காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை:ரா.கிரிதரன்

 காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை: ரா.கிரிதரன்



ஒரு தனி மனிதனின் அனுபவங்களை அல்லது அவன் பார்வையில் சொல்லப்படும் கதையை வாசிக்கும் வாசகர்கள் தான் பார்த்த தங்களுக்கான கதை என்றோ அல்லது அந்த கதையின் நுண் தருணங்களை அவன் உணரும் புள்ளியில் இருக்கிறது ஒரு கலைப்படைப்பின் பூரண வெற்றி.


சில கதைகளை நாம் வாசிக்கும் போது நீர் இழுத்துக் கொள்ளும் மணல் போல எளிதில் உள்வாங்கிக் கொள்வதாக இருக்கும்.ஆனால் சில கதைகள் பாறை மீது ஊற்றும் நீர் போல    வாசகனுக்கு வசப்படாமல் வழிக்கு ஓடும்.கிரியின் சில கதைகளை ஆரம்பத்தில் வாசிக்கும் போது நான் நீராகவும் இசை குறித்த கதைகள் பாறையாகவும் இருந்தன.


காரணம் அவர் கதை நிகழ்த்தும் நிலங்கள் நான் நடக்காதவை (புனைவில் அது சாத்தியம் என்றாலும் கூட)பிரெஞ்சு இசைமேதை Oliver messiaen மற்றும் ராபர்ட் ஷீமன் மற்றும் அவரது மனைவி கிளாரா ஷூமன் இசைகள் நானறியாதவை.பிறகு அவர்கள் குறித்து தனியாக இணையத்தில் வாசித்து தான் கதைகளை உள்வாங்க முடிந்தது.


காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை என்ற தொகுப்பின் முதல் கதை பிரான்ஸ் இசை மேதை oliver messiaen எழுதிய இசை குறிப்பை மையப்படுத்தி எழுதிய சிறுகதை.


1942 ஆம் ஆண்டு ஜெர்மன் சிறையில் இருக்கும் கைதிகள் குறித்து கதை விரிகிறது.வெறும் பனி ஊளைச் சத்தம்,பசி,வலி,நரகம் என சூழ்ந்திருப்பவர்களை இசையால் மகிழ்விக்க முடியுமா? என்ற கேள்வியை ஆலிவர் மெஸ்ஸையனிடம் கேட்கிறார்கள் கைதிகள்.உயிர் இருப்பு மட்டுமே முக்கியம் என்று இருப்பவர்களிடம் இசை எப்படி அவர்களுக்கு மீட்சியை கொடுக்கும் என்ற கேள்விக்கு தான் எட்டு மாதம் எழுதிய இசைக் கோர்வையை கைதிகளின் முன் செல்லோ,கிளாரினெட், வயலின்,பியானோ என  நான்கு பேரின் மீட்டலுடன் இசைத்து காட்டுகிறார் மெஸ்ஸையன்.


இசை ஒலித்துக் கொண்டிருக்கும் போது இசையின் இடையில் பறவையின் சத்தம் கேட்பதாய் கதையை தன் பார்வையில் விவரிக்கும் கைதி கூறுவான்.பறவை அவர்களின் விடுதலைக்கான குறியீடு.


பசியில் உலர்ந்து போயிருக்கும் குழந்தையின் முகங்கள்,கை குழந்தையுடன் தண்ணீர் தண்ணீர் என சிறையில் கெஞ்சம் ஒரு பெண்ணின் முகம்,வயதான பூனை மரியானாவின் உருவங்களின் வழியே அச் சிறைச் சூழலின் துயரை அழுத்தமாக காட்டுகிறார் கிரி.


இருள் முனகும் பாதை ஜெர்மன் Pianist Clara Schumann மற்றும் அவரது கணவர் Robert Schumann இருவருக்குமான காதல் இசை வாழ்க்கையை அடித்தளமாக வைத்து எழுதப்பட்ட புனைவு கதை.


கதைக் களத்தின் சூழலை,மன உணர்ச்சிகளை வார்த்தைகளில் மடக்கிக் கொண்டு வரும் கலையுக்தி கொண்டவையே நல்ல சிறுகதைகள்.அதை பிரதிபலிப்பதாக உள்ளது கிரியின் கதை உலகம்.


உண்மையில் நாம் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் இந்த வாழ்க்கையும் அதன் மனிதர்களும் தான் நமக்கு ஒரு வித திறப்பை கொடுப்பவர்கள்.

திறப்பு சிறுகதை ஒரு நல்ல கதை.இசை குறித்த ஆழ்ந்த தேடுதலில் இருக்கும் ஜெயந்திக்கு கோயிலில் பாடும் ஒருவனின் இசையில் அவளுடைய வாழ்வின் திறப்பை கண்டு கொள்கிறாள்.


நந்தா தேவி சிறுகதை ராணுவ குழு மலையேற்றம் குறித்த விவரணைகளுடன் கூடிய ஒரு நெடிய கதை.மலையேற்றத்தின் சூழல் சித்தரிப்பும் மொழியில் அவர் காட்டும் பனிப்பரப்பும் நம்மை நந்தாதேவியில் நடக்க வைக்கிறது.ஒரு வித சாகச உணர்வை முன் வைத்து இழுத்துச் செல்லும் கதை இது.ஜாக் லண்டனின் Call of the wild நாவலில் வரும் சூழலை இந்த கதையின் நிலப்பரப்பு நியாயகப் படுத்துகிறது.


பல்கலனும் யாம் அணிவோம் சிறுகதை மனித சமூகம் அடுத்த அடிக்கு பாயும் அறிவியல் தொழில்நுட்ப வகை கதை.அறிவியலும் புனைவும் பின்னி இணைந்து செல்லும் கதை இது.2004 ல் வெளிவந்த will Smith நடித்த I Robot படம் போல மனிதனுக்கு இணையாக எதிர்காலத்தில் மனித இயந்திரங்களை உருவாக்குவதை இந்தக் கதை முன் வைக்கிறது.ஐசக் அசிமோவின் சிறுகதையின் விரிவு தான்  I Robot படம்.ஐசக் அசிமோவ் அமெரிக்க Sci-Fiction எழுத்தாளர். இந்தக் கதையில் அவர் பெயரும் வருகிறது.


நீர் பிம்பத்துடன் ஓர் உரையாடல் சிறுகதை ஒரு ஓவியத்தின் வழியாக பிரெஞ்சு ஆட்சிமுறையின் வரலாற்றை தொகுத்து காட்டுகிறது.


மரணத்தைக் கடத்தல் ஆமோ கதை காந்தியின் மரணத்தை முன் கூட்டியே கணித்து விடும் ஒரு ஜோசியனின் வாக்கினால் காந்தியின் அகம் அலையுறுவதை பேசுகிறது.

"மகாத்மாவுக்கும் சாவு நிச்சயம் என்பது என் வாழ்வின் இன்னொரு செய்தியாக இருக்கட்டும் குறைந்தபட்சம் நான் மகாத்மா இல்லை என்றாவது இவர்களுக்கு தெரியட்டும்" என்று காந்தி தன்னையே சுய பகடி செய்து கொள்கிறார்.


கதையில் ஜோசியனின் வாக்கு மீதான அவநம்பிக்கையை காந்தியிடம் தத்துவத்தில் நம்பிக்கைக்கு இடமில்லை என்கிறார் ராஜாஜி.


நிர்வாணம் என்ற கதை ராஜேஷ் என்ற நண்பனின் பார்வையில் தன்னுடைய பள்ளி கால நண்பன் புத்தன் என்கிற நரேனுடனான  நட்பை நிகழ்காலத்திலிருந்து பின்னோக்கி கடந்த காலத்திற்கு பயணித்து பின் நிகழ்காலத்தில் நிற்கும் கதை.

நரேன் தன் வீட்டின் மாடியில் சுய கைமைத்தனம் செய்து தன் தந்தையிடமும் நண்பர்களிடமும் மாட்டிக் கொள்ளும் கசப்பான சம்பவத்தினால் அவனுக்கும் அவன் தந்தைக்கு ஏற்படும் இடைவெளி,தன்னுடைய சின்ன அம்மாவை அப்பா அடித்து விரட்டி விட்ட பிறகு அவனுடைய பெற்ற அம்மா ரொம்ப சந்தோஷமடைந்தாங்க. நாம தான் பெண்மை, பூமி மாதாங்கறோம் என ராஜேஷிடம் நரேன் கூறும் இடங்களில்  மனித மனதின் ஆழங்களை மிக நுட்பமாக எழுதியுள்ளார் கிரி.



அகதி கதை ஆப்பிரிக்க குஜராத்தி ஷிவ் மற்றும் உகண்டாவிலிருந்து இடி அமீனால் நாட்டை விட்டு இலண்டனுக்குள் அகதியாய் திரியும் ரபீக் ஆகிய இருவரின் அகதி வாழ்க்கை அலைக்கழிப்பையும், துயரையும் பதிவு செய்கிறது .

கதை ஷிவ் பார்வையில் சொல்லப்படுகிறது.கதையின் முதல் வரியே "நண்பனின் உடலுக்கு சவக்குழி தோண்டுவது என்பது சிரமமான வேலை" என ஆரம்பிக்கிறது.அகதிகளின் 

அடையாளம் தேடி அலைதலின் அவஸ்தையை அகதி கதை  அளந்து காட்டுகிறது. 


நிஜ இசையாளுமைகள் குறித்த  புனைவுகள்,அகதி நிலம்,அறிவியல் புனைவு என தமிழ் சிறுகதைகள் இதுவரை தொடாத தளங்களை எழுதியுள்ளார் கிரி.


பிறந்த மண்ணை விட்டு ஒருவர் வேறு மண்ணில் கால் பதித்து வாழ்ந்தாலும் பிறந்த மண் மூளையில் ஒட்டிக்கொள்கிறது.பிழைப்புக்காக சென்ற பூமியின் முன் வெறும் பாதங்களில் மட்டும் தான் ஒட்டிக் கொள்கிறது.


தன் பிறந்த ஊரான புதுச்சேரி குறித்த இடங்கள் சம்பவங்கள் தான் கிரியின் கதை உலகில் அதிகம் இடம் பெறுகிறது.


எல்லோரும் எழுதிவிட முடியாத கரு மற்றும் தளங்களை எடுத்துக் கொண்டு அதில் தன் புனைவுகளை வலுவாக கதை வடிவில் கட்டமைத்திருக்கிறார் கிரி.


ஜெமோ கூறியது  போல கிரியின் படைப்புகள் அசாத்தியங்களின் கலைப் பிரதி என்ற சொல்லே என் சொல்லும்.


Velu malayan

11.8.2023

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்