மீன்காரத்தெரு-கீரனூர் ஜாகிர்ராஜா

 மீன்காரத் தெரு: கீரனூர் ஜாகிர்ராஜா


இஸ்லாமிய சமூகத்


தின் இறுக்க வாழ்வியலையும்,அதன் மீது போர்த்தப்பட்டிருந்த புனிதப் போர்வையை கொஞ்சம் விலக்கி அதனை நிர்வாணத் தன்மையுடன் வெளிப்படுத்தக்கூடிய படைப்புகள் என்று நான் வாசித்த வரை கீரனூர் ஜாகிர்ராஜாவின் வடக்கே முறி அலிமா நாவலையும்,மீன்காரத் தெரு நாவலையும் குறிப்பிடுவேன்.


வடக்கேமுறி அலிமாவில் வரும் அலிமா பாத்திரம் இது வரை நம் பொதுபுத்தியிலிருந்த இஸ்லாமிய பெண் சித்திரத்தின் ஒரு உடைந்த பிரதி.


பல ஆண்களை புணரும் ஒழுக்கப் பிறழ்வும்,மனப் பிறழ்வும் கொண்டவளின் வாழ்க்கை வதையின் கதையாக நீளும் ஒரு இலக்கியப் பிரதியாக வடக்கேமுறி அலிமா நாவலை வகைபடுத்தலாம்.


மீன்காரத் தெருவில் வரும் அமீனா பங்களாத் தெரு மேல்தட்டு முஸ்லிம் சலீம் என்பவனால் உடல் சுரண்டலுக்கு உள்ளாகும்  தாழ்ந்த முஸ்லீம் பெண்ணாக வந்தாலும் வடக்கே முறி அலிமாவில் வரும் அலிமாவுக்கும், மீன்காரத்தெருவில் வரும் அமீனாவுக்கும் குண முரண்கள் உண்டு என்றாலும் இருவரும் அதே சமூகத்து ஆண்களால் வஞ்சிக்கப்படுபவர்கள். 


இஸ்லாம் சமூகத்திற்குள்ளேயே உள்ள லெப்பை,ராவுத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய பங்களாத் தெரு முஸ்லீம் மற்றும் மேற்கண்ட இஸ்லாமியர்களை விட கீழான மீன்காரத்தெரு இஸ்லாமியர்களுக்கிடையேயான வர்க்க மற்றும் வாழ்க்கை முரண்களை மீன்காரத் தெரு நாவல் முன்வைத்து பேசுகிறது. 


இஸ்லாமிய சமூகத்திலிருக்கும் விழுமியங்களை,முறைப் பிறழாமையை   உடைத்து காட்டும் உண்மைத் தன்மையின் கலைப் பிரதிகள் தான் ஜாகிர்ராஜா படைப்புகள்.


மேற்சொன்ன வடக்கே முறி அலிமா மற்றும் மின்காரத் தெரு நாவல்களில் அதைத் தான் செய்கிறார் ஜாகிர்ராஜா.


மீன்காரத்தெரு நாவலில் வரும் அமீனாவின் அண்ணன் நைனா பாத்திரம் பங்களாத் தெரு வாசிகளுக்கு ஒரு வித எதிர்ப்பு மனோபாவமும்,மீன்காரத் தெருவிற்குள்ளே எவருடனும் ஒத்துவராத மனப்பாங்கு கொண்ட ஒரு பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளான்.


தெருவில் சிகை அலங்கார கடை வைத்திருக்கும் துருத்தி அவனுடைய மகன் சண்முகம்,அவருடைய மகள் தெய்வானை பாத்திரங்கள் மீன்காரத் தெருவைச் சார்ந்து வாழ்பவர்களாக காட்டப்பட்டுள்ளது.



நைனாவுக்கு எப்பொழுதுமே நாசுவத்தி  தெய்வானை மீது ஒரு காம இச்சையும் அவள் மீது ஒரு கண்னும் உண்டு.நாசு வத்தியா இவ? பொட்டை எடுத்துட்டு துர்கா போத்தினா பங்களா தெரு துளுக்கச்சி தோத்துத்தான் போவா என்று தெய்வானையை வர்ணிக்கிறான்.


நைனாவும்,நாசுவின் சண்முகமும் குழிப்பாட்டியான் பன்றி இறைச்சிக்கிடையில் சாராயம் குடித்து கொண்டிருக்கும் போது குழிப்பட்டியானின் நெய் ஒழுகும் பன்றி இறைச்சியை சண்முகம் சாப்பிடும்போது வாயில் நீர் ஊற அதை பார்த்து எச்சில் விழுங்குகிறான் நைனா.பன்றி ஹராம் என்பதால் அதை சாப்பிட தயங்குகிறான் நைனா.ஏற்கனவே மீன்கார தெருவில் ரோட்டு சாக்கடையில் புரளும் பன்றிக் கூட்டத்தை துரத்தும் போது பறத் தெரு நோக்கி ஓடும் பன்றியை குறிவைத்து நைனா கல் வீசும் போது அது ஒரு குட்டியின் மீது விழுந்து குட்டி செத்து விடுகிறது.


நைனா உடன் மது அருந்தி கொண்டிருந்த சண்முகம் இடையில் மது போதை ஏறி பெருமாள் கோயில் நோக்கி சென்று திரும்பி வரும்போது தன் தங்கை தெய்வானையிடம் சில்மிஷம் செய்யும் பெருமாள் கோயில் பூசாரியினுடைய குறி அறுத்த ரத்தத்துடன் திரும்பி வரும் போது எவருக்கும் பயப்படாத நைனா முதன் முதலாக சண்முகத்தை பார்த்து பயந்து நிற்கிறான்.


நைனா எல்லா வேளையும் தன் மனைவி மும்தாஜ்ஜை மூர்க்கமாக எப்போதும் துன்புறுத்துவதால் அவள் பிறந்த வீடான ஆயக்குடிக்கே ஒடிச் சென்று மீசை கூட முழுமையாக வளராத இன்னொருவனை நிக்கா செய்து கொள்கிறாள்.


பேச்சியின் மகள் வள்ளியுடன் நைனா பழகுவதால் அவள் கற்பமடைந்து குழந்தையை பிரசவிக்காமலே இருந்து விடுகிறாள்.


பள்ளிவாசலில் வள்ளியை புதைக்க நைனா இடம் கேட்கும் போது மறுத்து விடுவதால் பள்ளிவாசலுக்கு எதிரில் இருக்கும் கட்டாந்தரையில் கபுறுக் குழி பறித்து அவளுக்கு சமாதி செய்கிறான். 


நைனாப் போன்ற இப்படிப்பட்ட  பாத்திரங்கள் வழியாகத்தான் இஸ்லாமிய சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் விழுமியங்களை கேள்விக்கும்,மீறலுக்கும் உட்படுத்துகிறார் ஜாகிர்ராஜா. 


மீன்காரத் தெருவில் இருக்கும் பெண்களை பங்களா தெரு முதலாளிகளுக்கு சப்ளை செய்யும் ரமீஜா,எந்நேரமும் அரசியல் குறித்து பேசிக் கொண்டிருக்கும் நைனாவின் தம்பி காசீம்,அவனுக்காக உழைக்கும் அவனுடைய மனைவி ரஜியா,கடை வைத்திருக்கும் பாத்தக்கா,கதீஜா, சுபைதா,ஜைத்தூன்,இலுமு,ஜென்னத் என நிறைய பெண் பாத்திரங்கள் நாவல் முழுதும்.


நாவல் நிகழும் கால ஒழுங்கை கவனிக்கும் போது மீன்காரத் தெருக்காரர்கள் அரசியலும்,உலக நடப்பும் பேசும் போது பாகிஸ்தான் காரன் தான் ஹெலிகாப்டரில் வந்து குண்டு போடுறான்,அவாமி லீக் கட்சி என எல்லாம் பேசுவது பாகிஸ்தானுக்கும் பங்களாதேசக்கும் நடைபெறும் சண்டைக் காலமான 1971 யைக் குறிக்கிறது.


வெறும் நூறு பக்கங்களைத் தாண்டிய இந்த நாவல்  இஸ்லாமிய சமூகம் குறித்து பொது சமூகம் அறியாத அம்மக்களின் வாழ்வியலை அம்மணத்துடன்  காட்டும் கலை முயற்சியின் வடிவம் என்பேன்.


இரு வேறு இஸ்லாமிய தெருக்களின் வாழ்வியல் உலகை நுண் சித்தரிப்புகள்  வழியாக நம்முன் அதன் உண்மை வீச்சுடன் காட்டியுள்ளார் ஜாகிர்ராஜா.


இஸ்லாமிய சமூக மக்களின் மனசாட்சி சாசனம் என்று கூட கீரனூர் ஜாகிர்ராஜாவின் எழுத்துக்களை கூறலாம்.


Velu malayan

5.8.2023

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்