அறம்

 ///ஜெயமோகன் எழுதிய அறம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து



அறம் செய்ய விரும்பு என்கிறார் தமிழ் மூதாட்டி ஒளவை.


தமிழில் எழுதப்பட்ட நிறைய நூல்கள் மானுட வாழ்வியலுக்கான அறத்தை முன்வைத்தவை.


மானுட இனம் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட நல் நெறிகளே அறம்.


அறமற்ற மனித வாழ்வு அழுக்கானது.


சக மனிதனுக்கு ஒருவன் செய்துவிட்ட தீங்கு அவன் மனதை குடையும் குற்ற உணர்ச்சியாய்  எழுவதும் ஒருவகையில் அறமே.


பிறிதொரு மனிதனுக்காக ஒரு மனித மனம் சுரக்கும் கருணையும் ஒரு வகை அறம் தான்.


அறம் உள்ள மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் உன்னதமாய் இருக்கிறது.


சண்டையிடாமல் சாசுவதமாக போராடி இந்தியாவை மீட்ட அண்ணல் காந்தியடிகள் ஒரு அறத்தின் உருவம்.


ஏழைகளின் துயர் துடைக்க தன் முழு வாழ்க்கையையும் ஒப்புக்கொடுத்த கருணைக் கடவுள் அன்னை தெரசா ஒரு அறத்தின் உருவம்தான்.


அப்படி முழுக்க முழுக்க அறத்தை மையமாய் வைத்து அறத்தின் உருவமாய் இருந்த மனிதர்களைப் பற்றி ஜெயமோகனால் எழுதப்பட்டது தான் அறம் எனும் நூல்.


ஜெயமோகன் அவர்களின் அறம் சிறுகதைத் தொகுப்பு முழுவதும் அறத்தின் உருவமாய் இருந்த உண்மை மனிதர்களை பற்றிய சித்திரத்தை நம் முன் வைக்கிறது.


ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கக்கூடிய ராயல்டி கிடைக்காமல் அவனை அவமானப்படுத்தி அலைக்கழிக்கப்படுவதை முதல் கதையான அறம் சிறுகதை பேசுகிறது.


எழுத்தாளர் தன் மகள் திருமணத்திற்காக பணம் கேட்டு  பதிப்பகம் நடத்தும் செட்டியாரிடம் கெஞ்சி காலில் விழும்போதும் எழுத்தாளரின் கையில் ஒரு ரூபாய் கொடுத்து போய் விஷம் வாங்கி குடித்து சாவுடா என்று சொல்வதால் உன் வம்சமே விளங்காது போகட்டும் என செட்டியாரின் மனைவியிடம் சொல்லிவிட்டு போகும் எழுத்தாளரின் சாபம் எங்கு தன் குடும்பத்தை அழித்து விடுமோ என பயந்து செட்டியாரின் மனைவி செட்டியாரிடம் சென்று எழுத்தாளருக்கு சேர வேண்டிய பணத்தை உடனடியாக கொடுத்து விடு இல்லை என்றால் நான் வீட்டில் நுழைய மாட்டேன் என்று நடுரோட்டில் அமர்ந்து கொள்ளும் அந்த செட்டியாரம்மாவின் அறச்சீற்றத்தில் தெரிவது தர்மமும்,அறமும் தான்.


சோற்றுக்கணக்கு கதையில் கணக்குப் பார்க்காமல் அன்னமிடும் கெத்தேல் சாயிபின் கரடிக்கரம் அறத்தின் நீட்சியே.



வணங்கான் கதையில் வரும் மார்ஷல் நேசமணி அதிகாரத்தை வளைக்கும் அறத்தின் உருவமாய்,யானை டாக்டர் கதையில் வரும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி,

ஓலைச்சிலுவை கதையில் வரும் டாக்டர் சாமர்வெல்,உலகம் யாவையும் கதையில் வரும் காரி டேவிஸ்,பெருவலி கதையில் வரும் எழுத்தாளர் கோமல் சுவாமிநாதன்,மயில்கழுத்து கதையில் வரும் சுந்தர ராமசாமியும்,

தி.ஜானகிராமனும் என பல்வேறு உண்மை மனிதர்களின் கதைகளை அறத்துடன் மையப்படுத்தி வாசக மனங்களில் ஒரு தூய உணர்ச்சியை உற்பத்தி செய்கிறது இந்த புத்தகம்.


அறம்,வணங்கான்,யானை டாக்டர்,சோற்றுக் கணக்கு,நூறு நாற்காலிகள்,ஓலைச் சிலுவை போன்ற சிறுகதைகள்  இத்தொகுப்பில் மிகச்சிறந்தவை.


ஒவ்வொரு சிறுகதையும் பக்க அளவில் ஒரு குறுநாவலை ஒத்ததாக இருந்தாலும் மானுட அறத்தை முன்வைத்து அவர் சொல்லும் மனிதர்களின் உருவம் நமக்குள் ஒரு மகத்தான சித்திரத்தை உருவாக்கி விடுகிறது. 


"மானுட வரலாறு என்பதே அறத்தின் பரிணாம வளர்ச்சிதான்" என்கிறார் ஜெயமோகன்.அது உண்மையும் கூட.


இந்த புத்தகத்தை ஒரு முறையேனும் வாசியுங்கள்.உங்கள் அகமும்,அறமும் வளர்ச்சி கொள்ளும் என்று நம்புகிறேன்///


Velu malayan

28.9.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்