மரப்பசு

தி.ஜானகிராமனின் மரப்பசு நாவலை முன்வைத்து:



தி.ஜானகிராமன் அவர்களின் படைப்புலகத்தில் நான் நுழைந்தது அம்மா வந்தாள் நாவல் மூலமாகத்தான்.பிறகு மோகமுள் நாவல் வாசித்தேன்.இப்போது மரப்பசு.


நான் வாசித்த வரை தி.ஜா வின் படைப்புலகம் பிராமணியக் குடும்பம்,பிராமணப் பெண்களின் பாலியல் இச்சை,இசை என்ற சட்டகத்திற்குள் நிகழ்வது.


சமூகப் பித்தலாட்டத்திற்கு எதிரான கோபம்,மனிதர்களின் புற சிடுக்குகள்,பசி,வறுமை என அவர் எழுதுவதில்லை.


மனித அகத்தின் அடிப்படை அவாவே காமம் தான்.அது தான் அவரது படைப்புகளின் அடிநாதம்.


இடுப்புக்கு கீழ இருக்கிற சமாச்சாரம் தான் எல்லா சமாச்சாரங்களிலும் சத்தானது என நினைத்து பிராமண பொம்மணாட்டிங்க பாலியல் ஏக்கத்தையும் சுதந்திரத்தையும் கலையாக்கும் யுக்தி தி.ஜாவுக்கு கை வந்த கலை போல. 


மரப்பசு நாவலில் வரும் அம்மணியை மறக்க நாட்கள் பிடிக்கும்.


அம்மா வந்தாள் நாவலில் வரும் அலங்காரத்தம்மாள்,மோகமுள் நாவலில் வரும் யமுனா,மரப்பசு நாவலில் வரும் அம்மணி ஆகிய பாத்திரங்களின் வழியாக அவர்  ஆண்களை அதிர்ச்சியூட்டச் செய்கிறார்.


குடும்பம் என்ற ஒன்றை அமைத்துக் கொண்டு தண்டபாணி இருக்கும் போதே சிவசுவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளும் அலங்காரத்தம்மாவின்  இன்னொரு நீட்சி தான் மரப்பசு நாவலில் வரும் அம்மணி. 


அம்மணி திருமண உறவுக்குள் சென்று மாட்டிக்கொள்ள வேண்டாமென்று தனக்கு விருப்பமான ஆண்களுடன் தனக்கு விருப்பமான வாழ்வை வாழ வேண்டும் என இருப்பவள்.அவளுக்கு சிறுவயதிலிருந்தே திருமணமான தன் சொந்தக் கார கண்டுவின் பெண்ணின் கணவன் இறந்ததும் அவளுக்கு மொட்டை அடித்து வீட்டு மூலையில் முடங்கச் செய்வதைப் பார்த்து  இந்த அமைப்பை,திருமண உறவை வெறுக்கிறாள்.


அம்மணி பாத்திரம் வழியாக தி.ஜா வலுவாக சொல்வது அவளுக்கென்று ஒரு மனப்பத்தினித் தனம் இல்லை என்பதையே. தன்னை விட 27 வயது மூத்த கோபாலி மீதும் அவனுடைய இசை மீதும் இணங்கும் அம்மணி.கோபாலி இல்லாத நேரங்களில் பட்டாபியுடன் அவள் இடுப்புக்கு கீழான விளையாட்டில் ஈடுபடுகிறாள்.நாவலின் எந்த இடத்திலும் அம்மணி கோபாலியுடன் பழகும் போதும்,பட்டாபியுடன் பழகும் போதும்,அயல்நாட்டு ராணுவ வீரன் ப்ரூஸ் உடன் பழகும் போதும்  அவள் அவர்களுடன் உடல் பகிர்வு கொள்கிறாள் என்பதை தி.ஜா வெளிப்படையாய் எழுதிக் காட்டுவதில்லை.அதை ஒரு பூடகமாகவே எழுதி கடக்கிறார்.


தன் வாழ்க்கைக்கு தன் துணைக்கு தன்னுடன் பயணப்பட எந்த ஆணும் நிரந்தரமானவர்கள் அல்ல என்பதை உணர்ந்தவள் அம்மணி.ஆனாலும் பட்டாபியை விட்டு அவள் பிரியும் தருணங்களை தன் நினைவுகளின் வழியாக அவனை நினைத்து நீவிக் கொள்கிறாள்.


கோபாலி தன் வீட்டு வேலைக்காரன் பச்சையப்பன் மனைவி மரகதம் மீது சபலம் கொள்கிறான் என்பதை பச்சையப்பன் திருமணம் முடித்து வீடு திரும்பும் போதே கண்டு கொள்கிறாள் அம்மணி.கோபாலுக்கு ஒரு  மனதில் பள்ளம் இருக்கிறது.அழகே இல்லாத

அன்னவாசல் நடேசன் ஐயர் மகள் குஞ்சாளியை அவர் திருமணம் செய்து கொண்டு வாழ்வதன் வறட்சி தான் தன் சங்கீத ஞானத்தை வைத்து அம்மணியை மயக்குவது, பச்சையப்பன் மனைவி மரகதத்தை வளைக்க நினைப்பது. 


கடைசியில் கோபாலியை விட்டு பச்சையம்மனும் மரகதமும் இருக்கும் இடத்திற்கு அவர்களுடனே தங்க அம்மணி போவது கூட கோபாலியின் துர்குணம் தெரியும் என்பதால்.அதனால் பெரிய குற்ற உணர்வு இல்லாமல் அவனை கடக்கிறாள்.


"என்னோடு இருக்க முடியாது யாராலும்.பாம்புன்னும் தாண்ட முடியாது;பழுதையின்னும் தாண்ட முடியாது என்பார்கள் எங்கள் ஊரில்.அந்த மாதிரி தான் நான்.எனக்கு யாரும் உறவு நண்பர்கள் கிடையாது.இருக்க முடியாது.அந்தந்த இடத்தில் நண்பர்கள்.அப்படி அப்படியே போட்டுவிட்டு போய்விட வேண்டும் எனக்கு. எனக்கு ஆயிரக்கணக்கில் நண்பர்கள் உண்டு.ஞாபகம் வைத்துக் கொள்வது சிரமாமாயிருக்கிறது. கனம்...... மாக  இருக்கிறது"உண்மையில் இது அம்மணிக்கான வரிகள்.அப்படித்தான் கோபாலி,பட்டாபி, ப்ரூஸ் போன்ற ஆண்களையும் கடந்து போய்க் கொண்டே இருக்கிறாள்.


ஒரு கட்டத்தில் ப்ரூஸ் சொல்வது போல் வயதும் தோலும் முதிரும் போது இளமைப் போன பிறகு உடம்பு இரண்டாம் பொருளாக மூன்றாம் பொருளாக கண்ணாடியில் பார்க்க விரும்பாத பொருளாக ஆகும் வயதில் என்ன ஆகும் உன்னை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்ற வார்த்தைகள் எப்படி இந்தச் சின்ன பையனால் இப்படி பார்க்க முடிந்தது நான் உயிருள்ள பசுவாக இருந்தாலும் நான் மரப்பசு தான்.மூப்பு வந்தாலும் முடி நரைத்தாலும் என்னை வைத்துக் கொண்டு அழகு பார்க்க எத்தனையோ பேர் இருப்பார்கள் என ப்ரூஸிற்கு மனதிலே பதில் சொல்லிக் கொள்வாள் அம்மணி.

கோபாலியைப் பற்றி தி.ஜா அம்மணியின் பார்வையில் வர்ணிக்கும் போது


 "பரந்த முகம் மருத மரம் மாதிரி ஒரு நிறம்.சிவப்புமில்லை. மாநிறமும் இல்லை. தலையெல்லாம் சிறுசிறு அலையாக மயிர்" என்பார்.தி.ஜா ஒரு பெண்ணையோ,ஆணையோ,ஒரு தெருவையோ வர்ணிக்கும் போது அவ்வளவு ஒரு அழகும் நேர்த்தியும் நின்றொளிரும். 


தி.ஜாவின் எல்லா நாவல்களிலும் காவிரியும் அதன் கரையழகும் குறித்த குறிப்புகள் உண்டு.காவிரி புறத்தில் மட்டுமல்ல அவரது அகத்திலும் வாழ்வின் ஏதோ ஒன்றாக ஓடிக் கொண்டேயிருக்கிறது போல.


யாருடனும் திருமணம் செய்யாமல் தனக்குப் பிடித்த எல்லோரின் கரங்களையும் வருட நினைக்கும் அம்மணி பாத்திரம் தமிழ் இலக்கியத்தில் ஒரு தைரியமான பாத்திர சிருஷ்டிப்பு என நான் பார்க்கிறேன்.


நான்கு பேருக்கு மேலான ஆண்களுடன் வெறும் வார்த்தை தொடர்பிலிருக்கும் ஒரு பெண்ணையே தேவிடியாத்தனம் செய்கிறாள் என சொல்லி விடக் கூடிய சூழலில் அம்மணி பாத்திரத்தை முற்போக்கும்,சுய சிந்தனையும் கொண்ட ஒரு வலுவான  பாத்திரமாக கலைத்தன்மையான ஒரு நோக்கில் வடித்துள்ளார் தி.ஜா.



ஆண்களின் தூய அன்பிற்கு ஏங்கும் ஒருவளின் மனப்பக்கங்கள் இந்த நாவல்.


ப்ரூஸ் அம்மணியை "நீ முந்நூறு பேரோடு படுத்துக் கொண்டிருக்கலாம். மூவாயிரம் பேரோடு முத்தமிட்டு கொண்டிருக்கலாம் ஆனால் நீ மிக மிக தூய்மையான மனுஷி"என்பான்.


தி.ஜாவின் படைப்புகளில் வரும் பெண்களின் நோக்கம் ஆண்களின் அதிகார கட்டொழுங்கில் உள்ளொடங்கி வாழாத  பெண்கள் வழியா ஆண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி பார்க்கிறார்.


குறிப்பாக தான் பிறந்த பிராமண சமூக பெண்களை இப்படிப்பட்ட  பாத்திரங்களாக எழுதியதால் சொந்த சாதிகளால் விலக்கப்பட்டவர்.

இன்றும் பெண் குறித்த அவளின் அக உலகத்தை அதன் நிர்வாணத்தோடு எதிர் கொள்ள எழுத தயங்குகிற நிலையில் அன்றைய காலகட்டத்திலேயே நவீனத்துவமான பார்வை கொண்டவராக இருந்திருக்கிறார் தி.ஜா.


காலம் காலமாக  பூட்டி வைத்தே புணரப்பட்டவர்கள் பெண்கள்.அவர்களை அவர்களின் பாலியல் சுதந்தித்துடனும் சிந்தனை சுதந்திரத்துடனும் அணுகுகிறது தி.ஜாவின் படைப்புகள்.இறுக்கமாக கட்டி வைக்கப்பட்ட ஒன்று அறுத்துக் கொண்டு போகும் போது முகத்தில் அதிர்ச்சி ஒன்று ஏற்படுமே அந்த அதிர்ச்சி தான் அம்மணி.


Velu malayan

26.8.2023

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்