போக்கிடம்

 ///விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலை முன்வைத்து



இரண்டு வருடங்களுக்கு முன்பு விட்டல்ராவ் எழுதிய நிலநடுக்கோடு  நாவலை வாங்கினேன்.

இதுவரைக்கும் அந்த நாவல் வாசிக்கப்படாமல் புத்தக அலமாரியிலேயே தூங்கிக்கொண்டிருக்கிறது.

புத்தக அலமாரியை சரி செய்து கொண்டிருக்கும் போது விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவல் கண்ணில் பட்டது.எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

படிக்க ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது அது என் சொந்த மண்ணின் கதை, என் தருமபுரி மக்களின் மொழியில் எழுதப்பட்ட ஒரு படைப்பு என்று.

டேனிஸ்பேட்டை என்ற கிராமத்தினை மையப்படுத்தியது தான் நாவல்.பொம்மிடி,மொரப்பூர்,தொட்டம்பட்டி, பூதநத்தம்,கடத்தூர்,அரூர் ஆகிய எங்கள் ஊர்களைப் பற்றிய சித்திரத்தை இந்நாவல் முழுக்க காட்டியுள்ளார் விட்டல்ராவ்.

சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள இடங்களில் இரும்பின் முக்கிய தாது பொருளான மேக்னசைட் இருப்பதால் அப்பகுதியில் உள்ள கனிமங்களை எடுக்க டேனிஸ்பேட்டை என்ற கிராமத்தை அரசு கையப்படுத்து அந்த கிராமத்தையே இடப்பெயர்வு செய்வது தான் நாவலின் கதை.

ஏய் நல்லா கீறயா?டேய் பியா எப்பிடிடா கீற என தருமபுரி மக்களின் மொழியை நாவல் முழுக்க காணலாம்.

என் மண்ணின் மொழி,என் மக்களின் மொழி என்பதால் எனக்கு இந்த நாவல் வாசிப்பதற்கு மிக அணுக்கமாக இருந்தது.

ஒரு அசல் கிராம வாழ்க்கையின் சித்திரத்தை அதன் மண் மணத்தோடு முன்வைக்கிறது இந்த நாவல்.

இந்நாவலில் வரும் பேச்சியும்,மாரியப்பக் கவுண்டரும் நான் என் ஊரில் பார்த்த மனிதர்கள்.

நாவலில் வரும் பேச்சி இருபதை தாண்டிய வயதில் கணவனை இழந்தவள்.டேனிஸ்பேட்டை வாத்தியாராக வரும் சுகவனம்,ஊர் கவுண்டராக இருக்கும் மாரியப்ப கவுண்டர்,மாரியப்ப கவுண்டருடன் பகையாக இருக்கும் சுப்புரு என்கிற சுப்பிரமணி என எல்லோரும் அவளை உடல்ரீதியாக சுரண்டுகிறார்கள்.

அவள் ஒரு நிரந்தர போக்கிடமின்றி மாரியப்ப கவுண்டரின் நிழலில் வாழ்கிறாள்.

கடைசியில் டேனிஷ்பேட்டைக்கு தார்ரோடு போட வரும் ரோடு ரோலர் டிரைவர் பீர்முகம்மது உடன் பேச்சி பெங்களூரு ஓடிவிடுகிறாள்.

பெரும்பாலான கதைகளில் ஒரு ஊருக்கு வரும் பள்ளி ஆசிரியரை மிக நல்லவனாக காண்பிப்பார்கள்.ஆனால் அந்தத் தவறை விட்டல்ராவ் இந்த நாவலில் செய்யவில்லை.

பள்ளி குழந்தைகளுக்கு வரும் பால் பவுடரை பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்காமல் காசாக்கி அதை மற்றவர்களுடன் பள்ளி ஆசிரியர் சுகவனம் பிரித்துக் கொள்கிறார்.

மதிய உணவிற்கு வரும் பணத்தையும் சண்முகம், வேடியப்பன்,ராஜமாணிக்கம் ஆகியோர்  சுகவனத்துடன் பிரித்துக் கொள்கிறார்கள்.

எங்கள் ஊர் ஆரம்ப பள்ளிக்கு ஈரோட்டில் இருந்து மோகன் வாத்தியார் என்பவர் பணிபுரிந்தார். என் தாய்மாமாவுக்கு எல்லாம் அவர்தான் வாத்தியார்.மோகன் வாத்தியார் எங்கள் ஊரிலேயே தங்கி குடியிருந்தும் உள்ளார்.

அப்போது அவர் சின்னக்கண்ணி என்ற எங்கள் ஊரைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தார் என்று ஊரே சொல்லும்.

இந்த நாவலில் வரும் சுகவனமும் அப்படித்தான் பேச்சியை தன் உடல் வெறிக்கு பயன்படுத்திக் கொள்கிறான்.பேச்சியின் விருப்பத்துடன் தான் என்றாலும் அவளை கைவிடும் நோக்கத்தில்தான் அவளுடன் பழகுகிறான்.

சுகவனம் பாத்திரம் அப்படி ஒன்றும் கெட்டவன் இல்லை.ஆனால் யதார்த்த வாழ்வின் போக்கில் அவனுக்குள்ளிரும் காமம் பேச்சியை ஏமாற்ற வைக்கிறது .அவனுக்கு இருக்கும் பணத்தேவை பள்ளி குழந்தைகளுக்கு வரும் பணத்தை பங்கு போட்டுக் கொள்ள வைக்கிறது.

பள்ளியில் ஒழுங்காக பாடம் நடத்தாமல் டியூசன் நடத்தி பணம் சம்பாதித்துக் கொள்கிறான் சுகவனம்.

மாரியப்ப கவுண்டர் உடன் உள்ள பகையை காரணம் காட்டி,மாரியப்ப கவுண்டரை பழிவாங்குவதாய் எண்ணி  சுப்பிரமணியம் கூட தன்னுடைய ஆசைக்கு பேச்சியை பயன்படுத்திக் கொள்கிறான்.

தன் தந்தை மாரியப்ப கவுண்டர் விவசாயம் செய்து கொண்டிருந்தாலும் அவருடைய மகன் தீர்த்தகிரி சென்னைக்கு சென்று படித்து கார்ப்பரேஷன் நடத்திய குமாஸ்தா தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையில் சேர்ந்து கொள்கிறான்.

ஒரு தலைமுறை விவசாயத்தை முற்றிலுமாக விட்டு வேறு தொழில்களை நாடி செல்வதை தீர்த்தகிரி வழியே பதிவு செய்கிறார் விட்டல்ராவ்.

டேனிஸ்பேட்டை மெல்ல மெல்ல கிராமம் என்ற தன் நிறத்தை இழப்பதால் தெருக்கூத்து கலைஞனாக இருக்கும் தீர்த்தகிரியின் சித்தப்பா சின்ன காளி தெருக்கூத்து கலை மெல்ல மதிப்பிழப்பதால் தொழில் நசிந்து சித்த சுவாதீனமற்றவனாக மாறிவிடுகிறான்.

தொழிற்சாலைகள் அமைக்க,சாலைகள் போட,சுரங்கங்கள் வெட்டுவதற்கு என அரசு அங்கு வாழும் மக்களை இடம் பெயரச் செய்யும் நிலை இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்படி தாங்கள் வாழும் இடத்தை,விவசாய நிலத்தை இழந்து போக்கிடமின்றி வேறு ஒரு இடத்திற்கு இடம் பெயர்வு செய்யப்படும் ஒரு கிராமத்தைப் பற்றிய ஒரு சித்திரம் தான் போக்கிடம் நாவல் என்றாலும், விசாயத்தை விரும்பாமல் வேறு தொழில்களை தேடிச் செல்லும் ஒரு தலைமுறையையையும் சேர்த்து இந்நாவல் பதிவு செய்கிறது.



நான் வாசித்து வரை தமிழில் இடப்பெயர்வு பற்றிய பதிவுகளுடன் எழுதப்பட்ட நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம் என நினைக்கிறேன்.

கள்ளிக்காட்டு இதிகாசம் மேட்டூர் அணை கட்டுவதற்காக அங்கிருந்த மக்கள் இடம்பெயர்வு செய்யப்பட்டதை வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலில் பதிவு செய்திருப்பார்.

கள்ளிக்காட்டு இதிகாசம் ஒரு எதார்த்தமான நாவலா என்றால்?இல்லை என்றும் கூட சொல்லலாம்.

ஆனால் போக்கிடம் நாவல் முழுக்க முழுக்க ஒரு மிகைப்படுத்தப்படாத யதார்த்த வாழ்வின் சித்திரத்தை முன்வைக்கும் நாவல் என்பேன்.

மிக நுட்பமாக அங்கு வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல் முறை, பண்பாட்டு முறைகளை கூர்ந்து அவதானித்து எழுதியிருக்கிறார் விட்டல்ராவ்.

நாவலில் ஓரிடத்தில் சுகவனம் பேச்சியிடம் பேசும்போது கணவனை இழந்த பெண்கள் வெள்ளைபுடவை கட்டிக் கொள்வது கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் வம்சத்திலிருக்கும் பழக்கம்.எங்களுக்கு அந்த பழக்கம் கிடையாது என்கிறாள்.

பேச்சி எந்த சாதியை சேர்ந்தவள் என்பதை நாவலில் வெளிப்படையாக சொல்வதில்லை.

1976 ல் எழுதப்பட்ட நாவல் இது.1970 களில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள புட்டிரெட்டிபட்டி பஞ்சாயத்து போர்டு ஆரம்ப பள்ளிக்கு ஓராண்டு பயிற்சி ஆசிரியராக விட்டல்ராவ் பணிபுரிந்தபோது அவர் பார்த்து திரட்டிய அனுபவங்களின் புனைவுதான் இந்த நாவல்.

பேச்சியின் மகனாக வரும் பைய்யப்பன் என்ற சிறுவன், பேச்சி வளர்க்கும் நாய் கரியன்,சேர்வராயன் மலை வளர்ந்துகொண்டே இருக்கிறது அது அழியாது என கூறும் மூப்பன்,மாரியப்ப கவுண்டரின் மனைவி ஆராயி என நிறைய மனதில் நிற்கும் பாத்திரங்கள் நாவல் முழுக்க.

டேனிஷ்பேட்டை என்ற ஒரு அசல் கிராமத்தில் வாழ்ந்த உணர்வை இந்த நாவல் நமக்கு கொடுக்கிறது.

ஒரு நல்ல எதார்த்தமான படைப்பு போக்கிடம் நாவல்///


Velu malayan

26.10.2021

❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்