விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2021

 ///நான் கலந்துகொண்ட முதல் விஷ்ணுபுரம் விருது விழா இது.



இலக்கியத்தில் ஆழப் பங்காற்றிய படைப்பாளிகளுக்கு

ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வில் பல்வேறு எழுத்தாளர்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.

படைப்பாளிகளும்,வாசகர்களும் உரையாடல் வழியே இலக்கிய படைப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஒரு அறிவுப் பெருக்கின் களமாக விஷ்ணுபுரம் விருது விழா இருந்தது.

தொடர்ந்து  வாழ்வை சூழ்ந்து கொண்டேயிருக்கும் அன்றாட சிடுக்குகளைத் தாண்டி சிந்திக்காதவர்கள்,

பணம்,பொருளீட்டல் வழியே வசதி பெருக்குதலை மட்டுமே வாழ்வின் முதன்மையான கொள்கையாக கொண்டிருக்கும் ஒரு சராசரி செக்கு மாட்டு வாழ்வைத் தாண்டிய ஒரு அறிவார்ந்த சமூகத்தை இலக்கியம் வழியாக, உரையாடல் வழியாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.


பதினோரு வருடங்களாக விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழியாக பல்வேறு படைப்பாளிகளுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்து வருகிறது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.

கலந்துரையாடலில் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படைப்பு சார்ந்த விஷயங்களைத் தாண்டி தேவையற்ற கேள்விகளையோ,படைப்பாளிகளின் மனம் புண்படும் நோக்கிலோ எவ்வித வார்த்தையும் பேசக்கூடாது என்கிற ரீதியில் நிகழ்வை கடைசிவரை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் நிகழ்வை நெறிப்படுத்தி நடத்தினார்கள்.

இலக்கிய அமர்வு நிகழ்வின் முதல் சிறப்பு விருந்தினராக தமிழினி மின் இதழின் ஆசிரியர் திரு.கோகுல் பிரசாத் அவர்கள் சினிமா குறித்தும், இலக்கியம் குறித்தும் வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இலக்கிய அமர்வு உரையாடல் நிகழ்வில் தம்மம் தந்தவன் என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் ஆர்.காளி பிரசாத் மிக எதார்த்தமாக கேள்விகளுக்கு பதிலளித்தார். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ஆள்தலும் அளத்தலும் என்ற படைப்பு தொடர்பான கேள்விகளுக்கும்,வாசகர்கள் சுட்டிக்காட்டிய அவருடைய சிறுகதைகளில் இருந்த பலவீனங்களையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.அந்தப் பணிதலும்,தவறென சுட்டப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதும்  ஒரு படைப்பாளிக்கான சிறந்த குணம்.அது காளி பிரசாத்திடம் இருந்தது.

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் படைப்புகளை முன்வைத்து வாசகர்கள் எம்.கோபாலகிருஷ்ணனிடம் உரையாடல் நிகழ்த்தினார்கள்.

அவர் எழுதிய மனைமாட்சி,மணல் கடிகை, அம்மன் நெசவு போன்ற நாவல்களில் உள்ள பெண் பாத்திரங்கள் மற்றும் பிற பாத்திரங்கள் பற்றி உரையாடப்பட்டது.

ஒரு வாசகர் நெசவு தொழிலை பிரதான தொழிலாக கொண்டு வாழும் கன்னடம் பேசும் தேவாங்கு செட்டியார்களின் வாழ்க்கையை நீங்கள் ஏன் எழுதவில்லை.அப்படி எழுதினால் நீங்கள் அந்த சமூகத்தைச் சார்ந்தவர் என்று தெரிந்துவிடும் என்று திட்டமிட்டே மறைக்கிறீர்களா என்ற கேள்விக்கு இல்லை அம்மன் நெசவு என்ற நாவல் தேவாங்கு செட்டியார்களின் வாழ்வியல் பற்றியதுதான்.குறிப்பாக எனது எல்லா நாவல்களிலும் அவர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன் என்று பதிலளித்தார் எம்.கோபாலகிருஷ்ணன்.

எழுத்தாளர் பா.திருச்செந்தாழையின் சிறுகதைகள் குறித்து வாசகர்கள் நிறைய கேள்விகளை முன்வைத்தார்கள்.

பா.திருச்செந்தாழையின் சில சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவருடைய மொழி சிறுகதை முழுவதும் கவிதை வடிவிலும்,ஆபரண மொழியோடும் இருப்பதை காணலாம்.

தான் ஒரு மளிகை கடை நடத்தி வருவதாகவும் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களை கையாள நான் படித்த இலக்கியம் தான் எனக்கு கை கொடுக்கிறது என்றார்.ஏனென்றால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு நாவல் என்று கூறினார்.

பா.திருச்செந்தாழையின் புதிய சிறுகதைத்தொகுப்பான விலாசம் 2022ம் ஆண்டு வெளிவர இருக்கிறது.

எழுத்தாளர் செந்தில் ஜெகநாதன் பங்கேற்ற இலக்கிய அமர்வு சிறப்பாக இருந்தது.பதட்டமில்லாமல் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதமே அவர் ஆளுமையை பறைசாற்றியது.

அவருடைய மழைக்கண்,அன்பின் நிழல்,எவ்வம், நித்தியமானவன் போன்ற சிறுகதைகளை முன் வைத்து கேள்விகள் கேட்கப்பட்டது.

எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்கள் எழுத்தாளர் செந்தில் ஜெகநாதன் அவர்களை  கு.அழகிரிசாமி மற்றும் என்னுடைய வாரிசு என்று கூறினார்.

சு.வேணுகோபால் எழுதிய கூந்தப்பனை,வெண்ணிலை திசையெல்லாம் நெருஞ்சி போன்ற சிறுகதைத் தொகுப்புகளை நான் வாசித்திருக்கிறேன்.தமிழின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் வேணுகோபால் அவர்கள்.

எழுத்தாளர் சுஷில்குமார் அவர்கள் கலந்து கொண்ட இலக்கிய அமர்வு நிகழ்வும் நன்றாக இருந்தது.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பான சப்தவர்ணம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அய்யா முன்னிலையில் வெளியிடப்பட்டது.

எழுத்தாளர் ஜா.தீபா கலந்து கொண்ட நிகழ்வு சுவாரஸ்யமாக இருந்தது.எழுத்தாளர் ஜா.தீபாவிடம் நீங்கள் ஏன் பெண்களை முதன்மைப்படுத்தி மட்டும் கதை எழுதுகிறீர்கள்.மறைந்த எழுத்தாளர் ஆர்.சூடாமணி ஒரு பெண் எழுத்தாளர் தான் ஆனால் அவர் நிறைய ஆண்களை பற்றி கதை எழுதியிருக்கிறார் என்ற சு.வேணுகோபால் அவர்களின் கேள்விக்கு முதலில் நாங்கள் பெண்களைப் பற்றி எழுதுகிறோம்.பிறகு ஆண்களைப் பற்றி எழுதிக் கொள்ளலாம் என்று பதிலளித்தார் ஜா.தீபா.

முதல் நாளான இலக்கிய அமர்வு நிகழ்வின் கடைசி சிறப்பு விருந்தினராக சோ.தர்மன் அய்யா அவர்கள் கலந்து கொண்டார்.சோ.தர்மன் அய்யா அவர்களின் பகடிப் பேச்சில் கூட்ட அரங்கமே குலுங்கி குலுங்கி சிரித்தது.

கி.ராஜநாராயணனுக்குப் பிறகு கரிசல் மண்ணின் கதைகளை, அம்மண்ணின் தொன்மங்களை தன் படைப்புகளின் வழியே எழுதிக் கொண்டிருப்பவர் சோ.தர்மன் அய்யா அவர்கள்.

இப்படி ஒரு விருது இந்நிகழ்வை உருவாக்கிய பிதாமகர் ஜெயமோகன் அவர்கள் நிகழ்வில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் பார்வையாளர்கள் ஊடாக அமர்ந்து தன்னை ஒரு வாசகனாக பார்வையாளனாகவே முன்வைத்து கொண்டார்.

நிறைய எழுத்தாளர்களை தூர இருந்தே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் வாசித்தறிந்த படைப்பாளர்களுடன் மட்டுமே புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

பாவண்ணன் எப்பொழுதுமே எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்.அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

அடுத்து நிழலின் தனிமை நாவல் வழியாக எனக்கு பிடித்த எழுத்தாளர் தேவிபாரதி அவர்களிடம் பேசும் வாய்ப்பு அமைந்தது.

இதுவரை புகைப்படமாக காணொளி வழியாக பார்த்திருந்த ஜெயமோகன் அவர்களின் உருவை நேரில் நெருங்கியபோது மெல்லிய ஆச்சரியம் என் அகத்துக்குள் எழுந்தடங்கியது.

ஜெயமோகன் எந்த இருக்கையில் அமர்கிறார் என்ன செய்கிறார் என்பதை மதிப்புடன்,ஒரு பிரமிப்புடன் ஒரு உளவாளி போல பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு பெரும் அறிவு கூட்டத்தை தன் பின்னால் வைத்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன் உண்மையில் ஒரு மாஸ்டர் தான்.

நிகிழ்வில் வழங்கப்பட்ட உணவுப் பற்றி பேசவில்லை என்றால் என் நாக்கு நன்றி மறந்த ஒன்றாகி விடும்.

பற்றாக்குறையற்ற ஒரு பந்தி முறை.பேதமற்ற ஒரு பெரிய கவனிப்பு. ஐந்து வேலை உண்டேன்.வயிறும், மனமும் நிரம்ப உண்டேன்.

உண்மையில் இந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழா அறிவையும், அன்னத்தையும் இட்டு நிரப்பி அனுப்பி வைத்த ஒரு நிறைவான விழாவாக இருந்தது.

மீண்டும் 2022 விஷ்ணுபுரம் விருது விழாவில் சந்திப்போம்.///

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்