ஹிமாலயம்
ஹிமாலயம் (சிகரங்ளினூடே ஒரு பயணம்) நூலை முன்வைத்து
இமயமலை இந்தியாவின் பாதுகாப்பு அரண் என்பதோடு அதிக ஆன்மிக தலங்களைக் கொண்ட ஒரு மலையாக இருக்கிறது.
நிறைய பேர் வாழ்க்கையில் ஒரு முறையேனும் பயணம் மேற்கொள்ள விருப்பம் கொள்ளும் ஒரு இடமாகவும் இமாலயம் இருக்கிறது.
அப்படிப்பட்ட இமாலய பயணத்தைப் பற்றிய ஒரு நூல்தான் "ஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம்" எனும் இந்த நூல்.
மலையாளத்தில் எழுத்தாளர் ஷெளக்கத் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ.
பயண அனுபவ நூல்களில் பெரும்பாலும் பயணம் செய்பவர்களின் சுய புராணங்கள், தட்டையான தகவல் குறிப்புகள் என மனக்கடுப்பை உண்டாக்கும் சமாச்சாரங்களே அதிகம் இருக்கும்.
ஒரு சில மொழிபெயர்ப்பு நூல்கள் திராபையான உணர்வை கொடுப்பவையாகவும் இருக்கும்.
ஆனால் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ அவர்கள் மொழிபெயர்த்த நிலம் பூத்து மலர்ந்த நாள் மற்றும் ஹிமாலயம் இரண்டுமே மூல படைப்பிற்கு நிகரான மொழிபெயர்ப்பு கொண்டவை.
இந்த ஹிமாலயம் புத்தகம் வாங்குவதற்கான உந்துதலையும், விருப்பத்தையும் கே.வி.ஜெயஸ்ரீயின் நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலின் மொழிபெயர்ப்பில்இருந்த மொழியழகும்,ஒரு நேரடி நாவலைப் போன்ற மொழிபெயர்ப்பு நடையும் தான் காரணம் என்பேன்.
இந்த நூலை மலையாளத்தில் எழுதிய ஷௌக்கத் நித்ய சைதன்ய யதி மற்றும் நாராயணகுருவின் சீடர்.
ஷௌக்கத் பிறப்பால் ஒரு இஸ்லாமியர்.இஸ்மிலாயராக இருந்தாலும் இந்து மதம் மற்றும் எல்லா மத தத்துவங்கள் மீதும் சமமான பார்வை உள்ள மனிதராக இருக்கிறார் ஷௌக்கத்.
"நான் ஒரு மத விசுவாசியல்ல. புத்தனையும்,முகமது நபியையும் இயேசு கிறிஸ்துவையும்,அறிவின் மொழிகளை நமக்கு அருளியிருக்கும் மற்ற எல்லா மகான்களையும் எந்த வேறுபாடுமின்றி ஆதரிக்கும்,பகவத் கீதை,பைபிள்,குரான் போன்ற புனித நூல்கள் அனைத்தையும் ஒன்றென நினைத்து வணங்கி,வாசிக்க முயன்று மீண்டு கொண்டிருக்கும் ஒரு மனிதன் மட்டுமே" என்கிறார் ஷௌக்கத்.
இந்நூலை பயண நூல் என்பதைத் தாண்டி இது எல்லா மத நல்லிணக்கத்தை முன்வைக்கும் ஒரு நூல் எனலாம்.
இமயமலையில் உள்ள ஹரிதுவார் ரிஷிகேஷ்,யமுனோத்ரி,கங்கோத்ரி,கோமுகம்,அமர்நாத்,கேதார்நாத்,பத்ரிநாத் போன்ற இடங்களை பார்த்த வியப்பனுபவங்களை நமக்குள் கடத்தும் ஷௌக்கத் இமயமலையை கடவுளின் தரிசனம் என்கிறார்.
"இதைக் காணும் ஒருவன் கடவுளைக் கண்டதில்லை என்று சொல்வானெனில் இனி ஒருபோதும் அவனால் கடவுளை காணமுடியாது" என்று கூறும் ஷௌக்கத்தின் வாக்கியம் உண்மையே.
இதனை வெறுமனே ஒரு பயண நூல் என்று சுருக்க முடியாது.ஆன்மீகம், தத்துவம்,சூழலியல் என பல்வேறு தளங்களைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய கலை பிரதி எனலாம்.
"அனுபவியாது அறியாது" எனச்சொல்லும் நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகளைப் போல் நாம் அனுபவியாத இன்னொருவரின் பயண அனுபவங்கள் நம்முடைய அனுபவமாக மாறாது. ஆனால் நமக்குள்ளிருக்கும் கற்பனை அதனை சாத்தியப்படுத்துகிறது.
மனித மனதிற்கு கால்களே கற்பனைகள் தான்.கற்பனை மட்டும் இல்லை என்றால் மனித மனம் ஒரு ஜடம்.கற்பனை தான் நம்மை இடைவிடாமல் இயங்கச் செய்கிறது.
இந்த நூலை படித்து முடிக்கும் போது உங்கள் மனம் இமயமலையிலிருந்து இறங்காது. வாசித்து முடிக்கையில் ஒரு வித மன அமைதியை,அக நிறைவை கொடுக்கக்கூடிய புத்தகம் இது.
"மதம் எதுவெனினும் மனிதர்கள் நன்றாக இருந்தால் போதும்"என்ற போதனையை மனக் கொள்கையாக கொண்ட ஒருவரின் பயண அனுபவத்தின் வழியே இந்துமதம், இஸ்லாம்,சீக்கியம், கிறித்துவர், புத்தமதம் என எல்லா மத தத்துவங்களையும் ஒன்றென உள்ளத்தில் எழ வைக்க முயல்கிறது இந்த புத்தகம்.
கே.வி.ஜெயஸ்ரீ அவர்களின் அபாரமான மொழிப்பெயர்ப்பு நம்மை இந்த புத்தகத்துடன் ஒன்றச் செய்கிறது.
பனிமலையின் தூய்மைப்போல் அவ்வளவு புதுமையான மொழி கொண்டு எழுதியுள்ளார் கே.வி.ஜெயஸ்ரீ .
மொழி வறட்சியற்ற ஒரு மொழிபெயர்ப்பு.
மூல மொழியின் சாரம் குறையாமல் மொழிபெயர்ப்பு செய்பவர்கள் எனக்குத் தெரிந்து எழுத்தாளர் க.நல்லதம்பி மற்றும் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ என்பேன்.
கே.வி.ஜெயஸ்ரீயின் நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவல் அளவுக்கு இல்லையென்றாலும் ஹிமாலயம் நூலும் ஒரு நல்ல கலை பிரதி என்பது என் அபிப்ராயம்.
உங்கள் மனத் தடங்களில் கற்பனைக் கால்களால் இமயமலை நோக்கி நடக்க இந்தப் புத்தகத்தை உடனே கையில் எடுங்கள்///
Velu malayan
18.6.2021
❤️❤️❤️❤️
Comments
Post a Comment