குள்ளச் சித்தன் சரித்திரம்

யுவன் சந்திரசேகர் எழுதிய குள்ளச் சித்திரன் சரித்திரம் நாவலை முன்வைத்து:



என் பால்யம் கதைகள் ஊட்டி வளர்க்கப்பட்டவை.என் அம்மாவைப் பெற்ற என் பாட்டியின் பெயர் ஜானகி. மர்மங்கள் நிறைந்த ஈசன் காட்டு மொட்டையன் கதைகள்,தான் பார்த்த அலிபாபாவும் ஆயிரம் திருடர்களும் படத்தின் கதைகள் என எனக்கு கதைகளை சொல்லி வளர்த்தவர் என் பாட்டி.


எதார்த்தத்திற்கு நேர் எதிராக நடக்கும் அதி அற்புத கதைகள் தான் மனதிற்கு கிலேசம் ஊட்டுவதாக உள்ளது.

புற உலக வாழ்வின் எதார்த்த நிகழ்வுகளிலிருந்து ஒரு படி தள்ளி நடக்கும் அதிசயங்களுக்கு எப்போதுமே நம் அகம் ஆசை கொள்கிறது.


லௌகீக வாழ்வின் உபாதைகளுக்கு மனிதர்கள் கோயில்,குளம்,கடவுள், ஜோசியம் என எதன் மூலமாகவோ  பரிகாரம் தேடி அலைகிறார்கள்.


தங்கள் வாழ்வின் குறைகளை தீர்க்க ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து விடாதா என ஒரு வித நம்பிக்கையில் வாழ்கிறார்கள்.


நமக்கு கடவுள் வழிபாடு சார்ந்து,மறுபிறப்பு சார்ந்து நிறைய நம்பிக்கைகள் உண்டு.மறுபிறப்பு என்பது உண்மையில் உண்டா?நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து செயல்களும் தற்செயல்களின் கூட்டுத்தொகை தானா? நான் எனும் இந்த சரீரம் என் முன் பிறப்பின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம் தானே.


இப்படி முழுக்க ஒரு வித மர்ம முடிச்சுகளும்,துறுதுறுப்பான சம்பவங்களையும் தொகுத்து கூறும் ஒரு படைப்பாக இருக்கிறது யுவன் சந்திரசேகர் அவர்களின் குள்ளச் சித்தன் சரித்திரம் நாவல்.


வெவ்வேறு இடங்களில் இருக்கும் வெவ்வேறு மனிதர்களின் கதைகளை ஒரு ஒற்றைக் கண்ணியில் இணைக்கிறது இந்த நாவல்.சித்தர் ஒருவர் வெவ்வேறு மனிதர்களின் வாழ்வில் நிகழ்த்தும் நல்லூழ் தான் இந்த நாவலின் பொது மையம்.


நாவல் வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் கதைகளை விரித்து தொகுத்துக் கொள்கிறது.

பர்மா வெங்கடேஷ்யர் அவருடன் பர்மாவிலிருந்து வந்து விடும் வேம்பு(ஆணும் பெண்ணும் கலந்தவன்) கதை,பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் போலீஸாக இருக்கும் ஹாலாஸ்யம் அய்யர் மற்றும் அவருடைய குருவான ஶ்ரீ முத்துச்சாமி (வாமன சாமி) ஆகியோரின் கதை, குழந்தை வரம் கேட்டு அலையும் பழனியப்பன் -சிகப்பி (மீனாட்சி) கதை, காஞ்சிபுரம் படப்பை சென்னகேசவ முதலியார்- அமிர்தம்மாள் தம்பதிகளின் கதை,கும்பகோணம் ரெட்டைப்புலி தாயாரம்மாள்- அவருடைய மகள் அருந்தவம் கதை, பதினேழாம் நூற்றாண்டில் மிளகுக்கு ஒரு பவுண்ட்டுக்கு ஐந்து ஷில்லிங் அதிகம் கொடுக்க மறுத்து வியபாரம் செய்ய இந்தியா வந்து இறுதியில் கப்பலில் தொற்று ஏற்பட்டு இறந்து போகும் மெளண்ட்பேட்டன்(வைஸ்ராய் மெளண்ட்பேட்டன் அல்ல.இவர் வேறு) என்பவனின் கதை என நிறைய கதைகளுக்கு மையப் புள்ளியாக ஒரு சித்தர் இருக்கிறார். 


தன்னுடன் படித்த முத்துச்சாமி சித்தரின் வாழ்க்கையைத்தான் குள்ளச் சித்தன் சரித்திரம் என்ற பெயரில் ஹாலாஸ்யம் அய்யர் எழுதுகிறார்.பர்மா வெங்கடேஷய்யர் இறந்த பிறகு அவருக்கு வாரிசு இல்லாததால் சடகோபன் அய்யர் அவருடைய பெயரில் பர்மா வெங்கடேஷய்யர் என்ற நூலகத்தை அமைக்கிறார்.அதில் பழனியப்பன் வேலை செய்கிறார்.அந்த நூலகத்தில் தான் குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலை பழனியப்பன் படிக்கும் போது அது கிட்டத் தட்ட தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஒத்தவையாக உள்ளதை உணர்கிறார்.


பழனியப்பனின் பள்ளி நண்பன் செய்யது தனக்கு Confessions of a english dreamer என்ற புத்தகம் வேண்டும் என்பான்.அது மிளகு வியபாரம் செய்ய இந்தியா வரும் மெளண்ட் பேட்டன் என்பவன் எழுதியது.அது மீக்காமனின் யாத்திரை குறிப்புகள் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.



பழனியப்பன் படிக்கும் குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலுக்கும்,செய்யது கேட்கும் Confessions of a english dreamer புத்தகத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு.


முத்துச்சாமியும்,வியாபாரம் செய்ய இந்தியா வந்து மீண்டும் இங்கிலாந்து செல்லும் மெளண்ட் பேட்டனும் இறந்த பிறகு பழனியப்பனின் மனைவி சிகப்பி கருவுறுகிறாள்.சித்தர் சிகப்பிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கும் என்கிறார். அதில் முதல் குழந்தை பார்வை குறைபாடுடன் பிறந்து பிறகு சரி ஆகிவிடும் என்று பார்க்கக் கூறுகிறார்.


பண்டாரம் சாதியைச் சார்ந்த தாயாரம்மாவின் மகள் அருந்தவத்தின் மகள் திருமணத்திற்கு முன்பே கருவுறுவதால்  தன் மகளின் நிலை குறித்து சித்தரிடம் கூறி அழுகிறாள் தாயாரம்மாள்.


பாடலிபுத்திர அரசகுலத்தவளுக்கும் பாகனுக்கும் உருவாகும் சிசுவின் மறுபிறவி தான் அருந்தவத்தின் வயிற்றில் உருவாகும் சிசுவாக உருவாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது.


அருந்தவத்திற்கு குழந்தை பிறந்த பிறகு அவளை குழந்தை பிரசிக்காத கன்னி போல மாற்றி விடுகிறார் சித்தர்.


திருவண்ணாமலையில் இருக்கும் சித்தர்,மதுரையில் இருக்கும் யோகிஸ்வரர் சித்தர்,சோழவந்தானில் உள்ள முத்துசாமி,ரெட்டைப் புலியில் உள்ள பிச்சாண்டி ஐயர் என நான்கு பேரும் வெவ்வேறு வடிவில் அல்லது ஒரே வடிவில் இருக்கும் சித்தர்களா? கூடு விட்டு கூடு பாய்வதால் அவர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் இருக்கலாம் என்கிறது சித்தர் மரபு.


இந்த நாவல் ஒரு குறிப்பிட்ட மதத்தை,சாதியை ஓர்மை படுத்தாத நாவல்.


இதில் பழனியப்பனின் நண்பனாக முஸல்மான் செய்யது வருகிறான். ஹாலாஸ்யம் அய்யருக்கு குருவாக வரும் முத்துச்சாமி வள்ளுவன் சாதியைச் சார்ந்தவர்.பண்டாரம் சாதியைச் சார்ந்த அருந்தவத்திற்கு பிறக்கும் குழந்தை சென்ன கேசவ முதலியார் வீட்டில் வளர்கிறது.


அன்றாட எதார்த்தமும், மாயவினோதமும் பிண்ணிப் பிணைந்த ஒரு மாயப் புனைவு குள்ளச் சித்தன் சரித்திரம் நாவல்.


தனித்தனி சொட்டுகள் சேர்ந்து தாரையாவது போல வெவ்வேறு காலங்களில் தனித்தனி மனிதர்களின் கதைகளை தொகுத்து காட்டுகிறது நாவல்.


ஆன்மீகம்,மாந்திரீகம்,அமானுஷ்யம் 

போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும் நாவல் இது.சொல்லுக்கு அப்பாற்பட்ட ஒன்றை சொல்லால் விளக்க முடியுமா என்று யுவன் கேட்பது போல எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வு தொகுப்புகளின் புனைவு குள்ளச் சித்தன் சரித்திரம் நாவல்.


யுவனின் மொழி நடை,தர்க்க சிந்தனை விளக்கம் பிரமாதமாக உள்ளது. இது யுவனின் முதல் நாவல் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அழகியல் கொண்ட நாவல்.


யுவனைப் பற்றி ஒரு முறை எழுத்தாளர் ஜெயமோகன் பேசும்போது தன் மகன் அஜிதன்  தன்னிடம் இருக்கும் நான்கு கோடு போட்ட நோட்டில் அந்த கோடுகளுக்கு இடைப்பட்டு எழுதாமல் அந்த  வரையப்பட்ட  கோடுகளை தாண்டி ஒன்று மேலேயோ அல்லது அதற்கு கீழேயோ அந்த கோடுகளைத் தாண்டி எழுதுவான்.அந்த மீறல் குணம் தான் யுவனின் எழுத்துக்கள் என்று கூறியிருப்பார்.அதை குள்ளச்சித்தன் சரித்திரம் நாவலில் நீங்கள் காணலாம்.


குடும்பத்தை விட்டு ரயில்வே ஸ்டேஷனில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றும் பழனியப்பனின் தந்தை ராமநாத செட்டியார், ஹாலாஸ்யம் ஐயருக்கு உதவி செய்யும் சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சார்ந்த வக்கீல் நீலகண்டன்,ஏனாதி செங்கோட்டையில் உள்ள கோயில் பூசாரியாக இருக்கும் காது கேளாத வாய் பேச முடியாத ஏகாலி பெருமாள் என எல்லா கதாபாத்திரங்களுக்கும் நாவலில் ஒரு வித இணைப்பை கொடுத்துள்ளார் யுவன்.


யுவன் என்ற எழுத்தாளரின் உலகத்திற்கு நுழைய குள்ளச் சித்தன் சரித்திரம் நாவல் ஒரு சாளரம்.நண்பர்கள் அவசியம் வாசிக்க பரிந்துரை செய்கிறேன்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்