பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு

 பறவைக்கு கூடுண்டு அனைவருக்கும் வீடு லாரி பேக்கரின் கனவு நூலை முன் வைத்து: 



இங்கிலாந்தில் பிறந்து தன்னுடைய இந்திய நண்பர் P.J. சாண்டியின் சகோதரி மருத்துவர் எலிசபெத் என்பவரை மணந்து கொண்ட லாரி பேக்கர் குறித்தும் அவர்களது வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி எழுதிய நூல் இது.


காந்திய கட்டிடக் கலைஞர் என அழைக்கப்படும் லாரி பேக்கர்

"மக்கள் நலனுக்காகக் கட்டப்படும் கட்டிடங்கள் மக்களின் வாழ்வுச் சூழல், வசதி,இவற்றைப் பிரதிபலிப்பதாக அந்த அந்த இடங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டப்படுவது நல்லது எனும் காந்தியடிகளின் அறிவுரைக்கேற்பவே லாரி தன் கட்டிடங்களை வடிவமைத்தார்.இது தான் இந்தியா போன்ற வறுமைப்பட்ட நாடுகளுக்கு ஏற்ற கட்டிட வடிவமைப்பு முறை என லாரி ஏற்றார்.


மேற்கத்திய சூழலுக்கும்,பருவ நிலைக்கும்,தேவைகளுக்குமாக வடிவமைக்கப்படும் கட்டிடங்கள் இந்தியச் சூழலுக்கு சுமையே என்று கருதினார்"


1948ஆம் ஆண்டு லாரி பேக்கர் எலிசபெத் பேக்கரை திருமணம் செய்து கொண்ட பின் இமயமலையில் உள்ள பித்தோராகர் என்ற இடத்தில் தன் கணவருடன் தொழு நோயாளிகளுக்கு மித்ர நிகேதன் என்ற நட்பு இல்லத்தை நிறுவி 1963 வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அங்குள்ள பழங்குடிகள் மற்றும் இதர மக்களுக்கும் சேவை செய்த நிகழ்வு,பின்  அங்கிருந்து கேரளாவின் வாகமனுக்கு குடி பெயர்ந்தது என தங்களுடைய வாழ்க்கை சித்திரத்தை இந்நூலில் முன் வைக்கிறார் எலிசபெத் பேக்கர்.


தனி மனிதத் தேவைகள் என்பது இந்தியாவின் பல்வேறு பட்டசூழல், வேறுபடும் பண்பாட்டு உரு மாதிரிகள், வாழ்க்கை முறைமைகளில் இருந்து தோன்றுவதாகும்.அவற்றை நுட்பமாக உணர்ந்து உள்ளூர் சாதனங்களைப் பயன்படுத்தி பல வகைகளாகவும் வெவ்வேறு வடிவங்களாகவும் வெளிப்படுத்தக் கூடிய கட்டிடக்கலை மூலம் மட்டுமே மேற்கண்ட தேவைகளை நிறைவேற்ற முடியும் என லாரி பேக்கர் கருதினார்.ஓரிடத்தின் கட்டிடக்கலையைப் பெயர்த்தெடுத்து இன்னொரு இடத்தில் அப்படியே செயல்படுத்துவது என்பது கட்டிடக்கலையின் மூலம் நாடப்படும் அடிப்படை வாழ்விடத் தேவைகளையே குலைத்து விடும் என லாரி பேக்கர் கருதுகிறார்.


திருவனந்தபுரத்தில் மட்டும் அவர் ஆயிரம் வீடுகளுக்கு மேல் கட்டியுள்ளார்.இதல்லாமல்,40 கிறிஸ்தவ தேவாலயங்கள்,எண்ணற்ற பள்ளிக்கூடங்கள்,நிறுவனங்கள், மருத்துவமனைகளும் கட்டியிருக்கிறார்.


நீங்கள் மேற்கிலிருந்து அறிவையும், தகுதியையும் கொண்டு வருகிறீர்கள், ஆனால் எங்கள் தேவைகளை உங்களால் புரிந்துகொள்ள இயலாமல் அதனால் எந்த பயனும் இல்லை. உண்மையில் பம்பாய் போன்ற பெருநகரங்களில் அல்ல,கிராமத்தில் அதிலும் எளிய மக்களுக்கு தான் நீங்கள் அதிகம் தேவை படுவீர்கள்” என்ற காந்தியின் வார்த்தைக்கு ஏற்ப கட்டிடக் கலையில் எளிமையை கையாண்டவர் லாரி பேக்கர். 



அதனால் எழுத்தாளர் ஜெயமோகன் லாரிபேக்கரின் கட்டிடக்கலையை காந்தியக் கட்டிடக்கலை என்று சொல்லலாம்.ஆனால் அவர் உருவாக்கிய கட்டிடங்களை காந்தி கற்பனைசெய்திருக்க மாட்டார். காந்திக்கு அழகுணர்வு என தனியாக ஒன்று கிடையாது.எது சிக்கனம் நிறைந்த பயன்தருவதோ அதுவே அழகானது என்பதே அவரது கொள்கை.ஆனால் லாரிபேக்கர் வேறுவகையானவர்.அவருக்கு அழகும் சிக்கனமும் பயனும் அழகும் ஒரேபுள்ளியில் சந்திக்கவேண்டும்.அவர் கண்டடைந்த வீடுகள் அத்தகையவை" என்கிறார்.


“பாம்பக்குப் புற்றுண்டு,பறவைக்குக் கூடுண்டு.மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை” என்ற விவிலியக் கனவை நனவாக்கும் மகத்தான லட்சியம் வடிவம் கொண்டு குறைந்த செலவில் ஏழைகளும் வீடு கட்ட வேண்டும் என்ற கட்டிடக்கலை கருத்தியலை இந்தியாவில் விதைத்த பெருமை லாரி பேக்கருக்குண்டு.


கிட்டத்தட்ட லாரி பேக்கர் தம்பதிகளின் வாழ்க்கை குறிப்புகளை முன் வைக்கும் இந்த புத்தகம் அவர்களின் திருமணம்,குழந்தை பிறப்புகள், அவர்கள் கட்டிய மருத்துவமனைகள், அவர்கள் புரிந்த சேவைகள் என அவர்களைப் பற்றிய முழு சித்திரத்தை முன் வைக்கிறது.


Velu malayan

28.8.2023

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

வீடில்லா புத்தகங்கள்