முகங்களின் தேசம்

 ///ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம் நூலை முன்வைத்து



வெற்று லௌகீகத்தில் திளைத்து குழந்தைகள் பெருக்கி,பொருள் பெருக்கி சொந்த வீடு,சொந்த ஊர்,சொந்த மாநிலம் தாண்டி  செல்லாத மழுங்கடிக்கப்பட்ட மனதை,மூளையைபயணம் தான் கூர்மையாக்குகிறது.

சாதி,மதம் என உங்களுக்குள் ஊற்றி இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு குறு மனநிலையை  உடைத்து உங்கள் அகத்தை அகலப்படுத்தும் வேலையை நிச்சயம் பயணம் சாத்தியப்படுத்தும்.

ஒரு தேசத்தை முழுமையாய் புரிந்து கொள்ள அதைப் பற்றிய புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள முடியாது.அந்த தேசம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும்.

பணம்,பொருள் இன்ன பிற விஷயங்கள் உங்கள் புறத்தேவைகளை தான் பூர்த்தி செய்யும்.ஆனால் பயணம் உங்கள் ஆன்மாவை நிரப்பும் ஒரு இயக்கக் கலை.

இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் தான் பயணம் மேற்கொண்ட பயண அனுபவ கட்டுரைகளின் தொகுப்பு ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம் என்ற இந்த நூல்.

ஒரு பயண அனுபவம் என்பது நாம் பார்த்த நிலப்பரப்பை பற்றி,நாம் பார்த்த இடங்களைப் பற்றிய சிலாகிப்பு மனநிலையில் அந்த இடங்களைப் பற்றிய வெறும் தகவல் குறிப்புகளை முன் வைக்காமல் ஒவ்வொரு நிலத்திலும்,ஒவ்வொரு இடத்திலும் தான் சந்தித்த எளிய மனிதர்களின் முகங்கள்,

அன்னமிட்ட கைகள்,அவர்கள் காட்டிய கருணை ஆகியவற்றின் சித்திரத்தை நமக்குள் ஆழ இருத்தி செல்கிறது ஜெயமோகனின் ஒவ்வொரு கட்டுரையும்.

இந்த புத்தகத்தில் என்னை பெரிதும் ஈர்த்தவை எளிய மனிதர்கள் மீதான ஜெயமோகனின் அவதானிப்பும்,அவர்களுக்குள் இருக்கும் துயர் நிறைந்த கதைகளை,மேன்மைகளை கதைகளாக முன்வைப்பதுதான்.

இந்தியா என்று சொல்லும்போது நாளிதழில் படிக்கும் ஒரு வார்த்தையாகவே பலருக்கு உள்ளம் பொருள்படுகிறது.சிலருக்கு அது பாடப் புத்தகத்திலிருக்கும் ஒரு சொல்.சிலருக்கு பணத்தாளிலிருக்கும் ஒரு அடையாளம்.சிலருக்கு அதிகாரப் பீடம்.சிலருக்கு ஒரு வரைபடம்.எனக்கு அது முகங்களின் பெருக்கு என்கிறார் ஜெயமோகன்.

அதனால்தான் இந்த நூலுக்கு முகங்களின் தேசம் என்ற பெயரும் வைத்துள்ளார்.

கட்டுரைத் தொகுப்பில் எனக்குள் ஒரு உடைவை ஏற்படுத்திய கட்டுரைகள் என்று அன்னமிட்ட கை,

அன்னையின் சிறகுக்குள்,அயல் முகம்,ஆண்களின் தாய்மை,ஆல்,வழிப்போக்கர்கள் ஆகியவற்றைச் சொல்லுவேன்.

இல்லாதவர்களிடம் இருக்கும் அறமும்,கருணையும் எல்லாமும் இருப்பவர்களிடம் இருப்பதில்லை.

ஆல் என்ற கட்டுரையில்  ஹைதராபாத்திலிருந்து மாச்செர்லா செல்வதற்காக ஜெயமோகன் நின்றிருக்கும்போது அவருடைய சட்டையைப் பிடித்து வலுக்கட்டாயமாக ஐந்து ரூபாய் வாங்கி சாப்பிடும் ராமாராவ் என்பவர் ரோட்டில் பாட்டுப்பாடி சம்பாதிக்கும் தன்னுடைய பணத்தில் ஜெயமோகனை சாப்பிட வைத்து பத்து ரூபாயை அவர் பாக்கெட்டில் கொடுத்து அனுப்பும் அந்த கருணையின் முகம்,

குஜராத்பயணத்தின் பொழுது சூடான சப்பாத்தியும்,பருப்புக் குழம்பும், உருளைக்கிழங்கு பொரியலும் பரிமாறும் ஷிண்டே போன்ற மனித முகங்களின் தொகுப்புதான் இந்தியா.

நைனிடால் பயணத்தின்போது பணமில்லாமல் பசியில் திக்கற்று ஒரு குருத்வாரா முன் ஜெயமோகன் நிற்க்கும்போது உள்ளே அழைத்துச் சென்று பசியாற்றி படுக்கவைக்கும் அந்த சீக்கியரின் முகம் தான் இந்தியா.

அயல் முகம் என்ற கட்டுரையில் போபால் பயணத்தின்போது தொடர்வண்டியில் அறிமுகமாகும் விருதுநகரிலிருந்து போபாலுக்கு வந்து பிக்பாக்கெட் தொழில் செய்யும் தமிழர்,

ஆண்களின் தாய்மை கட்டுரையில்  தன் சொந்த மனைவி இன்னொருவனுக்கு மனைவியாக வாழும் இடத்தில் ஒரு வேலைக்காரனாக இருக்கும் மதுரையைச் சேர்ந்த மூர்த்தி  இப்படி எத்தனையோ முகங்களின் தொகுப்பாகஉள்ளது இந்த தேசம் என பதிவு செய்கிறார் ஜெயமோகன்.



மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் நடு இரவில் ஒரு கும்பல் பத்து வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்வதை தடுக்க முடியாமல், எதுவும் செய்ய முடியாமல் எல்லோரையும் போல் இயல்பாக கடந்து வந்ததின் குற்ற உணர்ச்சியையும் இதுவும் இந்தியாவின் ஒரு முகம்தான் என்று பதிவு செய்கிறார் ஜெயமோகன்.

குறைந்தபட்ச இந்திய நிலப்பரப்புகளின் நிழல் தரிசனம் இந்த புத்தகம்.

வைக்கம் முகமது பஷீர்,சிவராம காரந்த்,விபூதி பூஷன் பந்தோபாத்யாயா போன்ற எழுத்தாளர்களைப் போல இந்த தேசம் முழுதும் பிச்சை எடுத்து அலைந்து திரிந்து அதன் பண்பாட்டை, வரலாற்றை ஜெயமோகன் அணுகி அறிந்த அனுபவங்களின் தொகுப்பு இந்நூல்.

பயணங்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு நிலங்களில் கால்படாதவர்கள் முகங்களின் தேசம் நூலை வாசித்து பாருங்கள்.இந்தியா முழுக்க சுற்றி வந்த ஓர் உள திருப்தியை இந்தப் புத்தகம் உங்களுக்கு கொடுக்கும்.

இந்தியாவிற்குள் நீங்கள் இருக்கலாம்.ஆனால் உங்களுக்குள் இந்தியாவை கொண்டு வரும் இந்த புத்தகம்.

இந்திய அன்னையின் முலைப்பால் சுவைத்த ஜெயமோகனின் கலைப்பால் இந்த புத்தகம்.

இந்த புத்தகத்தை வாசித்த பிறகு நிச்சயம் உங்கள் மனமும்,கால்களும் பயணம் செய்ய முனைப்புக்கொள்ளும் என நினைக்கிறேன்///


velu malayan

12.9.2021


❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்