நாகம்மாள்

 ஆர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் நாவலை முன் வைத்து:



ஒரு குடியானக் குடும்பத்தின் சிதைவை இவ்வளவு எதார்த்தமும்,குரூரமும் கலந்து எழுதப்பட்ட தமிழின் முதல் படைப்பு இதுவாகத் தான் இருக்கும்.


பழைய பங்காளி சண்டையின் பகை தீர்க்கும் ஒரு கதை என்று மேலோட்டமாகப் பார்க்க தோன்றும் இந்த நாவல் நிலப் பற்றினால் மனிதர்களுக்குள் உருவாகும் பொறாமை,பகைமை, குரூரத்தை அதன் சூடு குறையாமல் எழுத்தில் பிரதிபலிக்கிறது நாவல்.


முழுக்க முழுக்க ஒரு கொங்கு வாழ்வை ஆதாரமாகக் கொண்டு அதன் அசல்  நிலப்பரப்பையும் குரோதம், பொறாமை,மண் பிடிக்கும் சூழ்ச்சி குணம் நிரம்பிய மனிதர்கள் என எவ்வித மிகைப்பூச்சும் இல்லாமல் படைப்பாக்கியிருக்கிறார் ஆர்.ஷண்முகசுந்தரம்.


கணவனை இழந்து  ஒரு பெண் குழந்தையுடன் விதவையாக நிற்கும் நாகம்மாள் தன் கொழுந்தன் சின்னப்பனுடன் ஒரே வீட்டில் கூட்டாக வாழ்ந்தாலும் அவளுக்குள் ஒரு வித இழப்புணர்வும்,சுதந்திரமற்ற ஒரு இறுக்கமும் இருப்பதை எந்நேரமும் தன் கொழுந்தன் சின்னப்பன் மனைவி ராமாயியை அவள் திட்டிக்கொண்டும்,

அவளிடம் கடுகடு என இருப்பதை காணலாம்.கணவனை இழந்த ஒரு பெண் அப்படி புறத்தில் எந்நேரமும் ஒரு வித வெப்ப கோலத்தில் இருப்பது சமூகத்திற்கும் தனக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பொய் வேலி.


இதேப் போலத் தான் ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் சிறுவயதிலேயே  தன் கணவனை இழந்த கங்கம்மா நாவலின் கடைசி வரை உடன் இருப்பவரை சபித்துக் கொண்டே இருப்பாள்.


நாவலில் வரும் கெட்டப்பன் பாத்திரம் அறிமுகப் படுத்தப்படும் போதே ஒரு மூர்க்கமான ஆளாக காவாளித்தனம் செய்யும் கவுண்டனாக சித்தரிக்கிறார் ஆர்.ஷண்முகசுந்தரம்.



நாவலில் நாகம்மாளுக்கு உள்ளூரவே நிலத்தை பிரித்துக் கொண்டு வாழலாம் என்ற ஒரு அக ஆசை இருக்கிறது.அந்த ஆசைத்தீயை அதிகப்படுத்தி எரிய வைக்கும் உலை கொல்லர்களாக மணியக்காரனையும் கெட்டியப்பனையும், நாராயணசாமி முதலியாரையும் எடுத்துக் கொள்ளலாம்.


நாவலில் நாகம்மாளுக்கும் கெட்டியப்பனுக்கும் இருக்கும் உறவை உடல் இச்சை அளவில் காட்டாமல் ஒரு வித பூடகமாகவே  காட்டியுள்ளார். 


மடுவுத் தோப்புக்குள் ஒரு இரவில் நாகம்மாளும் கெட்டியப்பனும் சின்னப்பனிடமிருந்து நிலத்தை எப்படி பிரிப்பது என்று பேசிக்கொண்டு இருக்கும் போது நாகம்மா வீட்டிற்கு புறப்பட தயாராகும் போது கெட்டப்பனின் கை அவளை தொட நீளும் ஆனால் திடீரென கெட்டியப்பன் அவளைத் தொடாமல் கைகளை குறுக்கிக் கொள்வான்.உண்மையில் ஒரு விஷயத்தின் கனம் அதை சொல்லி விடுவதில் இல்லை.சொல்லாமல் விடுவதில் தான் இருக்கிறது.


நாகம்மாளின் ஆசை என்பது சொத்தை பிரித்துக் கொண்டு வந்து  தனியாகவோ அல்லது கெட்டியப்பனோடு வாழ்வது தான்.ஆனால் சொத்து வெறியும்,சூழ்ச்சியும் சின்னப்பனை கொலை செய்ய வைத்து விடுகிறது.


நாகம்மாளும் பிற மனிதர்களும் வாழ்ந்த சிவியார் பாளையம் கொங்கு வட்டார கிராமம் என்றாலும் நான் பார்த்த மனிதர்களின் நான் புழங்கிய கிராம வாழ்வை நியாபகப்படுத்துகிறது.


என் பால்ய வாழ்வு கொங்கு வேளாளர் மக்களுடன் கழிந்த ஒன்று.நான் வளர்ந்து படிப்பு வேலை வாய்ப்பு என என் கிராமத்தில் இருந்து என் பிடி நகரம் நகர்ந்தது வரை அவர்களோடு தான் என் பெரும்பாலான வாழ்வை உறவாடி கழித்திருக்கிறேன். நிலம் தான் அவர்களின் வாழ்வு.அவர்களின் வாழ்வு என்பதே நிலத்திருக்கும் வீட்டு வாசலுக்கும் இடைப்பட்ட தொலைவு.கூட்டுக் குடும்பங்களை, கூடியிருக்கும் அண்ணன் தம்பிகளை சொத்து பிரித்து விடுகிறது.இந்திய மரபில் சொத்து என்பது பகையின் ஊற்று.பூசல்களின் பூதம்.


 நாவலில் நாகம்மாளையும், காளியம்மாளையும் எதிர்மறை குணத்துடன் காட்டும் சண்முகசுந்தரம் காளியம்மாவின் மகள் ராமாயியை அப்படிக் காட்டவில்லை.


நாகம்மாளின் அபிலாஷை அவளது குடும்பத்தில் இரண்டு விதவைகளையும் ஒரு அனாதை குழந்தையையும் உருவாக்கி விடுகிறது.


நாகம்மாள் நாவலில் பக்கம் 18ல்


 "பெண்கள் எல்லாம் மாலையிலேயே தலைக்கு தயிர் தேய்த்து குளித்து முகத்திற்கு மஞ்சள் பூசி மினுமினுப்பாக கொண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்" என்ற ஒரு வரி வரும். இதில் தலைக்குத் தயிர் தேய்த்து குளிக்கும் வழக்கத்தை என் அப்பாவைப் பெற்ற பாட்டி செய்து நான் பார்த்திருக்கிறேன்.தயிரை அதன் ஆடையுடன் எடுத்து தலைக்கு தேய்த்து குளிப்பதைக் கண்டிருக்கிறேன். பெரும்பாலும் துறிஞ்சி மரத்தின் இலைகளை பறித்து கல்மீது தேய்த்து நுரை பொங்க எடுத்து தலைக்கு Shampoo வாக பயன்படுத்தியதை பார்த்திருக்கிறேன்.நானும் பயன்படுத்தியிருக்கிறேன்.


இந்த நாவல் எழுதப்பட்ட காலம் 1942.ஒரு நாவல் அந்த நாவல் நிகழும் காலம், அந்த மக்களின் பழக்கங்களை,வட்டார வழக்கை அப்படியே படியெடுத்து காண்பிப்பது தான் அந்த படைப்பின் மீது உண்மைத்தன்மையை உண்டுபண்ணும். 


புதுமைப்பித்தனிடம் காணப்படும் சுயசாதிய கதாபாத்திரங்களின் வடிவமைப்பும்,பகடியும் ஆர்.ஷண்முகத்திடமும்  இருக்கிறது.


நாவலில் வரும் நாராயணசாமி முதலியார் பாத்திரத்தை மணியக்காரரிடம் ஊர் விஷயங்களை கோள் சொல்லி,அவரைப் புகழ்ந்து அவரிடம் கடன் வாங்கும் பாத்திரமாகவும்,பிறரை கெடுக்க நினைக்கும் துற்குணம் கொண்டவனாக கட்டமைத்திருக்கிறார்.


கொங்கு வட்டார வாழ்வினை முன்வைக்கும் அசல் கலைப் பிரதி இந்த நாவல்.


Velu malayan

17.8.2023

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்