என் இலக்கிய நண்பர்கள்-எம்.வி.வெங்கட்ராம்

 மைசூர் வெங்கடாஜலபதி வெங்கட்ராம் என்கின்ற எம்.வி. வெங்கட்ராம் காதுகள் நித்தியக்கன்னி வேள்வித்தீ போன்ற தமிழ் நாவல்களால் பரவலாக அறியப்பட்டவர்.



தன்னுடைய 16 வது வயதில் சிறுகதையின் பீஷ்மர் என்று அழைக்கப்படும் கு.ப.ரா மற்றும் புதுக்கவிதையின் தந்தை என அழைக்கப்படும் நா.பிச்சை மூர்த்தி ஆகியோரின் வழிகாட்டுதலில் சிட்டுக்குருவி என்ற சிறுகதையின் மூலம் மணிக்கொடி இதழில் அறிமுகமானவர்.


கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் அறுபது வருடங்கள்இலக்கியத்தில் எழுதி கழித்தவர் எம்.வி.வெங்கட்ராம்.

அவருக்கு 56 வருடங்கள் கழித்து எழுபதைத்தாண்டிய தன் வயோதிக வயதில் காதுகள் நாவலுக்கு சாகித்திய அகடாமி விருது கொடுக்கப்பட்டது.


விருதுகளும் அங்கீகாரமும் பாரதி தொடங்கி புதுமைப்பித்தன் வரை உரிய நேரத்தில் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கிடைக்காமல் போனவை.அதனால்தான் எழுத்து வாழ்க்கை பற்றி எம்.வி.வெங்கட்ராம் இப்படி கூறுகிறார்


"என் கதைகளில் நான் என்னையே தேடினேன்.நான் அறிந்ததை

கேட்டதை பார்த்ததை பேசியதை அனுபவித்ததை தொட்டதை

விட்டதை சிந்தித்ததையே எழுதினேன்.எழுதி எழுதித் தீர்த்தேன்

பாதி எனக்காகவும் பாதி பசிக்காகவும்.

தமிழ்நாட்டில் முழு நேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு

மானங்கெட்ட பிழைப்பு”


வெங்கட்ராம் எழுதிய என் இலக்கிய நண்பர்கள் என்ற இந்த நூலில்தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடன் பழகிய இலக்கிய கர்த்தாக்கள் தி. ஜானகிராமன்,க.நா.சு, மெளனி ஆகியோருடன் பழகிய நினைவுகளை முன்வைக்கிறார்.



Noise Hallucination பிரச்சனையால் ஒருவித இறுக்கத்திற்கு ஆட்பட்டிருந்த எம்.வி. வெங்கட்ராமை தன் சென்னை வீட்டில் தங்க வைத்து தி.ஜானகிராமனை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.


புராண கதைகள் சார்ந்த பின்புலத்தில் எழுதிய தன் கதைகளை  பழைய கதைகளின் புது மெருகு என கடுமையாக விமர்சித்த க.நா.சு தன்னுடைய நித்தியகன்னி நாவலை வெகுவாக பாராட்டி பேசியிருந்ததை இந்த நாவலும் பழைய கதைகளின் புது மெருகுதானே.நேற்று ஒன்று பேசுகிறீர்கள் இன்று ஒன்று பேசுகிறீர்கள்.நாளை ஒன்று பேசுவீர்களா.உங்கள் விமர்சனத்தில் ஒரு perminism இல்லை என்று வாதிட்டதை இந்நூலில் நினைவு கூறுகிறார்.மேலும் தன்னை ஒரு சௌராஷ்டிரா சாதியைச் சார்ந்தவன் என்று க.நா.சு தன்னை அடையாளப்படுத்தியதையும் கடுமையாக விமர்சித்துள்ளார் எம்.வி.வெங்கட்ராம்.


தான் தொடங்கி நடத்தி வந்த தேனீ என்ற இலக்கிய இதழில் நிறைய எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்ட எம்.வி. வெங்கட்ராம் மெளனியின் தமிழ் அவ்வளவு பிழைகள் நிரம்பியதுஎன்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

இவரை எப்படி புதுமைப்பித்தன் சிறுகதைகளின் திருமூலர் என பாராட்டினார் என்ற குற்றச்சாட்டையும் கேள்வியையும் எம்.வி.வெங்கட்ராம் வைக்கிறார்.


மூன்று ஆளுமையுடன் பழகிய நினைவுகளை அவர்களுடைய பலம் பலவீனங்களுடன் நேர்மையாக இந்நூலில் முன் வைத்துள்ளார் எம்.வி. வெங்கட்ராம்.


தன் வாழ்வில் காதும் காமமும் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது என்பதற்கு  காதுகள் நாவல் உருவானதையும் பதினான்கு குழந்தைகள் பெற்றதையும் உதாரணமாகக் கொள்ளலாம்.காமம் தன்னை தொடர்ந்து அலை கழித்ததால் தன் மனைவியை தான் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததை காதுகள் நாவலில் பதிவு செய்திருப்பார் எம்.வி.வெங்கட்ராம்.


புதுமைப்பித்தனைப் போல எம்.வி. வெங்கட்ராமும் நூற்றாண்டு கண்ட எழுத்தாளர்.வெங்கட்ராம் தன் வாழ்ந்த காலத்தை ஒப்பிடுகையில் குறைவாகவே எழுதியுள்ளார்.


"நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்"


"நினைப்பதால் உருவாகிற கோட்டை நினைப்பதால் இடிகிறது. இரண்டுக்குமே நினைவே காரணமாகிறது" என்ற வார்த்தைகளை வைத்துப் பார்த்தால் எம்.வி.வெங்கட்ராம் நிறைய உளச்சிக்கலில் வாழ்ந்திருக்கிறார்.


 நான் வாசித்த காதுகள் நாவலை வைத்து சொல்கிறேன்.அவர் ஒரு பொறுட்படுத்த தக்க எழுத்துக்களையே எம்.வி.வெங்கட்ராம் தந்துவிட்டு சென்றிருக்கிறார்.


எம்.வி.வெங்கட்ராம எழுதிய இந்த என் இலக்கிய நண்பர்கள் நூல் தன் மூன்று நண்பர்களான தி.ஜா. க.நா.சு, மெளனி ஆகியோருடன் பழகிய நினைவோடைகளின் தொகுப்பு.விருப்பமுள்ள நண்பர்கள் வாசிக்கலாம்.

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்