கறுப்பு வெள்ளைக் கடவுள்

 தேவிபாரதியின் கறுப்பு வெள்ளைக் கடவுள் நூலை முன்வைத்து:



நான் தேவிபாரதி எழுதிய எல்லா நாவல்களையும்  வாசித்திருக்கிறேன்.

நான் வாசித்த வரை வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் கடந்த கால கசப்பும் வன்மமும்,பழியுணர்ச்சியும் தான் அவரது படைப்புகளில் உள்ள உள்ளோட்டம்.


அவரின் முதல் நாவலான நிழலின் தனிமை நாவலில் வரும் அந்தப் பெயரற்ற கதை சொல்லியினுடைய வன்மத்திலும் பழி தீர்க்கும் உணர்ச்சியிலும் குற்றமும் தண்டனையில் வரும் Raskolnikov பாத்திரத்தின் பாதிப்பு தெரியும்.


நீர்வழிப்படூஉம் நாவலில் வரும் காரு மாமா பாத்திரம் வழியாக வாழ்க்கை கைவராத துயர் துரத்தி சரியும் ஒரு மனிதனின் சித்திரத்தை காட்டுவார்.இந்த நாவல் ஒரு விதத்தில் அவர் சார்ந்த நாவித சமூகம் மற்றும் அவருடைய குடும்ப உறவுகள் சார்ந்த சுய புனைவு படைப்பு.


பெண்களின் சாபமும்,பழி உணர்ச்சியும் ஒரு வம்சத்தையே நாசம் செய்வதை தொன்மம் குறியீடுகள் வழியாக நொய்யல் நதி மனிதர்களின் வாழ்வியலை நொய்யல் என்ற பெயரில் எழுதியிருப்பார்.


ஒரு சாதாரண சத்துணவு அமைப்பாளராக இருக்கும் "ந" என்ற காளிங்க நடராஜ் என்பவனின் வாழ்க்கையை முன் வரலாற்று பெருமிதத்துடன் நட்ராஜ் மகாராஜ் நாவலில் அவர் புனைந்து காட்டும் உலகம் அசாத்தியமானது.


நாவல் வடிவம் தாண்டி சிறுகதை அல்லது குருநாவல் வடிவம் கொண்ட அவரது இன்னொரு படைப்பு கருப்பு வெள்ளைக் கடவுள்.மொத்தம் நான்கு நெடுங்கதைகள் கொண்ட இந்த தொகுப்பில் அவர் கையாண்டுள்ள கதைக்களமும் மொழியும் புதிய முயற்சி.


இரண்டாவது கதையான கருப்பு வெள்ளைக் கடவுள் கதையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை காட்டும் சித்திரம் அவர் புனைவுத்தன்மையின் திறமைக்கு ஒரு சான்று.


இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கதைகள் பரமனின் பட்டுப்பாவாடை உடுத்திய நான்காவது மகள் மற்றும் கழைக்கூத்தாடியின் இசை.


குடி நாவிதர் சமூகத்தில் பிறந்த பரமனின் கடைசி மகள் மஞ்சுவை அந்த ஊரில் உள்ள கவுண்டர் சாதியை சார்ந்த பையன் இழுத்துக் கொண்டு ஓடி விடுகிறான்.அதன் பின் அவனுடன் அவள் வாழ்ந்தாளா?இல்லை அவளை கொன்று விட்டார்களா?இல்லை நகரத்தின் ஏதாவது ஒரு மூலையில் அவள் வேசித்தொழில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறாளா?என பரமனின் பரிதவிப்பையும் அவன் அகமே அவர் கண்டிப்பாக குழந்தை குட்டிகளுடன் நன்றாக இருப்பாள் என்று நேர்மறையை ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்வதும்,

பின்பு அவள் எங்கு இருக்கிறாள் எப்படி இருக்கிறாள் என்பதை தெரியாமல் நிகழ்கணத்தில் அவளைத் தேடித் திரிவதும் என ஒரு நாவித தகப்பனின் உள தவிப்பை எழுத்தில் நமக்கு காட்டுகிறார் தேவிபாரதி.


பரமனின் அகம் அதன் சிக்கலில் உழல்வதை அவனுடைய கமுக்க வலியை, இயலாமையை காட்டும் இடங்களில்  தாஸ்தாயெவ்ஸ்கியை நியாபகப்படுத்துகிறார் தேவி பாரதி.



பொதுவாக தேவி பாரதியினுடைய படைப்புகளில் அவர் பிறந்த நாவித சமூகத்து மனிதர்களும்,கவுண்டர் சமூகத்து மனிதர்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள்.காரணம் அவர் அந்த மக்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்திருக்கிறார்.அதுதான் அவருடைய வாழ்க்கையாக இருந்திருக்கிறது.சொல்லப்போனால் அவருடைய நிறைய படைப்புகள் அவருடைய சொந்த வாழ்க்கையிலிருந்து  எடுத்து புனைவாக்கப்பட்டவை.


சினிமாவில் இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என அலைந்து திரியும் அசிஸ்டன்ட் டைரக்டர்களின் கனவுகளையும் அலைதலையும் பேசுவதாக இருக்கிறது கழைக் கூத்தாடியின் இசை என்ற இந்த தொகுப்பின் கடைசி கதை.குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய நாவலில் வரும் கௌதம் நிலாம்பரனின்பெயரை புனைப் பெயராக வைத்து படத் தயாரிப்பாளர்களைத் தேடி அலையும் முருகேசன் என்பவனின் கதை வழியாக அசிஸ்டன்ட் டைரக்டர்களின்  நிலை,திருவல்லிக்கேணி மேன்சன்களின் உலகம் போன்றவற்றை மிகத் துல்லியமாக எழுத்தில் தேவிபாரதி கொண்டு வந்துள்ளார்.


அந்தரத்தில் கழுத்தில் நடக்கும் களைக்கூத்தாடும் ஒரு பெண்ணின் தினசரி பிழைப்பு வாதமும் பிச்சை எடுக்கும் செயலும் தன் வாழ்க்கை போன்றது தான் என்பதை கௌதம நீலாம்பரன் உணர்ந்து கொள்ளும் தருணத்தை கதையின் ஒரு புள்ளியில் காட்டுவது தான் இந்த கதையின் கலை அம்சமே.


தேவி பாரதியின் எல்லா படைப்புகளையும் நம்பி வாசிக்கலாம். அதில் கறுப்பு வெள்ளைக் கடவுள் தொகுப்பும் சேரும்.


Velu malayan

27.8.2023

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்