நெடுஞ்சாலை

கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலை முன் வைத்து:



எதார்த்த வாத எழுத்துக்கள் என்றாலே தமிழில் ஆர்.ஷண்முகசுந்தரம் பூமணி அதன் பிறகு கண்மணி குணசேகரன், இமையம் போன்ற எழுத்தாளர்களின் வரிசை வரும். 

கண்மணி குணசேகரன் தான் சார்ந்த மண்ணையும் மக்களையும் இலக்கியமாக்குபவர்.எந்த வித ஜோடனைகளும்,சொற்பகட்டும் இல்லாதவை அவருடைய எழுத்து நடை.

ஒரு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் பணியாளர்களை கதாபாத்திரங்களாக வைத்துக் கொண்டு அந்த போக்குவரத்து துறை சார்ந்த வேலையில் இருக்கும் சிரமங்களையும் அதற்கு பின்னுள்ள உலகையும் இந்த நாவலில் நமக்கு காட்டுகிறார் கண்மணி குணசேகரன்.


கண்மணி குணசேகரன் தற்போது விழுப்புரம் போக்குவரத்து பணிமனையில் பணிபுரிவதால் அந்த துறை குறித்த விவரணைகளில் தரவுகளில் ஒரு நம்பகத் தன்மை உள்ளது.தான் பணிபுரியும் போக்குவரத்து பணி மனையையும் அதன் ஊழியர்களையும் வைத்து அவர்களின் தனித் தனி வாழ்க்கையை நாவலில் தொகுத்து காட்டுகிறார்.கதை நிகழும் இடத்தை,சூழலைத் தாண்டாத சொற்களும் சொலவடைகளும் எதார்த்த எழுத்துகளே நாவல் முழுதும்.

நாவலில் வரும் கம்பிளி,சந்திரா,பார்வதி பெண் பாத்திரங்கள் வலுவான சிருஷ்டிப்புகள்.அஞ்சலை நாவலில் வரும் அஞ்சலை போல.நெடுஞ்சாலை நாவலில் அய்யனாருக்கும் சந்திராவுக்குமான காதலும் உறவும் அவ்வளவு எதார்த்தம். ஏழைமுத்து பார்வதி இருவரின் குழந்தையின்மை பிரச்சனை, அதை குத்திக் காட்டி பார்வதியை சித்ரவதை செய்யும் ஏழை முத்துவின் தாய் கம்பளி பாத்திரம் கிராமங்களில் நாம் பார்க்கும் ஒரு மாமியாரின் பிரதி.

அன்றாடம் நாம் புழங்கக் கூடிய அரசு பேருந்து ஓட்டுனர்கள்,நடத்துனர்கள் நாம் பார்க்காத பணிமனையில் வேலை செய்யும் தொழில்நுட்ப பணியாளர்களின் பாடுகளை முன் வைக்கிறது நெடுஞ்சாலை. குறிப்பாக போக்குவரத்து பணிமனையில் நடக்கும் அரசியல் அதிகார விளையாட்டுகளை போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்கிறார் கண்மணி.

இந்த நாவலை வாசித்த பிறகு போக்குவரத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மீதான பார்வை நமக்கு மாறலாம்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்