திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

 திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்



எண்பது ஆண்டுகளுக்கு முன் சத்தியாகிரக போராட்டத்தில் சிறை சென்ற ஒருவரால் அன்றைய சக சிறைவாசியாக இருந்த தலைவர்கள், சிறையின் சூழல் குறித்து எழுதப்பட்ட  சிறை நினைவுகள் குறித்த ஒரு புத்தகம் இன்றைய தலைமுறை  வாசகனுக்கு ஒரு வித சுதந்திர வரலாற்று தரவுகள் குறித்த வறட்டுத் தன்மையை அளிப்பதாக இருக்குமோ என்ற எண்ணத்தை இந்த நூல் முதலில் உடைக்கிறது.


சிறையில் கைதியாய் வாழ்ந்தவர் அதன் நினைவுகளை சிறை என்பது சித்திரவதைகளை அளிக்கும் ஒரு இடம் என்ற வழக்கொழிந்த வார்த்தைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு சக சிறைவாசிகளின் குணநலன்கள் குறித்தும், அவர்களுடனான நட்பு குறித்தும் முழுக்க ஹாஸ்யம் கலந்த ஒரு கேலி மொழியில் தன்னுடைய சிறை நினைவுகளை எழுதியுள்ளார் எஸ்.எல். 

கரையாளர்.


இந்த புத்தகம் வெறும் ஒரு சிறை நினைவுகளின் தொகுப்பு என்பதைத் தாண்டி அன்றைய காலத்தை அப்போதிருந்த அரசியல் நிலை, சிறைச் சூழல் போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.


ராஜாஜி,டி.எஸ்.சொக்கலிங்கம் (முன்னாள் தினமணி ஆசிரியர்,போரும் வாழ்வு நூலினை தமிழில் மொழிபெயர்த்தவர்)

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் கே.சந்தானம்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,சேலம் மோஹன் குமாரமங்கலத்தின் அப்பா ப.சுப்பராயன்,டாக்டர் ராஜன், குமாரசாமி ராஜா,ஓமந்தூர் ஸ்ரீ ராமசாமி ரெட்டியார்,ஆந்திர கேசரி

 டி.பிரகாசம்,எஸ்.சத்தியமூர்த்தி என எண்ணற்ற தலைவர்களின்  சித்திரங்களை நமக்கு இந்நூலின் வழியே வரைந்து காட்டுகிறார் கரையாளர்.


வெறும் நினைவுகளின் தொகுப்பாகவும்,சிறை புகும் தலைவர்களின் தகவல் தொகையாகவும் குறுகி போயிருக்க வேண்டிய இந்த புத்தகத்தை கரையாளரின் கடும் பகடி கலந்த நடை தான் இந்நூலை சுவாரஸ்யமுள்ள ஒன்றாக மாற்றுகிறது.


திருச்சி சிறையில் ராஜாஜி பாரதி பாட்டுக்களைக் கற்றுக்கொடுத்துக்

கொண்டிருக்கும் போது சாயங்காலம் கட்டுவிரியன் குட்டி ஒன்று பாரதியார் பாட்டின் சுவையை அனுபவிக்க வந்தது என்றும் ‘பாட்டின் பெருமையைப் பாம்பறியும்’ என்று பாரதியாரே சொல்லியிருக்கிறார் அல்லவா? என்ற சித்தரிபெல்லாம் நமக்குள் நமட்டுச் சிரிப்பை வரவழைக்கிறது.


அரியலூர் அஸெம்பிளி அங்கத்தினர் ஸ்ரீ வி.வெங்கடாசலம் பிள்ளைப் பற்றி கரையாளர் கூறும் போது 36 வயதிலேயே,எந்தவிதமான சிந்தனைகளினால் அவர் தலை இவ்வளவு வழுக்கையாகிவிட்டதென்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வி வழியாக அவரை ஊமை கேலி செய்கிறார்.


ஓமந்தூர் ஸ்ரீ ராமசாமி ரெட்டியார் அதிக கோபமும்,பிடிவாதமும் கொண்டவர்.மேற்கண்ட இரண்டிற்கும் பதில் தைரியம் அதிகம் இருந்தால் இன்னும் செல்வாக்குடன் பிரகாசிப்பார் என்று பரிகாசம் செய்கிறார் கரையாளர்.


சிறையில் தண்ணீர் கேட்டு கத்தி தண்ணீரின்றி இறந்து போகும் ஒரு கைதி குறித்தும்,சிறை நெருக்கடிகள் நிறைந்த கொந்தளிப்பான சம்பவங்களையும் இந்த நூலில் கூறுகிறார் கரையாளர்.


தமிழ் சினிமாவில் சிறைக் கைதிகளுக்கு சிறைக்குள் சட்டத்திற்கு புறம்பாக புழுங்கும் கஞ்சா போன்றே வேலூர் ஜெயில் ஆஸ்பத்திரியில் ஒரு கைதி கஞ்சாவை காகித்தில் மடித்து பொட்டலமாய் வைத்திருந்த நிகழ்வையும்,வெற்றிலைப் பாக்கு கூட அனுமதிக்காத ஜெயிலில் மதுவிலக்கு இருக்கும் வட ஆற்காடு மாவட்டத்தில் கஞ்சா விற்கப்படுகிறது என்றால் ஜெயில் அதிகாரிகளை என்ன சொல்வது என்று ஜெயில் அதிகாரிகளின் கடமை மீது கேள்வி எழுப்புகிறார் கரையாளர்.


ராஜாஜிக்கு காபி குடிப்பது என்றால் உயிர் என்பதும்,


ராஜாஜி முதலில் கைது செய்யப்பட்ட 1921ஆம் வருஷம் ஜெயிலில் கைதியின் சரித்திரத்தைக் குறித்து வைக்கும் அட்டைக்கு ‘ஹிஸ்டரி போர்டு’ என்று பெயர்.ராஜாஜியின் ‘ஹிஸ்டரி போர்’டில் அதிகாரிகள் எழுதப் படிக்கத் தெரியாது என்று குறித்தற்கு இந்தியாவில் மிகவும் முக்கியமான அரை டஜன் மனிதர்களில் ராஜாஜியும் ஒருவர் என்கிறார் ஜான் கந்தர் என்ற புகழ்பெற்ற பத்திரிகை நிருபர்.இதே ராஜாஜியைத்தான்,எழுதப் படிக்கத் தெரியாத கைதி என்றார் வேலூர் சிறை அதிகாரி.நமக்கு என்ன தோன்றுகிறது? அந்த வேலூர் சிறை அதிகாரியைப் பார்த்து,ராஜாஜி எழுதியுள்ள ‘தம்பீ வா!’, ‘இதையும் படி’ என்ற புஸ்தகங்களைப் படிக்கச் சொல்லலாம் போல் தோன்றுகிறது அல்லவா? போன்ற ராஜாஜி குறித்த நினைவுகளை நூல் வழியே பகிர்கிறார் கரையாளர்.


திருச்சி சிறையின் உஷ்ணம், கொசுக்கடி,விஷ ஜந்துக்களின் வேதனை என சிறை சிரமங்களையும் ஒருபுறம் கூறுகிறார்.



சுயசரித வடிவமும்,சிறை நினைவுகளின் தொகுப்பாகவும் 

உள்ள இந்த நூல் முன் வைப்பது விடுதலைக்கு போராடிய சத்தியாகிரகிகளின் விடுதலை உணர்வையும் அவர்களின் தியாகத்தையும் தான்.


ஆறு மாத சிறைக்குப் பின் விடுதலையாகும் நாளில் கரையாளர்:


ஜெயில் வாழ்க்கையில் எனக்கு உணர்ச்சி அளவு கடந்து விட்ட முக்கியமான சமயங்கள் நான்குதான்: கைதியாகும் சமயம்;தண்டனை கொடுக்கப்படும் சமயம்;முதல் நாள் சாயங்காலம் ஜெயிலுக்குள்ளே கொட்டடியில் வார்டர் பூட்டும் சமயம்; கடைசியாக விடுதலையாகும் சமயம் என்கிறார்.


"சிறையென்றால்,பறவையானாலும், மிருகமானாலும்,மனிதனானாலும், ஒரு தேசமேயானாலும் ஒன்றுதான்"


என்று கூறும் கரையாளர் தேச விடுதலைக்கான தன் சிறை வாழ்க்கை  நினைவுகளை மிக நேர்மையுடன் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.


தமிழில் சிறை இலக்கியங்களுக்கு முன்னோடி என்று கூட இந்த நூலைக் கூறலாம்.


இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட ஒரு விடுதலைப் போராட்ட வீரரான எஸ்.எல். கரையாளரின் புத்தகத்தை மறுபதிப்பு செய்து அதை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு கவனப்படுத்திய அழிசி பதிப்பகத்தின் உரிமையாளர் திரு.ஸ்ரீநிவாச கோபாலன் பெயரை இத்தருணத்தில் மரியாதையுடன் நினைத்துக் கொள்கிறேன்.


Velu malayan

6.8.2023

Comments

Popular posts from this blog

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்