காடு நாவல்

 ///ஜெயமோகனின் காடு நாவலை முன்வைத்து



நான் தீவிர இலக்கியம் வாசிக்க ஆரம்பித்து நிறைய நாட்கள் கழித்து தான் எழுத்தாளர் ஜெயமோகனுடைய எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன்.

அதற்குக் காரணம் ஜெயமோகன் வலதுசாரி சிந்தனை கொண்டவர்.அதை தன் எழுத்துக்களிலும் பிரதிபலிப்பவர் என்று என்னுள் ஊட்டப்பட்ட பொதுவெளி கருத்துகள் ஒரு காரணமாக இருக்கலாம்.

நான் வாசித்த ஜெயமோகனின் நாவல்கள் என வெள்ளையானை, ஏழாம் உலகம்,கன்னி நிலம்,அனல்காற்று போன்றவற்றை  குறிப்பிடுவேன்.

அவருடைய பயண கட்டுரை நூல்கள் வரிசையில் முகங்களின் தேசம் மற்றும் நூறு நிலங்களின் மலை மட்டுமே நான் வாசித்தவை.

அவருடைய சிறுகதைகளை தொகுப்பாக படிக்காமல் தனித்தனி சிறுகதைகளாக நிறைய படித்திருந்தாலும் ஜெயமோகன் எனும் உருவத்தை என் அகத்தின் உள்ளே ஒரு பேருருவமாய் நிற்கச் செய்தது என அறம் சிறுகதைத் தொகுப்பைச் சொல்வேன்.

ஜெயமோகனின் கண்ணீரைப் பின்தொடர்தல் நூலை வாசித்த பிறகு தான் இந்திய பிராந்திய மொழிகளில் உள்ள எல்லா செவ்வியல் படைப்புகளையும் வாசிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

நான் வாசித்த வரை ஜெயமோகனுடைய படைப்புகளில் ஒரளவு செவ்வியல் தன்மை கொண்ட நாவல் என ஏழாம் உலகம் நாவலைச் சொல்வேன்.

பொதுவாக செவ்வியல் தன்மை கொண்ட நாவல்கள் நேர் போக்கான கதை சொல்லல் முறையில் அல்லாமல் ஒரு ஒழுங்கற்ற,வடிவ நேர்த்தியற்ற ஒரு கதை சொல்லல் முறையில் அமைந்திருக்கும்.

அதற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டாக வங்கமொழி நாவலான நீலகண்ட பறவையைத் தேடி நாவலைச் சொல்வேன்.

மேலோட்டமான வாசிப்பு மனநிலை கொண்டவர்களின் நிறைவேறாத ஏக்கங்களை தீர்த்து வைக்கும் வேலையை செவ்வியல் படைப்புகள் ஒரு போதும் செய்வதில்லை.

அப்படி முழுக்க முழுக்க செவ்வியல் தன்மை கொண்ட ஒரு நாவல் தான் ஜெயமோகனின் காடு நாவல்.

கிரிதரன் புண்ணியம் என்பவர் தன்னுடைய இளமைப்பருவத்தில்காட்டில் வாழ்ந்த தன் வாழ்க்கையை நினைவின் வழியே மீட்டு கதையாக காட்டின் வழியே விரிவது நாவல்.

குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட பன்னாலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு நாடகம் என்ற நாவலில் காலு பட்டேல் என்ற வயதான ஒரு முதியவர் உக்கா இழுத்துக் கொண்டே தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை நினைவுகள் வழியே இழுத்து வந்து கதை சொல்வதாக அந்த நாவல் அமைந்திருக்கும்.

காடு நாவலுக்கும்,வாழ்க்கை ஒரு நாடகம் நாவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.இந்த இருவரின் பார்வையில் கதை தொடங்குவதை தவிர.இரண்டு நாவல்களும் செவ்வியல் நாவல்கள் என்பதைத் தவிர.

ஏற்கனவே நான் வாசித்த ஜெயமோகனின் கன்னிநிலம் நாவலிலும்,யானை டாக்டர்  நாவலிலும் காடு குறித்த சித்திரத்தை நம் முன் காட்டி இருப்பார் ஜெயமோகன்.

ஆனால் காடு நாவலில் அவர் காட்டும் சித்திரம் முழுக்க முழுக்க அடர்த்தியானது.

காடு என்பது ஒரு முடிவற்ற பெருங்கனவு போன்றது.கிரிதரனின் எதார்த்த வாழ்வில் நிகழும் நிகழ்வுகளும், கனவு நிலையும் கலந்து காட்டில் விரியும் நாவல் இது.

காட்டில் வாழும் ஒரு மலை பெண்ணான நீலி என்பவள் மீதான கிரிதரனுக்கு ஏற்படும் காதல்தான் நாவலின் மைய இழை என்று வைத்துக் கொண்டாலும்,கிரிதரன் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தீராத பெரும் காமத்தையும் நாமல் கடைசிவரை பதிவு செய்கிறது.

காமம்,மனித சுயநலம் தாண்டி காடழிப்பு காட்டு விலங்குகளை கொள்வதைப் போன்ற சூழலியல் குறித்த நாவல் என்ற முகத்தையும் காடு கொண்டுள்ளது.

இந்த நாவலில் வரும் குட்டப்பன் பாத்திரம் காட்டின் ஆன்மாவாகவே வருகிறான்.அவனுக்கு காட்டைப் பற்றி எல்லாம் தெரிகிறது.காடு தான் அவனுடைய உலகமாகவும் இருக்கிறது.

இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் குட்டப்பன்,மேஸ்திரி ரெசாலம்,குருசு என எல்லோரும் பேசும் மொழியும் தமிழும் மலையாளமும் கலந்த ஒரு கலவை பாஷையாக இருக்கிறது.

ரெசாலத்துக்கும்,தேவாங்குக்கும் உள்ள உறவு என்பது காட்டிற்கு மனிதனுக்கும் உள்ள உறவின் குறியீடு அது.

ஒவ்வொரு மனித மனமும் ஒரு காடு தான்.இந்த காடு நாவலை வாசிக்கும்போது நம் அகம் காடாகி விடுகிறது.

கிரிதரன் தன்னுடைய மனம் கொள்ளும் அத்தனை வீழ்ச்சிகளுக்கும் காடு தான் அவனுக்கு ஆசுவாசம் அளிக்கிறது.

கடைசியில் இன்ஜினியர் மேனனின் மனைவியுடன் கிரிதரன் கதவடைத்து காமம் கொள்ளும் போது வெளியில் கதவு தட்டி நீலி அழுவதாய் நாவல் நிறைவடைகிறது.

உண்மையில் காடு உடன் அவனுக்கு இருந்த உறவு முறியும் இடம் இது.பரிசுத்தமான காட்டையும் காட்டின தேவதையான நீலியையும் விட்டு நீங்கும் போது அவன் அழுக்கடைந்து விடுகிறான்.

காமம்,சுயநலம்,குரூரம் என மனித உணர்ச்சிகளை நீக்கிவிட்டால் மனித வாழ்வு என்பது என்ன?என்ற கேள்வியை நம்முன் வைக்கிறது காடு நாவல்.

இந்த நாவலை வாசிக்கும்போது ஒரு பித்தேறிய மனநிலை மயக்கத்தில் மனம் உழல்வதை நீங்கள் உணரலாம்.

காடு நீங்கள் பயணிக்க பயணிக்க வெளிவர முடியாத ஒரு பெருங்கனவு. 

ஒரு பெருங் கனவில் பயணிக்க காடு நாவலை கையில் எடுங்கள்.

வாசிக்க வேண்டிய ஒரு சிறந்த படைப்பு காடு///


velu malayan

19.10.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்