ஊர்சுற்றிப் புராணம்
///ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ஊர் சுற்றிப் புராணம் நூலை முன்வைத்து
ஊர்சுற்றிப் புராணம் என்ற இந்த நூல் ராகுல் சாங்கிருத்யாயனின் வெறும் பயண அனுபவங்களை பேசும் நூல் அல்ல.
ஊர் சுற்றுவதற்கு ஒருவர் வளர்த்துக்கொள்ள வேண்டிய தகுதிகள் என்ன?அதில் உள்ள தடைகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது இந்நூல்.
இந்தியப் பயண உலகின் தந்தை எனப் போற்றப்படும் ராகுல் சாங்கிருத்யாயன் ஊர் சுற்ற புறப்பட விரும்பும் ஊர் சுற்றிகளுக்கு எழுதிய ஒரு வழிகாட்டும் கையேடு இந்த புத்தகம்.
"உலகத்தில் உள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்றும்,ஊர் சுற்றுவதை விட தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் நன்மை புரிவது வேறொன்றுமில்லை"என்ற கருத்தை தாழ்மையுடன் முன்வைக்கிறார் ராகுல்ஜி.
உலகத்தில் ஏதாவது மிகப் பழமையான மதம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது ஊர் சுற்றி மதம் தான் என்கிறார்.
புத்தர்,ஏசுநாதர், மகாவீரர்,ஆதிசங்கரர், குருநானக்,சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகிய எல்லோருமே ஊர் சுற்றிகள் தான் என்ற கருத்தை முன் வைக்கிறார்.
கொலம்பசும்,வாஸ்கோடகாமாவும் ஊர் சுற்றிகளாக இல்லாமலிருந்திருந்தால் அமெரிக்காவையும், கடல் நீர் வழிகளையும் கண்டுபிடித்திருக்க மாட்டார்கள்.மேற்கு நாடுகள் முன்னேறியிருக்காது.
200 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய கேட்பாரற்று கிடந்தது. அமெரிக்கா மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தது.ஆசியா கண்டத்து கிணற்றுத்தவளைகளுக்கு ஊர் சுற்றுவது மறந்து விட்டது.
இந்தியாவும்,சீனாவும் நினைத்திருந்தால் ஆஸ்திரேலியாவை கைப்பற்றி இருக்கலாம்.அப்படி கைப்பற்ற முடியாமல் போனதற்கு காரணம் இந்தியாவும் சீனாவும் ஊர் சுற்றும் மனப்பாங்கை இழந்து விட்டது தான்.அதனால் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவை இருநூறு வருடங்கள் ஆண்டார்கள் என்கிறார் ராகுல் சாங்கிருத்யாயன்.
ஒருவன் ஏன் ஊர் சுற்ற வேண்டும்,அதன் பின் விளையும் நன்மை என்ன?ஊர் சுற்றியாக மாற ஒருவன் எதை இழக்க தயாராக இருக்க வேண்டும்?பெண்கள் கூட ஊர் சுற்றியாகலாம்.
அவர்களுக்கு முன் உள்ள தடைகள் என்ன?அந்த தடைகளை தகர்ப்பதற்கான வழி என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு வழிகாட்டுதல் முறைகளை முன்வைக்கிறது இந்த புத்தகம்.
ஊர் சுற்றுதலை மறந்த இனத்துக்கு நரகத்தில் கூட இடம் இல்லை.ஏ கிணற்றுத்தவளை மனப்பான்மையே நீ அடியோடு ஒழிக என்கிறார் ராகுல்ஜி.
இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது நாமும் ஊர்சுற்றியாக மாறி ஊர் சுற்ற புறப்படலாம் என்ற அவா மனதில் நிச்சயம் எழும்.
வெறும் ஒருவரின் பயண அனுபவங்களை மட்டுமே கொண்ட பயண இலக்கிய நூல்களின் மத்தியில் ஒருவர் தன்னை ஊர் சுற்றியாக மாற என்ன செய்ய வேண்டும்,என்ன செய்யக் கூடாது? என்பதை தான் எதிர்கொண்ட பயண சவால்கள்,கண்டடைந்த பயண அனுபவங்கள் வழியே ஊர்சுற்றிகளை உருவாக்க எழுதப்பட்ட ஒரு உன்னத கையேடு என்றே இந்த புத்தகத்தைச் சொல்லலாம்.
நீங்கள் ஒரு முதல்தர ஊர்சுற்றியாக உருவாக உறுதியாக இந்த புத்தகம் உதவும் என்ற நோக்கில் நண்பர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்///
Velu malayan
8.6.2021
❤️❤️❤️❤️
Comments
Post a Comment