மானசரோவர்

 ///அசோகமித்திரன் எழுதிய மானசரோவர் நாவலை முன்வைத்து



அசோகமித்திரன் அவர்கள் ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியதாலோ என்னவோ சினிமா பற்றிய தாக்கம் அவருக்குள்ளும் அவரது சில படைப்புகளிலும் அதிகம் உள்ளது எனலாம்.

அவருடைய கரைந்த நிழல்கள்,தண்ணீர் மற்றும் இந்த மானசரோவர் நாவலிலும் சினிமா உலகம் தான் களமாக கையாளப்பட்டுள்ளது.

தண்ணீர் நாவலை அப்படி முழுமையாக சினிமா களம் கொண்ட நாவல் என்று சொல்ல முடியாது.நாவலில் வரும் பாஸ்கர்ராவ் மற்றும் ஜமுனா சினிமா சம்பந்தப்பட்டவர்கள் அவ்வளவே.

மானசரோவர் நாவல் தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராக இருக்கும் கோபாலன் என்பவருக்கும்,ஹிந்தி சினிமா உச்ச நட்சத்திரமாக இருந்த சத்யன் குமார் என்ற நடிகருக்கும் இடையே உள்ள நட்பை பற்றியது. 

கோபாலன் பாத்திரம் மணிக்கொடி இதழ் எழுத்தாளர் கி.ராமச்சந்திரன் என்பவரின் புனைவு என்றும்,சத்யன்குமார் என்பது ஹிந்தி நடிகர் திலீப் குமாரின் புனைவு என்றும் சொல்லப்படுகிறது.

கோபாலன் மற்றும் சத்யன் குமார் இருவரின் பார்வையில் தான் மாறி மாறி நாவல் சொல்லப்படுகிறது.

நாவல் நேரு இறக்கும் காலத்தில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது.நேருவின் மரணத்தை பற்றியும் நாவலில் பதிவு செய்யப்படுட்டுள்ளது.

எனக்கு தெரிந்து,நான் பார்த்தவரை தாங்கள் சார்ந்து இயங்கும் துறையில் ஆளுமைகளாக இருப்பவர்கள் குடும்பத்தில் சிறந்த ஆளுமைகளாக இருப்பதில்லை.

தாங்கள் சார்ந்து இயங்கும் துறைகளில் தங்களை கரைத்துவிட்டு குடும்பத்தை திரும்பிப் பார்க்கும்போது பொருளியல் ரீதியாக,ஆளுமை ரீதியாக கொஞ்சம் தோற்றவர்களாகவே இருக்கும் சில பேரை நானறிவேன்.

அதுவும் சினிமா துறைப் பற்றி நான் விலாவரியாக எதுவும் சொல்லத் தேவையில்லை.நாவலில் வரும் கோபாலன் கூட மனைவியின் நம்பிக்கையை சம்பாதிக்காமல் தன்னுடைய பதினான்கு வயது மகனை இழந்து,தன்னுடைய மனைவி ஜம்பகமும் மனப்பிறழ்வு அடைந்து விடுகிறாள்.

மனப்பிறழ்வு நிலையின் உச்சநிலையில்  தான் பெற்ற மகன் ராஜாவையே தூங்கிக் கொண்டிருக்கும் போது தலையணை வைத்து அழுத்திக் கொண்டு விடும் அளவுக்கு புத்தி பேதலித்து போய் விடுகிறாள் ஜம்பகம்.

சத்யன்குமார் கோபாலின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரை ஜம்பகம் விரும்புவதில்லை.அதற்கான காரணத்தை நாவலின் கடைசியில் சத்யன் குமாரே  சொல்கிறார்.

கோபால் சினிமா துறையில் இருப்பதால் அவர் பொம்பளை,குடி கூத்து என்று வாழ்க்கையை நடத்துகிறார் என்று ஜம்பகம் நினைத்துக் கொள்வது தான்ன் அவள் மன இறுக்கத்திற்கும்,கோபால் மீது அவளுக்கு பற்று இல்லாமல் போனதற்கும் காரணமாக இருக்கும் என்று கோபாலே சொல்கிறார்.என் மனைவியிடம் கொடுத்து பத்து வருடங்கள் ஆகின்றன என்கிறார் கோபால்.

கிட்டத்தட்ட எல்லா இழப்புகளையும் ஏற்றுக்கொண்டு கடக்கக் கூடிய ஒரு சாந்த மனிதராக கோபால் பாத்திரம் புனையப்பட்டுள்ளது.அது அசோகமித்ரனாக கூட இருக்கலாம்.

சத்யன் குமார் பெஷாவரிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்.இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது தன் தாய், தந்தையை இழந்தவர்.அந்த இழப்பின் வலியை கோபாலின் மகன் ராஜா இறக்கும்போது அழுது தீர்த்துக் கொள்கிறார்.

குடும்ப சூழலின் சிக்கிலிருந்து விடுபட சினிமா மற்றும் குடும்பத்தை துறந்து கடைசியில் ஒரு சித்தரிடம் சென்று சேருகிறார் கோபால்.

தன் மனதை இறுக்கிக் கொண்டிருக்கும் தன் கடந்தகால வாழ்வின் வலிகள்,தான் செய்த பாவங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள மெஹர் பாபா என்ற மெளன சாமியை  தன்  மனதில் நினைத்துக் கொண்டே இருக்கிறான் சத்யன் குமார்.மெஹர் பாபாவின் கண்களை,மெஹர் பாபாவின் ஜாடையை கோபாலன் கண்களில் காண்கிறான் சத்யன் குமார்.

சினிமா உலகத்தில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகரிடம் தேவைக் கருதி உள்நோக்கத்துடன் பழகுவார்கள்.ஆனால் கோபால் அப்படிப்பட்டவர் அல்ல.அந்த உள்நோக்கமற்ற எளிய குணம் தான் கோபால் மீது சத்யன்குமாருக்கு ஒரு பெரிய மதிப்பையும், நட்பையும்  ஏற்படுத்துகிறது.

நாவலின் ஒரு இடத்தில் சத்யன்குமார் அசுத்தம் என்னுள் ஒவ்வொரு கணமும் தெரிகிறது. அசுத்தம் உடலில் மட்டும் நிரம்பி வழியவில்லை.என் மூச்சில்,என் பார்வையில்,என் மனதில்,என் ஆத்மாவில்....என்கிறான்.

கோபால் தனக்கான மன நிம்மதியை சித்தரிடம் தேடியது போல,சத்யன்குமார் தனக்கான விடுதலையை மெஹர் பாபா வடிவில் அவன் பார்க்கும் கோபாலிடம் தேடுகிறான்.

தான் செய்த ஒரே தவறு தான் என்னுடைய குடும்பத்தை சீரழித்து விட்டது என கருதி அதை கோபாலிடம் வெளிப்படுத்த முயற்சி செய்யும் போதெல்லாம் கோபால் அதை அனுமதிக்காமல் கடந்து செல்கிறான்.

இப்படியாக தன் மனதிலிருக்கும் பாரத்தை கோபாலிடம் இறக்கி வைத்து விடலாம் என்று எண்ணும் போது சித்தர் சத்யன்குமாரைப் பார்த்து கோபால் வீட்டில் இல்லாத போது நீ கோபால் மனைவியை கையை பிடித்து இழுத்தாய் அல்லது கோபால் மனைவி உன் கையை பிடித்து இழுத்தாள் என்பது தானே உன் மனதில் இருக்கும் பாரம் என்கிறார் சித்தர் சுவாமிஜி.

ஒன்றும் கவலைப்படாதே தண்ணீரில் மூழ்கி எழு இதுதான் உனக்கு கிடைக்கக் கூடிய மானசரோவர் என்று சொல்லிவிட்டு சித்தர் சென்று விடுகிறார்.

உண்மையில் கோபால் சத்யன்குமாரின் மேல் கோபப்பட தானே வேண்டும் ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் கோபால் சத்யன் குமாரிடம் இயல்பாகவே பேச முடிகிறது.அவனை ஏற்றுக் கொள்ள முடிகிறது.


தன் மகன் ராஜாவைவே உடல்நிலை சரியில்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவன் முகத்தில் தலையணையை வைத்து கொன்ற தன் மனைவி கண்டிப்பாக நான் இல்லாத சமயத்தில் வீட்டுக்கு வந்த நண்பன் சத்யன்குமாரை ஒருவேளை தன் மனைவியே கூட கைப்பிடித்து இழுத்திருக்கலாம் என்ற எண்ணம் கோபாலுக்குள் இருந்தது கூட சத்யன் குமாரை ஏற்றுக்கொண்டதற்கு காரணமாக இருக்கலாம்.

யாருக்கான எந்த முடிவையும் நாவலில் அசோகமித்திரன் வெளிப்படையாக சொல்வதேயில்லை.

உண்மையில் நமக்குள்ளிருக்கும் மனக் கழிவை கழுவிக் கொள்ள நமக்கு எல்லோருக்குமே ஒரு மானசரோவர் தேவைப்படுகிறது.

நாவலில் வரும் துணை கதாபாத்திரத்தில் நடிகை சியாமளாவின் பார்த்திரம் கோபால் பாத்திரத்துக்கு நிகரானது.

இரண்டு பேரின் தோழமைகள் சார்ந்ததாக நாவல் இருந்தாலும் வாழ்வின் ஞானத் தேடலை, காரணமின்றி அலைகழிப்பு செய்யும் இந்த வாழ்க்கையைப் பற்றியும், அலைக்கழிப்பில் உழலும் மனிதர்களைப் பற்றியும் ஒரு தரிசனத்தை தருகிறது இந்த நாவல்.

அசோகமித்திரன் படைப்புகளும்,எழுத்தும்  சாதாரணமானவர்களை முன்னிறுத்துபவை.அதனால்தான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் அசோகமித்திரனின் எழுத்துக்களை சாதாரணத்துவத்தின் கலை என்கிறார்.

இந்தியாவின் எர்னெஸ்ட் ஹெமிங்வே எனப்படும் அசோகமித்திரன் அலங்காரமற்ற எளிய சொற்செட்டுகளில் தன் படைப்புகளில் கலைத்தன்மையை கட்டி எழுப்பியவர்.அந்த வகையில் அசோகமித்தினின் கலைத்தன்மை கொண்ட படைப்புகளில் மானசரோவருக்கும் ஒரு மகத்தான இடமுண்டு.///


velu malayan

2.6.2021

❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

வீடில்லா புத்தகங்கள்