ரப்பர்

 ///ஜெயமோகன் எழுதிய ரப்பர் நாவலை முன்வைத்து



ஒரு படைப்பாளியின் முதல் நாவலுக்கு பிறகு எழுதப்படும் நாவல்களில் இருக்கும் முதிர்ச்சியும்,வடிவ நேர்த்தியும் முதல் நாவலில் இருக்காது.ஆனால் ஜெயமோகனின் ரப்பர் அதற்கு விதிவிலக்கானது.

முதல் நாவலிலேயே வடிவ நேர்த்தியும்,கலைத் தன்மையும் கொண்டு  ரப்பர் நாவலை எழுதியுள்ளார் ஜெயமோகன்.

ஜெயமோகனின் படைப்புகளில் நான் வாசித்த வரை கண்டது அவரது படைப்புகளில் மனித மனங்கள் கொள்ளும் ஒரு பெருங்கனவின் எழுச்சியையும்,அதன் பின் நிகழும் வீழ்ச்சியையும் தான்.

இந்த ரப்பர் நாவல் சா.கந்தசாமி அவர்கள் எழுதிய சாயவனம் நாவலைப் போல சுற்றுச்சூழலியல் சிதைவை பேசும் நாவல் என்று ஒரு வகையில் வைத்துக்கொண்டாலும் ஒரு கட்டத்தில் பொருளியலில்,சமூக அந்தஸ்த்தில நாயர் சாதியின் வீழ்ச்சியையும்,நாடார் சாதியின் எழுச்சியையும் பதிவு செய்யக்கூடிய வரலாற்று நாவல் என்றுகூட வைத்துப் பார்க்கலாம்.

ஒரு காலத்தில் நாயர் சாதிகளால் ஒடுக்கப்பட்ட சாதியாக இருந்தது நாடார் சாதி.அவர்கள் மெல்ல மேலெழுந்து வந்த  வரலாற்று சித்திரத்திரத்தை இந்நாவலில் வரும் பொன்னுமணி பெருவட்டரின் வழியே பதிவு செய்கிறார் ஜெயமோகன்.

ஒரு காலத்தில் அறைக்கல் குடும்பமாய் அதாவது ராஜ வம்சமாய் வாழ்ந்த குடும்ப பின்னணி கொண்ட தங்கம்(நாயர் சாதிப்பெண்) என்பவள் பொன்னுமணி பெருவட்டரின் வீட்டில் வேலைக்காரியாக இருக்கிறாள்.

தன் வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் தங்கம் ஒரு காலத்தில் தன்னை ஒடுக்கப்பட்ட சாதியாக பார்த்த நாயர் சாதி பெண் நமக்கு வேலைக்காரியாக இருக்கிறாள் என்று உள்ளூர பெருமை கொள்கிறார் செல்லையா பெருவட்டர்.வீட்டிற்கு வருவோரிடம் எல்லாம் தங்கம் என் வீட்டு வேலைக்காரி அவள் பின்புலம் பற்றி பேசி பெருமை கொள்ளுவதில் செல்லையா பெருவட்டர் நாயர் சமூகம் தமக்கு செய்த வரலாற்று வஞ்சத்திற்கு பழி தீர்த்து விட்டதின் ஒரு குரூர திருப்தி அவரது கண்களில் ஒளிர்வதை கண்டு கொள்கிறான் பிரான்சிஸ்.

ஐரோப்பாவின்  தலை சிறந்த ஓவியரான டச்சு  நாட்டைச் சேர்ந்த ரெம்ப்ரெண்ட் வரைந்த புனித இயேசு உள்ள படம் பெருவட்டரின் வீட்டு சுவரில் மாட்டப்பட்டிருந்தாலும் பிரான்சிஸ்சைத் தவிர அந்த வீட்டில் உள்ள அனைவருமே அசுத்த ஆன்மாக்கள் கொண்டவர்கள்.

தங்கத்தை உடலளவில் சுரண்டி அவள் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் பிரான்சிஸ்ஸின் தம்பி டேவிட் லிவிங்ஸ்டன்,

பணத்திற்காகவே செல்லையா பெருவட்டரை மணந்து இவரை உள்ளூர ஒரு பொருட்டாகவே மதிக்காத திரேஸ் என அசுத்தமனம் கொண்ட மனிதர்களை கொண்டுள்ளது அவ்வீடு.

குடி,சுகேசினிஎன்ற பெண்ணுடன் தொடர்பு என இருந்தாலும் உண்மையான அன்புக்கு ஏங்கும் மனக்குழப்பம் உள்ள மனிதனாகவே நாவல் முழுக்க வருகிறான் பிரான்சிஸ்.

ரப்பர் தோட்டத்தில் ரப்பர் ஓட்டு கறையை திருட வந்து மாட்டிக்கொண்டு பின்பொண்ணுமணி பெருவட்டருக்கு வேலைக்காரனாக வரும் குஞ்சிமுத்து பாத்திரம் விசுவாசத்தின் உருவம் எனலாம்.

நாவலில் திரேஸ்க்கும்,எபனுக்கும் பள்ளி நாட்களில் ஏற்படும் காதலைப் பற்றிய அத்தியாயங்கள் அடிநாக்கில் ஒளிந்திருக்கும் கற்கண்டின் இனிப்புகள் என அவள் நினைப்பதில்லை.போராட்டம் புரட்சி என போய் எபன் போலீசாரால் கொல்லப்படுகிறான்.அவனைப் பற்றி அவள் நினைக்கும் போதெல்லாம் எபனை பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொள்கிறாள்.

வெறும் பணத்திற்காகவும் சொத்துக்காகவும் செல்லையா பெருவட்டரை மணந்து கொள்கிறாள் திரேஸ்.



"பறவைகள் விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை. அதேபோல் காட்டுப்பூக்கள் நூற்பதும் இல்லை,நெய்வதும் இல்லை"

பறவைகளையும்,பூக்களையும் கவனித்துக் கொள்ளும் இறைவன் மனிதர்களை கவனிக்காமல் விட்டு விடுவாரா?என்பது தான் பைபிளில் இயேசு கூறும் இந்த உவமையின் சாரம்.

திருமணம் செய்து கொள்ளாமல் குடி,பெண்களுடன் காம களிப்பு,மனதில் எப்பொழுதும் ஒரு குழப்பத்துடன் திரியும் பிரான்சிஸ் ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று காரை எடுத்துக் கொண்டு ஒரு ஆற்றை கடக்கையில் அங்கு விளையாடும் சிறு குழந்தைகளின் ஆனந்தத்தில் தன்னை மீட்டுக் கொள்ளுகிறான்.

அடுத்ததாக டாக்டர் லாரன்ஸ் கூறும் "பறவைகள் விதைப்பதுமில்லை அறுவடை செய்வதுமில்லை"என்று கூறும் இயேசுவின் வாசகத்தில் தன்னை உணர்ந்து கொள்கிறான்.

சாவு தான் வாழ்வின் பரியந்தம் என்று அலைந்து கொண்டிருக்கும் பிரான்சிஸ்  அந்த பைபிள் வரியில் தான் வாழ்வின் தரிசனத்தை கண்டு கொள்கிறான்.

நாவலில் டாக்டர் ராம்,தங்கத்தின் அண்ணன் வேலப்பன் நாயர்,பொன்னுமணி பெருவட்டரின் நண்பர் காணன் கங்காணி, பெருவட்டத்தி திரேஸ், குஞ்சிமுத்து,லிவி, பாஸ்டர் ராஜேந்திரன் என நிறைய பாத்திரங்கள் வந்தாலும் பிரான்சிஸ் பாத்திரம் தான் நாவல் படித்து முடிக்கையில் மனதில் நிலைத்து நிற்கிறது.

என் கலையில் நான் தான் மாஸ்டர் என்று ஜெயமோகன் கூறியது உண்மை தான் போல.

ரப்பர் நாவலிலேயே அதை நிகழ்த்தி காட்டியுள்ளார் ஜெயமோகன்///


velu malayan

24.10.2021

❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்