உண்மை கலந்த நாட்குறிப்புகள்

 ///அ.முத்துலிங்கம் எழுதிய "உண்மை கலந்த நாட்குறிப்புகள்" நாவலை முன்வைத்து



அ.முத்துலிங்கம்  அவர்கள் எழுதிய படைப்புகளில்"கடவுள் தொடங்கிய இடம்" நாவலை இதற்கு முன் வாசித்திருக்கிறேன்.

உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் நான் வாசிக்கும் அவருடைய இரண்டாவது படைப்பாகும்.

உண்மை கலந்த நாட்குறிப்புகள் புத்தகத்தை எந்த வகைக்குள் வைக்கலாம்?

நாவல் அல்லது கட்டுரைத் தொகுப்பு அல்லது  சிறுகதைத் தொகுப்பு என எப்படி வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்திற்கு வைத்துக் கொள்ளலாம் என்றாலும்,இது ஒரு சுய வரலாற்று புனைவு நாவல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அ.முத்துலிங்கம் அவர்களின் பால்ய நினைவுகளிலிருந்து,அவர் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்த நினைவு சேகரங்களின் புனைவு கலந்த ஒரு படைப்பு இந்த புத்தகம்.

பொதுவாக புலம்பெயர் படைப்பாளர்களின் படைப்புகள் ஈழத்தில் நிகழ்ந்த போர்  அவலங்களின் கண்ணீரையும் கழிவிரக்கத்தையும் பேசுபவை.

ஆனால் அ.முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள் அப்படி எதையும் பேசுவதில்லை.

"கடவுள் தொடங்கிய இடம்"நாவல் கூட நிஷாந்த் என்ற ஒரு அகதியின் அலைதல் பயணத்தைப் பற்றி பேசக் கூடியதே.

அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்தின் பலம் என்பது  நாவல் முழுக்க பயன்படுத்தும் அவரது அங்கத பார்வை தான்.

46 தலைப்புகளாக எழுதப்பட்டுள்ள இந்த நாவல் முழுவதும் அவரின் அங்கதமும்,சுவாரஸ்யமான நினைவுகளும் நிரம்ப கையாளப்பட்டுள்ளது.

நல்லூர் கோயில் திருவிழாவில் தன்னுடைய அம்மாவை தொலைத்த நிகழ்வை இப்படி நினைவு கூறுகிறார் அ.முத்துலிங்கம். திருவிழாவில் எல்லோரும் பிள்ளைகளைத் தான் தொலைப்பார்கள்.ஆனால் நாங்களோ அம்மாவை தொலைத்து நின்றோம் என்று.

கென்யா,சியாரோ லியோன், நமிபியா,சோமாலியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பணிபுரிந்த போது நிகழ்ந்த நினைவுகள் தான் நாவலில் மிகவும் சுவாரசியமானவை.

சியாரா லியோனில் பணிபுரிந்தபோது அ.முத்துலிங்கத்தின் வீட்டு சமையல்காரனாக இருந்த அகஸ்டி எப்பொழுதும் ரேடியோ பாட்டு கேட்டுக்கொண்டே சமையல் செய்வதையும்,அவன் வீட்டுக்கு ரேடியோவை தூக்கிக் கொண்டு போகும்போது போலீஸில் மாட்டிக் கொண்டு அடி வாங்கியதால் ஒரு காது சவ்வு கிழிந்து மீண்டும் ரெடியோவே வேண்டாம் என கூறும் அத்தியாயம் சுவாரஸ்யமானது.


பாகிஸ்தானில் தொடர்ந்து மூன்று வருடம் பணி கிடைக்காவிட்டாலும் விண்ணப்பம் செய்து கொண்டே இருக்கும் ஸைரா என்ற பெண்,ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாடியா என்ற பெண்ணுக்கு அலுவலகத்தில் பணிபுரியும் பாகிஸ்தானைச் சேர்ந்த அம்ஜத் மீதான ஒருதலைக் காதல்,

நைரோபியில் கொள்ளை அடிக்கப்பட்ட வீட்டுக்கும் இரவு காவல் காக்கும் நோயகே என நிறைய மனிதர்களை பற்றிய நினைவுக் குறிப்புகள் நாவலில் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் பஞ்சாயத்து என்ற தலைப்பில் கதீஜா - ஸாண்டி இருவருக்கும் முயல் கூண்டில் கசாமுசா நடப்பதால் கதீஜா கர்பமடைவதால் முத்துலிங்கம் பஞ்சாயத்து நடுவராகுவதும் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

பொதுவாக புனைவில் நம்முடைய சுய உண்மைகளை மறைத்து கொள்ளலாம்.

நாவல் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இந்த நாவலில் இருப்பது அத்தனையும் என் மூளையில் உதித்த கற்பனை.அதிலே நீங்கள் ஏதாவது உண்மையை கண்டுபிடித்தால் அது தற்செயலானது.அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன் என்று முத்துலிங்கமே கூறுகிறார்.

பொதுவாகவே புலம்பெயர் படைப்பாளிகளில் இலக்கியங்களில் அங்கதச்சுவை அதிகம் உண்டு. அப்படி முழுக்க முழுக்க அங்கதச் சுவையுடன் எழுதப்பட்ட ஒரு புத்தகம் செல்வம் அருளானந்தம் எழுதிய எழுதுதித் தீராப் பக்கங்கள் நூலைச் சொல்லலாம்.

சயந்தன் எழுதிய ஆறாவடு நாவலிலும் அங்கத தொனி கையாளப்பட்டிருக்கும்.

உண்மையில் உண்மை கலந்த நாட்குறிப்புகள் புத்தகம் எனக்கு நிறைவை கொடுத்தது என்றே கூறுவேன்.அ.முத்துலிங்கம் எழுதிய கடவுள் தொடங்கிய இடம் நாவலை காட்டிலும் எனக்கு உண்மை கலந்த நாட்குறிப்புகள் பிடித்த நாவல் என்பேன்.

புலம்பெயர் படைப்புகளில் தான் நான் தூய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டிருக்கிறேன்.உதாரணத்திற்கு link என்பதன் தமிழ்ச்சொல் கொழுவி என்றும், Hanger என்தற்கு கிளுவை என்றும்  அறிய முடிந்தது.

கண்டிப்பாக படிக்க வேண்டிய  புத்தகம் என நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்///


Velu malayan

6.6.2021


❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்