று நாவலின் பின்னுறையில் யுவன் சந்திரசேகர் குறிப்பிடுவார்.உண்மையில் அப்படிப்பட்ட அபார புனைவும் களமும்  கொண்ட ஒரு கலை வடிவப் படைப்பு வெளியேற்றம் நாவல்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்