புத்துயிர்ப்பு

 ///லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலை முன்வைத்து



டால்ஸ்டாயும்,தஸ்தாயெவ்ஸ்கியும் ரஷ்ய இலக்கியத்திற்கு மட்டுமல்ல,உலக இலக்கியத்திற்கே பேராசான்கள்.

இருவருமே ரஷ்யாவில் பிறந்தவர்கள் என்றாலும் வெவ்வேறு வாழ்க்கை பின்னணியைக் கொண்டவர்கள்.

ஒரு செழிப்பான நிலபிரபுத்துவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் டால்ஸ்டாய்.

ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல.அவஸ்தையும், அலைக்கழிப்பும்,வலிப்பு நோயின் வாதையும் கொண்ட வாழ்க்கை அவருடையது.

ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த வாழ்வின் பாதிப்புகளை தன்னுடைய படைப்புகளில் பிரதிபலிப்பது வழக்கம்.

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் வரும் பாத்திரங்கள் தஸ்தாயெவ்ஸ்கியை பிரதிபலிப்பவையே.

குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ஒரு ராஸ்கோல்னிவ்வும்,அசடன் நாவலில் வரும் மிஷ்கினும் வேறு யாருமல்ல தஸ்தயேவ்ஸ்கி தான்.

நான் தஸ்தயேவ்ஸ்கியைத் தான் டால்ஸ்டாய்யை விட அதிகமாக வாசித்திருக்கிறேன்.

தஸ்தாயெவ்ஸ்கியின் முப்பெரும் காப்பியங்களான குற்றமும் தண்டனையும்,கரமசேவ் சகோதரர்கள் மற்றும் அசடன் ஆகியவற்றை வாசித்திருக்கிறேன்.

நான் வாசிக்கும் டால்ஸ்டாயின் முதல் ஆக்கம் புத்துயிர்ப்பு தான்.

மனித மனதின் உணர்வுகளை அகவயமாக அணுகி அதன் அத்தனை எதிர்மறை தன்மைகளையும் எழுதியவர் தஸ்தயேவ்ஸ்கி.

மனித மனதை புறவயமாக  அணுகி அதன் அத்தனை நேர்மறை தன்மைகளையும் எழுதியவர் டால்ஸ்டாய்.

மனித ஆழ்மனம் எவருக்கும் தெரியாமல் நிகழ்த்திக் கொள்ளும் நாடகத்தை,அதன் இருளை,கசப்பை தன் படைப்புகளில் காட்டியவர் தஸ்தயேவ்ஸ்கி.

ஒரு மனிதன் குற்ற உணர்ச்சியை தெரிந்து கொள்ளவும்,உணர்ந்து கொள்ளவும் ஒரு முறையாவது தன் வாழ்வில் குற்றமும் தண்டனையும் நாவலை வாசிக்க வேண்டும்.

குற்ற உணர்ச்சி கொள்பவர்கள்,அற உணர்ச்சிக் கொள்பவர்கள் தான் இவ்வுலகில் அதிகம் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

குற்றமும்,தண்டனையும் நாவலில் தான் கொலை செய்திருந்தாலும் சட்டத்திடமிருந்தும்,தண்டனையிலிருந்தும் தப்பிக்கும் ரஸ்கோல்னிவ் தன் மனதில் ஊதிப்பெருகும் குற்ற உணர்ச்சி  வெடித்துவிடும் புள்ளியில் தான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொண்டு சரணடைந்து விடுகிறான்.

தான் செய்த குற்றத்திற்கு குற்ற உணர்ச்சி கொள்வதும்,அதை ஒப்புக் கொள்வதும் தான் மனதை ஆன்ம விடுதலை கொள்ளச்செய்யும் என்பதை டால்ஸ்டாயும், தஸ்தயேவ்ஸ்கியும் தங்கள் படைப்புகளின் வழியே வலியுறுத்துகிறார்கள்.

குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோல்னிவ் போலவே புத்துயிர்ப்பு நாவலில் தான் ஒரு பெண்ணுக்கு செய்த துரோகத்தினால் நெஹ்லுதவ் என்பவனின் மனம் குற்ற உணர்ச்சி கொள்வதையும்,குற்ற உணர்ச்சியலிருந்து மீண்டு அவன் மனம் புத்துயிர்ப்படைதலையும் டால்ஸ்டாய் புத்துயிர்ப்பு நாவலிலில் பேசியுள்ளார்.

ஒரு ஆணின் மீதான நம்பிக்கையும், விருப்பமும் உடைபட்டு அவள் மீது உடல் ரீதியாக துரோகம் இழைக்கப்படும் போது ஒட்டுமொத்தமாக ஒரு பெண்ணின் உள்ளம் சிதைக்கப்படுகிறது.

நெஹ்லுதவ் மாஸ்லாவை தன் உடல் பசிக்கு உணவாக்கி விட்டு அவளை ஏமாற்றி விடுகிறான்.

அவளுக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தை இறந்த பிறகு,அவள் தன்னை வேசையாக்கிக்  கொள்கிறாள்.

உண்மையில் ஒரு ஆணின் எல்லா அளவீடுகளுக்கும் அப்பாற்பட்டவளாக இருக்கிறாள் பெண்.பெண் எப்பொழுதுமே தோற்க்கடிக்க முடியாதவள்.

பெண் எப்பொழுதுமே தன்னை மீறி விடக்கூடாது என்ற அந்தரங்க பயத்தில் வாழ்பவன் ஆண்.

நெஹ்லுதவ் தன்னை ஏமாற்றி விட்ட பிறகு தன்னுடலை எல்லா ஆண்களுக்கும் விற்கும் வேசையாகிவிடும் மாஸ்லவா நெஹ்லுதவ்வை தான் பார்த்த ஆண்களில் அவனும் ஒருவன் என்ற பார்வைக்கு வந்துவிடுகிறாள்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சைபீரிய சிறையில் இருக்கும் மாஸ்லாவை சந்தித்து அவளிடம் மன்னிப்பு கேட்டு அவளை மணந்து கொள்ள விரும்பும் நெஹ்லுதாவை அவள் எந்தவித உணர்ச்சி மேலோங்களும் இன்றி அவன் கூறுவதை கடந்து செல்கிறாள்.

நெஹ்லுதவ் அவளிடம் மன்னிப்பு கேட்கும் போது அவள் அந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு விடுவாள் என அவன் நினைக்கிறான்.

ஆனால் அவள் தான் விரும்பிய பழைய நெஹ்லுதாவாக அவனை பார்ப்பதில்லை.

காரணம் அவள் அவனை விட வசதியும்,அழகும் நிறைந்த நிறைய  ஆண்களை தன் வாழ்வில் சந்தித்து சலிப்படைந்து விடுகிறாள்.

சிறையில் முதன்முதலில் நெஹ்லுதாவ்வை சந்திக்கும்போது மாஸ்லாவா அவனிடம் இருந்து 10 ரூபிள் பணத்தை வாங்கி மறைத்துக் கொள்ளும் போதே நெஹ்லுதவ் தனக்கு செய்த துரோகத்தை மறந்து விடுகிறாள்.

அதனால் தான் நெஹ்லுதவ் தன்னை வலிய வந்து மணந்து கொள்கிறேன் என்று கூறிய பிறகும் தன்னுடன் இருக்கும் சக கைதியான சிமன்சனை மணந்து கொள்ள விரும்புகிறாள்.

அவள் பழைய வெகுளியான குணம் கொண்ட மாஸ்லாவா அல்ல.அவள் இப்போது ஒரு வேசை.

அவள் அழுக்கடைந்த ஆன்மா கொண்ட ஒரு வேசி வாழ்க்கை நடத்தும் பெண்ணாகி விடுகிறாள்.

மாஸ்லவா தன்னை மன்னிக்கவில்லை என்பது மேலும் நெஹ்லுதாவிற்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தன் நிலம்,ஆடம்பரம் எல்லாவற்றையும் இழந்து மாஸ்லாவின் தண்டனையை குறைக்கவும்,விடுதலை செய்யவும் சைபீரியா சிறைக்கு அடிக்கடி செல்கிறான் நெஹ்லுதவ்.

மேல் நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்யப்படும் மாஸ்லாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு பின் தண்டனை குறைக்கப்படுகிறது.

பொதுவாக செவ்வியல் படைப்புகளை வாசித்து முடிக்கையில் ஒரு வாசகனுக்கு இறுதியில் அது தரும் தரிசனம் என்பது வாழ்க்கையை மிகை உணர்ச்சியின்றி அணுக வேண்டும் என்பதே.அப்படிப்பட்ட ஒன்றை புத்துயிர்ப்பு நாவல் நமக்குத் தருகிறது.


புத்துயிர்ப்பு நாவல் முன் வைப்பது "நீங்கள் மனம் திருந்தி பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்".

"பிள்ளையைப் போல தன்னை தாழ்த்தி கொள்கிறவன்எவனோ,அவனே பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவனாக இருப்பான்" என்ற விவிலிய கோட்பாட்டையே.

நெஹ்லுதவ் மாஸ்லாவுக்கு செய்த துரோகத்தால் தன் ஆன்மாவை அழுக்காக்கிக் கொள்கிறான்.

பின் அவளை கொலை குற்றத்திலிருந்து காப்பாற்ற அதிலிருந்து அவளை விடுவிக்க அவளுக்காக  உதவிகள் செய்து அவன் ஆன்ம அழுக்கை கழுவிக் கொள்கிறான்.

முழுக்க முழுக்க இந்த நாவலில் டால்ஸ்டாய் பேசுவதும்,முன்வைப்பதும் மனிதனின் ஆன்ம ஈடேற்றத்தைத்தையும்,ஆன்ம விடுதலையையும் தான்.

பைபிள் கூறுவது போல் "முடிவற்ற மன்னிப்பே மீட்புக்கான ஒரே வழி" என்பதே புத்துயிர்ப்பு நாவல் உணர்த்துவது.

தன் கீழ்மையை ஒருவன் உணர்ந்து கொள்ளும் தருணமே ஒருவன் மேன்மையான மனிதனாகி விடுகிறான்.

அப்படி தன்னுடைய அதிகாரம்,நிலம், உயர்குடி அந்தஸ்து அத்தனை புற அழுக்குகளையும் களைந்து தன் கீழ்மை உணர்ந்து தன்னை எதுவுமற்ற ஒரு எளியவனாக நிறுத்திக் கொள்ளும் புள்ளியில் நெஹ்லுதவ் ஆன்ம விடுதலை அடைகிறான்.

தன் கீழ்மையை கண்டுணர்ந்து கொள்ளும் புள்ளியில் ஒருவன் கிறிஸ்துவை கண்டடைந்து கொள்கிறான் என்பதே நெஹ்லுதவ் பாத்திரம் வழியே புத்துயிர்ப்பு நாவல் நம் முன் வைக்கும் செய்தி///


Velu malayan

3.8.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்