தூப்புக்காரி

 ///மலர்வதி எழுதிய தூப்புக்காரி நாவலை முன்வைத்து



என்னுடன் பணிபுரியும் ஒரு அண்ணாவுடன் ஒரு நாள் ஒரு உணவகத்தில் உணவு உண்டு கொண்டிருக்கும் பொழுது நான் எதேச்சையாக மலம் என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டதற்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அவருடைய முகம் ஒரு மாதிரி கோணலாகி விட்டது.

தொண்டைக்கு கீழே உண்ணும் உணவு இறங்கி விட்டாலே அது மலம் தானே அண்ணே இதுக்கு போய் ஏன் சங்கோஜப்படுகிறீர்கள் என்றேன்.

மலத்தைப் பற்றி பேசினாலோ, மலத்தை பார்த்தாலோ நம் மனதில் ஒரு அசௌகரிய உணர்வு தோன்றி விடுகிறது.

வகை வகையான உணவை தின்றுவிட்டு தினமும் பேளுகிறோம்.

மனப்பைக்கு கீழே மலப் பையை சுமந்து திரிபவர்கள் நாம்.

சிலருக்கு மனப் பை இருக்கவேண்டிய இடத்தில் மலப் பையும்,மலப்பை இருக்கவேண்டிய இடத்தில் மனப்பையும் இருக்கிறது.

வயிற்றில் மலத்தை சுமந்து திரியும் மலக்கிடங்குகள் மனிதர்கள்.

நம் மலத்தை நம்மாலே சகித்துக் கொள்ள முடிவதில்லை.

ஆனால் மற்றவர்களின் மலங்களையும் அள்ளி சுத்தப்படுத்தும் துப்புரவு பணியாளர்களின் வாழ்வை நினைத்து பாருங்கள்.

அப்படிப்பட்ட ஒரு துப்புரவு தொழிலாளியைப்பற்றிய வாழ்க்கைச் சித்திரம் தான் இந்த தூப்புக்காரி நாவல்.

கவிஞர் சதீஷ் பிரபு என்பவர் எழுதிய

"மலம் அள்ளுபவன் கைகளில் 

எந்த கை பீச்சாங்கை" 

என்ற கவிதை வரிகளில் ஒளிந்துள்ளது மலம் அள்ளுபவர்களின் துயர்நிலை.

கடந்தாண்டு காசியில் நடந்த கும்பமேளாவில் நம்முடைய மரியாதைக்குரிய பாரத பிரதமர் திரு. மோடி அவர்கள் துப்புரவு தொழிலாளர்களுடைய கால்களை கழுவி அவர்களை கௌரவ படுத்தினார்.

அவர்கள் கால்களை கழுவி அவர்களை புனிதம் மிக்கவர்களாக பார்த்த பாரத பிரதமர் மனித மலங்களைச மனிதனே அள்ளக் கூடாது என்ற ஒரு சட்டம் இயற்றி முழுமையாக அவர்களை அந்த தொழிலிலிருந்து விடுவித்து  இயந்திரங்களை பயன்படுத்த ஆவண செய்திருக்கலாம்.ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.

"பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு முன்பு உன்னுடைய கடைசி ஆசை என்ன? என்று கேட்டபோது நான் பேபியின் கையில் சாப்பிட விரும்புகிறேன் என்கிறார்.பேபி என்பவர் அந்த சிறைச்சாலையில்கழிவுகளை அகற்றக் கூடிய தொழிலாளி"

அப்படிப்பட்ட இந்த மண்ணின் அழுக்குகளை தூய்மை செய்யும் தூய்மை மனிதர்களான துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வியல் நிலை என்பது இப்பொழுதும் துயர் நிறைந்ததாகத் தான் இருக்கிறது.

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த  மகாமுனி என்ற படத்தில்

 "ராணுவத்தில் இறந்து போகிறவர்களை மரியாதையாக பார்க்கும் இந்த சமூகம் மலக்குழிக்குள் இறங்கி மரணம் அடைபவர்களை கேவலமாக பார்க்கிறது.கண்டுகொள்ளாமல் இருக்கிறது" என்ற வசனம் வரும்.

மலக்குழிக்குள் மரணம் அடைபவர்களையும்,அவர்களின் வலியையும்  கவனப்படுத்திய வசனம் அது.

அவ்வளவு துயரையும் மனித பீக்களின் நாற்றத்தையும் சகித்து வாழும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வியல் அவலத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது தூப்புக்காரி நாவல்.

ஒரு சாதாரண கதை தானே என்று விலக்கி விட முடியாத நாவல் இது.

இவ்வளவு ஆழமாக மனித பீக்களையும்,தூமை கழிவுகளையும் வாரி சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வியலை எந்த தமிழ் நாவலும் இவ்வளவு பீ நெடியுடன் சித்தரித்தது இல்லை.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் தோட்டியின் மகன் நாவலை இதற்கு முன் மலம் அள்ளும் தோட்டியின் வாழ்வியலை கனத்துடன் பதிவு செய்த கலை பிரதி எனலாம்.

தோட்டியின் மகன் நாவலை வாசித்து முடித்தபோது ஒருவித கனத்த உணர்வு என் நெஞ்சை அழுத்தியது.

அதே உணர்வை இந்த தூப்புக்காரி நாவல் எனக்கு கொடுத்தது.

கிட்டத்தட்ட கதைக்களம் இரண்டு நாவலுக்கும் ஏறக்குறைய ஒன்றே என்றாலும் கன்னியாகுமரி மாவட்டத்தின் வட்டார சொல்லாடல்களும்,கனகம் என்ற துப்புரவு தொழிலாளி மற்றும் அவள் மகள் பூவரசியின் வாழ்க்கை சிதைவை சித்தரிப்பதில்,பெண்களின் சுரண்டலை வலியை பதிவு செய்ததில் தோட்டியின் மகன் நாவலிலிருந்து தனித்து நிற்கிறது இந்த தூப்புக்காரி நாவல்.

இரண்டு நாவல்களின் பொதுமை என்று மலம் அள்ளுபவர்களின் வாரிசுகளும் அதே தொழிலை செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு இந்த சமுதாயம் தள்ளுகிறது என்பதையும்,அவர்களின் வாழ்வு தொடர்ந்து சுரண்டப்படுகிறது என்பதையும் சொல்லலாம்.

முழுக்க முழுக்க இந்த நாவல் முன்வைப்பது கனகம் என்ற துப்புரவு தொழிலாளியின் சுரண்டலைத்தான்.

அவளுடைய மகள் பூவரசியும் தூப்புக்காரி ஆகி அதே சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

நாவலில் அழுக்கன் என்ற பெயரில் அழைக்கப்படும் மாரி என்பவன் எப்போதும் மலங்களை அள்ளி புற உடம்பெங்கும் ஒருவித நாற்றத்தோடு இருந்தாலும் அகத்தில் கள்ளம் கபடமில்லாத தூய்மையும் நேர்மையும் கொண்டவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான்.

பூவரசி காதலிக்கும் மனோ என்பவன் உடல் சுத்தத்தோடும் வசதியோடும் இருந்தாலும் பூவரசியை காதலித்து அவளை கர்ப்பமாக்கி விட்டு பூவரசியை கை விட்டு விடுவதில் அகம் எல்லாம் அழுக்கு கொண்டவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான்.

ஒரு தூப்புக்காரியை எப்படி மணந்து கொள்வது என்ற குடும்ப கௌரவத்தின் பயத்தில் அவன் பூவரசியை கைவிட்டு வேறு திருமணம் செய்து கொண்டாலும் அவனுக்குள் எழும் குற்ற உணர்ச்சியை நாவல் முழுக்க பதிவு செய்திருக்கிறார்  மலர்வதி.


"தலித் மக்கள் இறந்த மிருகங்களின் உடல்களை சுமக்கும் பணியை செய்யாதீர்கள்.மலம் அள்ளுவது போன்ற அசிங்கமான பணிகளில் ஈடுபடாதீர்கள்"

என்கிறார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

பெரும்பாலும் இந்தியாவில் துப்புரவு பணியாளர்களாக இருப்பவர்கள் தலித்துகளாக தான் இருப்பார்கள்.

ஆனால் இந்த நாவலில் தூப்புக்காரியாக வரும் கனகம் நாடார் சமூகத்தைச் சார்ந்தவளாக காட்டப்பட்டுள்ளது எனக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை.எனக்கு நாவலில் இது முரணாகவே படுகிறது.

சக்கிலிய சமூகத்தைச் சார்ந்த மாரியுடன்  பூவரசி சேர்ந்து வாழ்கிறாள்.தன் சாதியை சேர்ந்த மனோவால் ஏமாற்றப்பட்ட பிறகு பூவரசி மாரியுடன் வாழ்கிறாள்.

மாரி பூவரசியை உயிருக்குயிராக காதலிக்கிறான்.

என்னதான் பூவரசியும்,மாரியும் மலம் அள்ளும் தொழில் செய்தாலும் பூவரசி நாடார் சமூகத்தை சேர்ந்தவள்.

அவள் சக்கிலிய சாதியைச் சார்ந்த மாரியை ஏற்றுக் கொள்ளுவது நடைமுறை வாழ்வுக்கு முரணான ஒன்றாகவே எனக்குப் படுகிறது.

ஏனென்றால் இந்தியாவின் சாதி கட்டமைப்பு என்பது மிக வலுவானது.

மனிதனின் மல நாற்றத்தை விட மனிதர்கள் மனதில் சுமக்கும் சாதிய நாற்றம் மிக காட்டமானது.

இருந்தாலும் கற்பனை புனைவில் சாதி கலப்பு சாத்தியம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

ஒரு முழுமையான கலைத்தன்மை கைகூடாத படைப்பாக இருந்தாலும் இப்போதும் சமூகப் புறக்கணிப்புக்கு உட்படும் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வு துயரத்தை பதிவு செய்ததில் ஒரு முக்கிய படைப்பாக கவனம் பெறுகிறது துப்புக்காரி நாவல்.

சாகித்ய அகடாமியின் யுவ புரஷ்கார் விருது பெற்றுள்ள இந்த நாவல் அந்த விருதுக்கு தகுதி உள்ள நாவல் தான்.///

Velu malayan

4.9.2021.

❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்