கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்:மகுடேசுவரன்

விஜய நகர பேரரசின் தலைநகரமாக விளங்கிய ஹம்பி என்னும் விஜயநகரம் தலைக்கோட்டை போரினால் சிதைந்து சிதிலமடைந்த கோயிலாக, கோட்டைகளாக வெறும் வரலாற்று தடமாக எஞ்சி இருக்கிறது.



1336 இல் ஹரிஹரர்,புக்களின் சங்கம வம்ச ஆட்சியிலிருந்து விஜயநகரம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டி எழுப்பப்படுகிறது.அக்காலத்தில் இருந்த உலகின் வேறு எந்த நகரத்தை விடவும் இந்நகரே மிகப்பெரியதாகவும், செல்வ வளம் மிக்கதாயும் இருந்திருக்கிறது.

விஜயநகரம் பெரு நகரமாய் புகழ்பெற்று விளங்கிய போது இன்று உள்ள பல ஐரோப்பிய நகரங்கள் அப்போது வெறும் சிற்றூர்களாக இருந்தன.வேறு பல ஐரோப்பிய நகரங்கள் தோன்றியிருக்கவே இல்லை.

அமெரிக்க கண்டம் கண்டறியப்படாத தரிசு கண்டமாய் இருந்திருக்கிறது. அன்றைய லண்டன் அன்றைய விஜய நகரத்தோடு ஒப்பிடக்கூட தகுதியற்றதாக இருந்திருக்கிறது.விஜய நகரத்தை அன்றைய ஒரே ஒரு ஐரோப்பிய நகரத்தோடு மட்டுமே ஒப்பிடலாம் என்றால் அது ரோம் நகரம் மட்டுமே.

விஜய நகரத்தில் இருந்த எல்லா ஆலயங்களும் வைணவ ஆலயங்களாக இருக்கையில் விருப்பாக்சரர் ஆலயம் சிவாலயமாக இருப்பது அதன் பழமையால்தான்.கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்தில் தான் ஒட்டுமொத்த விஜயநகரமும் வைணவமயமானது.

விருப்பாக்சரர் ஆலயத்தின் சிறப்பு அதன் முன்புற கோபுரம் தான்.ஹம்பியின் சின்னமாக அக்கோபுரமே அறியப்படுகிறது தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தோடு ஒப்பிடத்தக்க விண் முட்டும் பேரெடுப்பு அது.160 அடி உயரமும்  ஒன்பது அடுக்குகளும் கொண்ட கோபுரத்தை ஹம்பியில் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் மிடுக்காக தெரியும்.



விட்டலர் ஆலயத்தின் கிழக்கு கோபுரம் பீரங்கி தாக்குதலுக்கு உட்பட்டு  அரைச்சிதலமாய் இருக்கிறது.அதனுள் நுழைந்து ஆலயத்தின் பெரும் பரப்பை பார்த்தால் மூச்சே நின்று விடும்.பெண்ணுக்கு கூந்தல் கலைந்த பின்னரும் ஒரு அழகு கூடிவருமே அதை போல் சிதிலத்தின் பின்னும் சீர் திகழ்ச்சிக்கு குறைவில்லாத கோயிலாய் விட்டலர் கோயில் இருக்கிறது.1513 ஆம் ஆண்டில் கிருஷ்ணதேவராயார் பார்த்து பார்த்து இழைத்து இழைத்து கட்டப்பட்ட இக்கோயில் மண்ணுலகில் ஒரு இந்திர சபை கூடமாய் இருந்திருக்கிறது.



படையெடுத்து வந்த பாமினி சுல்தான்கள் கோயிலின் கோபுரத்தை பீரங்கியால் சுட்டு சிதைத்தது போல் உள்ளிருந்த மர வேலைப்பாடுகளை தீயிட்டு பொசுக்கி விட்டனர் தேக்கு மர மண்டபங்கள் பன்னெடு நாள் அணையாது எரிந்தனவாம்.

ஹம்பியை பற்றி தெரிந்து கொள்ளவும் ஹம்பியை சுற்றிப் பார்க்க விரும்புவர்களுக்கும் இந்த புத்தகம் ஒரு முன் தடமாக இருக்கும்.



Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்