இறுதி யாத்திரை

எம்.டி.வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலை முன் வைத்து:



நம்மைச் சார்ந்தவர்களின் மரணம் எதன் பொருட்டு நமக்கு பெரும் துயரையும் இழப்பையும் தருகிறது என்று பார்த்தால் அவருடன் நெருங்கி பழகிய நினைவுகளே அவர் இல்லாமை குறித்து நம் மனதை போட்டு உழற்றும்.அவர் உடன் பிறந்தவரே ஆனாலும் தொடர்ந்து அவரிடம் பேசவில்லை பழகவில்லை என்றால் அவர்களின் இருப்பும் இறப்பும் என்பது நமக்கு  ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.


தொடர்ந்து பேசுவதாலும் நினைவுறுதலாலும் மட்டுமே ஒருவருடைய உறவின் வலிமையை அவருடைய முகத்தை நம் அகத்திற்குள் பெருக்கிக் கொள்ள முடியும்.


நான் கடைசியாக வெடித்து அழுத மரணம் என் அண்ணன் மணிவண்ணனுடைய மரணம் மட்டும் தான்.அண்ணன் தம்பி உறவு தாண்டிய ஒரு புரிதலும் பற்றும் எனக்கும் அவனுக்கும் இருந்ததே அந்த அகவலிக்கு காரணம்.அதுதான் அவன் இழப்பை அவன் இல்லாமையை தொடர்ந்து நான் நினைக்க காரணம்.


நாம் இறந்த பிறகு நம் பிள்ளைகளால் உறவுகளால் நினைவு கூறப்பட,அழுது பெருக அவர்களுக்கு ஆஸ்தியும் நல்ல ஒழுக்க வாழ்க்கை நாம் வாழ்ந்ததையும் கொடுத்துச் செல்ல வேண்டும் என்பது குடும்ப வாழ்க்கையின் குறுகிய விதியாக இருக்கிறது.அப்போதுதான் நம் மரணத்திற்கு பிறகு நிலையாக நினைவு கூறப்படுவோம் என்ற நிலை உள்ளது.


எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய இறுதி யாத்திரை நாவல் புற்று நோயால் இறந்து போன ஒரு தந்தையின் மரணத்தை தன்னுடைய நான்கு மகன்களின் கண்ணோட்டத்தில் சொல்கிறது.


தன்னுடைய தந்தையின் இறப்பிற்கு வரும் நான்கு மகன்களும் தந்தையின் உடலைப் பார்த்து அழுவதில்லை.தந்தையின் உடல் வீட்டில் கிடத்தப்பட்டு இருக்கும்போதே பசி குறித்து சஞ்சலப்படுகிறார்கள்.சிகரெட் பிடித்துக் கொள்கிறார்கள்.


உற்று கவனித்தால் நிறைய மரண வீடுகளில் நடக்கும் அத்தனை துயர் வெளிப்பாடுகளும் ஒரு விதத்தில் மனித மனத்தின் பாவனைகளே.


தங்கள் கணவன்,தங்கள் தம்பி,தங்கை,மகள் இறந்த துக்கத்தை இன்னொருவரின் மரணத்தில் சென்று அழுது தீர்த்துக் கொள்பவர்களையும் நான் கவனித்திருக்கிறேன்.


புற்று நோயால் இறந்தபோகும் நாணு நாயர் அந்த காலத்திலேயே ரப்பர் தோட்டத்தில் கிளர்க்காக,வாத்தியாராக,போஸ்ட் ஆபீஸ் ஊழியராக வேலை செய்து பின் சிலோன் வரை சென்று அங்கேயும் தொழில் செய்து குடும்பத்தை எவ்வித பொருளாதார சுணக்கமும் இல்லாமல் நடத்தியவர்.ஆனால் மறுபுறம் சம்பாதித்த சொத்தை பெண்கள் விஷயத்தில் செலவழித்தவர்.



சிலோனில் அவர் தொழில் செய்யும்போது அங்குள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அவளுக்கு ஷீலா என்ற வாரிசையும் உருவாக்கி விடுகிறார்.நாணு நாயர் இறந்து அவருடைய உடல் வீட்டில் கிடத்தப்பட்டிருக்கும்போது அவரின் நான்கு மகன்களின் கண்ணோட்டத்தில் அவர்கள் குறித்த கடந்த கால நினைவுகளை விரித்துக் கொள்கிறார்கள்.


நான்கு மகன்களுக்குமே அவருடைய அப்பாவின் நடத்தை குறித்தும் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறித்தும் ஒரு பெரிய அதிருப்தி இருக்கிறது.அதனால்தான் அவர் இறப்பிற்கு அவர்கள் அழுவதும் இல்லை அவருடைய இறப்பை ஒரு நாளில் கழிந்து விடும் சடங்காகவே கருதுகிறார்கள்.


இந்த நாவலில் ஒரு பயணம் இருக்கிறது.தந்தையின் மரணத்திலிருந்து பின்னோக்கி அவர் உயிருடன் இருந்த போது தங்களுக்கு அவர் காட்டிய அன்பு,அவமானம் மற்றும் நான்கு பேரும் தங்கள் சுய அடையாளம் தேடி அலைந்தது,

காதல்,கல்யாணம் என நிறைய நினைவுகளை தொகுத்துக் கொள்கிறார்கள்.கிட்டத்தட்ட ஒரு நாயர் குடும்பத்தின் சிதைவையும் இந்த நாவல் முன் வைப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.


நாயர் குடும்பங்களின் அமைப்பு,அதன் சிக்கல்கள் அவர்களின் பொருள் பெருக்கும் பொருளாதார சூட்சமம் ஆகியவற்றை  நாவலில் பதிவு செய்துள்ளார் எம்.டி.வி.


இதே போல ஒரு பெண்ணின் மரணத்திற்கு பிறகு அவள் எவ்வாறு அவருடைய மகள் கணவனால் நினைவு கூறப்படுகிறாள் என்பதை சுமித்ரா என்ற நாவலாக கல்பற்றா நாராயணன் மலையாளத்தில் எழுதியுள்ளார் அதையும் கே.வி. ஷைலஜா தான் மொழிபெயர்த்திருக்கிறார்.


Velu malayan

08.09.2023

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்