பாரதி நினைவுகள்

 ம.கோ.யதுகிரி அம்மாள் எழுதிய பாரதியின் நினைவுகள் நூலை முன்வைத்து:



பாரதியின் தோழராக விளங்கிய மண்டயம் ஸ்ரீ.ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் மகள் யதுகிரி எழுதிய பாரதி நினைவுகள் நூல் பாரதி வாழ்க்கை வரலாறு குறித்து எழுதப்பட்ட நூல்களில் மிக முக்கியமானது என்கிறார் க.நா.சு.


“எனக்குத் தெரிந்த அளவில்,

வ.ராவின் பாரதியார் சரித்திரமும்,

செல்லம்மாளின் தவப்புதல்வர் பாரதியாரும்,யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகளும் சிறந்தவையாகத் தோன்றுகின்றன” என்கிறார் க.நா.சு.


பாரதி புதுவையில் இருந்தபோது அவருடன் நெருங்கி பழகியுள்ளது யதுகிரியின் குடும்பம்.யதுகிரி சிறு பெண்ணாக இருக்கும் போது பாரதியாருடன் பழகிய பசும் நினைவுகளின் தொகுப்பு இந்நூல்.


பாரதி நினைவுகள் புத்தகம் மிக முக்கியமான பாரதியார் குறித்த ஆவணம் என்று கூறப்படுவதற்கு காரணம் அது யதுகிரி என்ற ஒரு சிறு பெண்ணின் பாசாங்கு கலக்காத பார்வையில் எழுதப்பட்டது என்பதால்.


ஒருவரின் வரலாற்றை  வளர்ந்தவர்கள் எழுதும் போது அதில் ஒருவித மேதாவித் தனமும் மிகப்படுத்தலும் இருக்கும்.ஆனால் இந்த பாரதி நினைவுகள் புத்தகத்தில் யதுகிரி பாரதியுடன் கை பிடித்து நடந்ததை,அவருடன் கவிதை வாசித்ததை,அவர் எழுதிய பாடல்களுக்கு தாளமிட்டு பாடியதை என நிறைய விஷயங்களை எதார்த்த தொனியில் நினைவு கூறுகிறார்.


மாபெரும் கவி எனப் போற்றப்படும் பாரதியின் வாழ்க்கை ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கைக்கு உண்டான அத்தனை துயரங்களையும் கொண்டது.பொருளாதார பிரச்சனையும்,மனைவி செல்லம்மாள் உடனான பிணக்கும் குறித்து யதுகிரி இதில் பதிவு செய்கிறார்.


"பாரதியார் வாயால் பெண்கள் சுதந்தரம் பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தம் நோக்கத்தின் படியேதான் நடக்கும்படி செய்தார்.செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே"என்பதையும் யதுகிரி நூலில் பதிவு செய்கிறார்.


ஸ்ரீ பாரதியாருக்குச் சங்கீதக் கச்சேரிகளைக் காட்டிலும் பாம்பாட்டி, வண்ணான்,நெல் குத்தும் பெண்கள், செம்படவர்கள்,உழவர் இவர்களுடைய நாடோடிப் பாட்டுக்கள் என்றால் மிகவும் இஷ்டம்.ஒருநாள் மாலை புதுச்சேரிக் கடற்கரையில் எங்கள் வீட்டுக் குழந்தைகள் நாங்கள் ஆறு பேர், ஸ்ரீமதி செல்லம்மா,பாரதியார் ஆக எட்டுப் பேரும் வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தோம்.செம்பட வர்கள் மீன்களை நிரப்பிக்கொண்டு, சந்தோஷமாகப் பாடியபடி தோணியைக் கரையேற்றிக் கொண்டிருந்தார்கள். எங்களோடு பேசிக் கொண்டிருந்த பாரதி யார் அவர்களுடைய பாட்டுக்குச் ‘சபாஷ்’ சொல்ல ஆரம்பித்தார். நான், “இது என்ன வேடிக்கை! அவர்கள் அர்த்தம், ராகம் ஒன்றும் இல்லாமல் பாடும் பாட்டை நீர் இவ்வளவு மெச்சுகிறீரே! எங்களுக்கு ஒன்றுமே புரிகிறதில்லை” என்றேன். 


செல்லம்மா:- அவர் சுபாவம் உனக்குத் தெரியாதா? வீதியில் மாரியம்மன் எடுத்துக் கொண்டு உடுக்கை அடிப்பவன் வந்தால் இவர் கூத்தாடுகிறார். தன் நினைவே கிடையாது. இப்போது சாயங்கால வேளை, கடற்கரை, அலைகளின் ஒலி, இதோடு தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு, கேட்கவேண்டுமா? 


உடனே பாரதி எழுந்தார்.ஒரு பென்சில், காகிதம் எடுத்துக்கொண்டு அந்தச் செம்படவர்களிடம் போனார். அங்கே இருந்த ஒரு கிழவனை அவர்கள் பாடும் பாட்டை அடி அடியாகச் சொல்லும்படி சொன்னார். அதில் இருக்கும் பிழைகளைத் திருத்தி எழுதிக்கொண்டு எங்களிடம் வந்தார். “நீங்கள் எல்லாரும் என்னைக் கேலி செய்கிறீர்களே; பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்தச் செம்படவன் எனக்கு உபதேசம் பண்ணினான்” என்றார் பாரதியார். 


செல்லம்மா: ஆகா! நீங்கள் பறையன்முதல் செம்படவன் வரையில் எல்லாருக்கும் சிஷ்யர்தாம் என்று செல்லம்மா கேலி செய்யும் நிகழ்வை குறிப்பிடுகிறார்.


வீட்டில் சமைக்கவே அரிசி இல்லாத போது குருவிக்கு அரிசியை அள்ளி வீசுவதும்,குளிரில் நடக்கும் பாம்பாட்டிக்கு தன்னுடைய மேல் அரை வேட்டியை அவுத்து கொடுத்துவிட்டு செல்வதும் என பாரதியின் பரிவு குணத்தை யதுகிரி ஆச்சர்யமாக குறிப்பிடுகிறார்.


ஒரு கட்டத்தில் பாரதி யாருடனும் பேசாமல் மௌன விரதம் என்ற பெயரில் புதுவை கடற்கரையில் லாகிரி வஸ்துகளுக்கு (கஞ்சாவுக்கு) அடிமையாகி ராப்பகலாக அலைந்து திரிந்திருக்கிறார் என்ற தகவலும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பாரதியின் இரண்டு பெண் குழந்தைகளான தங்கம்மா மற்றும் சகுந்தலா இருவரில் தங்கமா வயதுக்கு வந்து விடுவதை பாரதியார் வெளியில் சொல்லிவிடுகிறார்.

அதற்கு செல்லம்மாள் நீங்கள் எல்லாம் ஒரு பிராமணனா பூணூல் போட்டுக் கொள்வதில்லை.அம்பட்டன் செய்வது போல் வீட்டிலேயே உட்கார்ந்து நீங்களே சவரம் செய்து கொள்கிறீர்கள் என கடிந்து கொள்வதாக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒரு கட்டத்தில் பாரதியின் மீது பிணக்கு ஏற்பட்டு புதுவையிலிருந்து கடையத்திற்கு போய் விடலாம் என்று செல்லம்மா  கூப்பிடும் போது அங்கே போக மறுத்த பாரதியார் அப்படி என்னை மீறி நீ அங்கே போனால் நான் மறுமணம் செய்து கொள்வேன் என்று கூறி செல்லம்மாவை மிரட்டியதையும் யதுகிரி நூலில் குறிப்பிடுகிறார்.



பாரதியாருடன் பழகிய நாட்களின் நிகழ்வுகளை எந்தவித பாசாங்கும்,பகட்டும் இல்லாமல் முன் வைக்கும் இந்த நூல் பாரதியின் வாழ்க்கை குறித்த நூல்களில் ஆகச்சிறந்த செவ்வியல் பிரதி என்கிறார்கள்.


இதுவரை நாம் அறிந்திடாத பாரதியின் ஆளுமையை அறிந்து கொள்ளும் ஒரு சித்திரத்தை இந்த நூல் அளிக்கிறது.


Velu malayan

26.8.2023

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்