ஆலஹாவின் பெண் மக்கள்

 சாரா ஜோஷப்பின் ஆலஹாவின் பெண் மக்கள் நாவலை முன் வைத்து:



எப்பொழுதுமே குழந்தைகளின் பார்வையில் சொல்லப்படும் எந்த ஒன்றிலும் கள்ளமும்,கசப்பும் இருக்காது.அவர்கள் விஷம் நிரம்பாத வெள்ளை மனம் கொண்டவர்கள். ஆன்னி என்ற எட்டு வயது பெண் குழந்தையின் பார்வையில் சொல்லப்படும் ஆலஹாவின் பெண் மக்கள் நாவல் முழுக்க முழுக்க  கோக்கஞ்சறா எனும் மாற்றுலகை நம் முன் காட்டுகிறது.


கோக்கஞ்சறா என்ற விலக்கப்பட்ட மனிதர்களும்,மலம் அள்ளுபவர்களும் வாழும் ஒரு ஊரை சாரா ஜோஷப் உருவாக்கி அதில் முழுக்க பெண்களையே உரையாட விட்டிருக்கிறார்.


ஒரு காலத்தில் பிணம் புதைக்கும் இடமாக இருந்த இடம் தான் ஆன்னியும் அவளது குடும்பமும் வசிக்கும் கோக்கஞ்சறா என்ற இடம்.நாவலின் தொடக்கத்தில் ஆன்னியின் பாட்டி அவரை விதை நட மண்ணை தோண்டும் போது எலும்புத்துண்டு வரும்.அவரைச் செடியும்,ஆலஹாவின் மந்திரமும் நாவலில் குறியீடுகளாக வருகிறது.


நாவலில் ஆன்னியின் சித்தப்பா குட்டி பாப்பன்(பிரான்ஸிஸ்),குஞ்சன் காம்பவுண்டர் என சில ஆண்கள் வந்தாலும் முழுக்க முழுக்க பெண்களின் அவலச்சுவை நிரம்பிய வாழ்வைத்தான் இந்நாவல் விவரிக்கிறது.


சிறு வயதிலேயே வடகிழக்கு மாநிலம் ஓடிவிட்ட ஆன்னியின் அப்பா,காச நோயினால் படுத்தபடுக்கையாக இருக்கும் ஆன்னியின் சித்தப்பா குட்டி பாப்பன் என ஆண்களின் ஆதரவு இல்லாத  வாழ்வை வாழும் பெண்களின் உலகை காட்டுவது தான் இந்த நாவலின் பலம்.


பட்டாளத்திற்கு பட்டன் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்கிறார்கள் ஆன்னியின் சின்னம்மாவும் சிய்யம்மாவும். ,குஞ்ஞிலை ஆன்னியின் பெரிய அத்தை.ஆன்னியின் தாத்தா அந்தோணி குன்னம் குளம் இட்டி என்னும் நாற்பதைக் கடந்த பெரும் பணக்கார பட்ட மரத்திற்கு குஞ்ஞிலையை கட்டிக் கொடுக்கிறார்.கல்யாணமான ஒரே வாரத்தில் இட்டி நோய்வாய்ப்பட்டு இறந்து போகிறான்.அந்த ஏழு நாளும் குஞ்ஞிலை இட்டியின் கன்னத்தில் கன்னம் வைத்து வெறுமனே அவனை அணைத்துறங்கியது மட்டுமே அவள் அவனிடம் பெற்ற சுகம்.


குஞ்ஞிலை பாத்திரம் அசோகமித்திரனின் தண்ணீர் நாவலில் வரும் டீச்சரம்மா கதாபாத்திரத்தை நியாபகப்படுத்தும் ஒன்று.


குஞ்ஞிலை விதவையாகி வீட்டில் இருக்கும் போது குஞ்ஞிலையின் அம்மா நிறைமாத கர்பிணியாக இருக்கிறாள்.அவளுக்கு குஞ்ஞிலை பிரசவம் பார்ப்பதால் அவள் பிரசவம் பார்ப்பதில் கை ராசியானவள் என குஞ்சன் கம்பவுண்டரின் தயவில் கோக்கஞ்சறா முழுவதற்கும் குஞ்ஞிலை தான் பிரசவம் பார்க்கும் மருத்துவராகிறாள்.


குஞ்ஞிலையும்,குஞ்சனும் 

ஒரு பெண்ணிற்கு பிரசவம் பார்க்கும் போது அந்த பெண்ணின் வயிற்றிலேயே சிசு இறந்து விடுவதால் டாக்டர் குரியப்பன் மேலிடத்தில் சொல்லி குஞ்சப்பனை பணி நீக்கம் செய்து விடுகிறார்.கோக்கஞ்சறா மக்களுக்கு தன் சொந்த காசில் மருந்து வாங்கி வைத்தியம் பார்த்த குஞ்சன் கம்பவுண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான்.


குஞ்சன் கம்பவுண்டர் பெரிய அத்தையை நேசித்தால் குஞ்சனின் மனைவி கொச்சு மேரி என்ன பண்ணுவாள் என்ற ஆன்னியின் வார்த்தை வழியே குஞ்ஞிலைக்கும் குஞ்சன் கம்பவுண்டருக்கும் இடையே இருந்த மூடிய உறவை சொல்லி விடுகிறார் சாரா ஜோஷப். 


நாவலின் இறுதியில் கோக்கஞ்சறாவில் பெய்யும் கனமழையும்,பெரும் காற்றிலும் ஆன்னியின் வீடும்,அவரைப்பந்தலும் சரிந்து விடுகிறது.நெஞ்சை பறிக்கும் ஒரு இருமலின் இறுதியில் ரத்தம் தோய்ந்த ஒரு சளிக்கட்டி ஆன்னியின் வாயிலிருந்து வந்து விழுகிறது. தன்னுடைய சித்தப்பன் பிரான்ஸிஸ்(குட்டி பாப்பனின்) காசநோய் ஆன்னிக்கும் வந்து விடுகிறது. 



நாவல் முழுக்க அவரைக் கொடியும் ஆலஹாவின் நமஸ்காரமும் குறியீடுகளாக வருகிறது.ஆன்னியின் வழியாக சொல்லப்படும் இந்த நாவல் முழுக்க முழுக்க கோக்கஞ்சறா பெண்களின் நிறைவேறாத வாழ்வின் கசப்பினைப் பேசும் ஒரு கலைப் பிரதி.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்