என் கதை

 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் என் கதை நூலை முன்வைத்து:



தன் வரலாறு நூல்களில் முதன்மையாக கருதப்படுவது காந்தியின் வாழ்க்கை வரலாறு நூலான சத்திய சோதனை.அதற்குப் பிறகு உ.வே. சாமிநாதையர் எழுதிய என் சரிதம் நூலைச் சொல்வார்கள்.இந்த நூல்களைத் தொடர்ந்து நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதிய என் கதையும் ஒரு சிறந்த தன் வரலாற்று நூல் என எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.


தன் வரலாறு நூல்களின் தரமும் தகுதியும் அதை எழுதுபவர்களின் வெளிப்படைத் தன்மையையும் உண்மைத் தன்மையையும் பொறுத்தது.


நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பள்ளியின் என் கதை என்பது அவருடைய எதார்த்தமும் நேர்மையும் கலந்த வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பு என கூறலாம்.


ஒரு ஏட்டுவின் மகனாக பிறந்து தந்தையின் ஆசைக்கிணங்க ஒரு அரசு வேலையில் சேராமல் ஓவியக் கலைஞராக, விடுதலைப் போராட்ட வீரராக திகழ்ந்த ராமலிங்கம் பிள்ளை கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்ற பாடலை எழுதியதால் ராஜாஜியால் பாரதியின் இழப்பை ஈடு செய்ய வந்தவர் என்று பாராட்டப்பட்டவர்.


தன் தன் தாயின் அஞ்சாத குணத்தை சொல்லும் இலுப்பு மர பிசாசு என்னும் அத்தியாயம் இந்த நூலில் சுவாரஸ்யமான ஒன்று.


தான் விரும்பாத முத்தம்மாள் என்ற பெண்ணை தன் தந்தையின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொண்டதையும்,பின் அவள் மீது பரிவு வந்து அவளுடன் சேர்ந்து வாழ்ந்ததையும் அவர்கள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாததால் முத்தம்மாள் இறந்த பிறகு அவளின் தங்கை சவுந்தரம்மாளை திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொண்டது வரையான அவரது திருமண வாழ்க்கை குறித்த அத்தியாயம் சுவாரஸ்யமானது.


சிம்சன் துரையின் இறந்த மகளின் புகைப்படத்தை பார்த்து அந்த புகைப்படத்திற்கு உயிர் உள்ள சிறுமியை போல உயிர் கொடுத்து வரையும் ஓவியத்திற்காக சிம்சன் துறையிடம் இருந்து அவர் பெரும் 675 தொகை,அவரை பள்ளிக் காலத்தில் தன் ஒவியத்திறமையை வளர்த்து விட்ட எலியட் துரை என இரண்டு வெள்ளையர்கள் என் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் என நன்றியுடன் பதிவு செய்கிறார் நாமக்கல் கவிஞர்.


கரூருக்கு காந்தி வருகை புரிவது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதை எதிர்த்து நேரடியாகவே கோயம்புத்தூரில் தங்கி இருந்த காந்தியை பார்த்த முறையிட்டு காந்தியை கரூருக்கு அவர் வரவழைத்த சம்பவத்தை மிக சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளார் நாமக்கல் கவிஞர்.


புதுச்சேரியில் பாரதியாரை நேரில் பார்த்த நிகழ்வையும்,பாரதியாரை பாட்டு பாடச் சொல்லி கேட்டபோது அவர் மறுத்துவிட்டு பின் நாமக்கல் கவிஞர் தூங்கிக் கொண்டிருக்கும் போது படுக்கையிலிருந்து அவரை எழுப்பி பாரதியார் பாடிய சம்பவத்தை பெருமிதமாக கூறுகிறார் நாமக்கல் கவிஞர்.


பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதிய உரை முரண்பாடானது என கூறி அதற்கு சரியான விளக்க உரையும் அளித்து அவருடைய ஆசான் ஆனையப்ப முதலியாரிடம் நீ இன்று முதல் கரிமேலழகர் என பாராட்டப்பட்டதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நாமக்கல் கவிஞர்.


மைசூர் மாத்வ குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட வரதனுடனான பள்ளி நட்பு, வெங்கட வரதன் சொந்தக் கார பெண்ணான சீதா என்பவளுடன் ஏற்பட்ட காதல்,மாணிக்க நாயக்கருடன் டெல்லிக்கு சென்றிருந்தபோது ஆட்டுக்கறி என நினைத்து மாட்டுக்கறி சாப்பிட்ட சம்பவம் என நிறைய சுவாரஸ்யமான வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாக இருக்கிறது இந்த நூல்.


Velu malayan

6.9.2023

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்