நடந்தாய் வாழி காவேரி

 ///சிட்டி-தி.ஜானகிராமன் எழுதிய "நடந்தாய் வாழி காவிரி" நூலை முன்வைத்து



பயணம் பற்றிய நூல்கள் எப்பொழுதுமே எனக்கு விருப்பமானவை.


அப்படி  நான் விரும்பிப் படித்த பயண நூல்கள் என ஏ.கே.செட்டியார் எழுதிய "இந்திய பயணங்கள்", "குடகு", வெ.சாமிநாத சர்மா எழுதிய "எனது பர்மா வழி நடைப்பயணம்",

அதியமான் கார்த்திக் எழுதிய ஆப்பிரிக்க நாடுகளின் பயணங்கள் பற்றிய "நாடோடியின் கடிதங்கள்" எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய தேசாந்திரி,ரயில் நிலையங்களின் தோழமை ஆகிய நூல்களைச் சொல்லலாம். 


"jobs fill your packet,Travel and adventures fill your Soul"என்ற ஆங்கில சொலவடை ஒன்று உண்டு.


அதாவது வேலை உங்கள் பாக்கெட்டை மட்டும் தான் நிரப்பும் ஆனால் பயணங்களும் அது கொடுக்கும் சாகச உணர்வுகளும் உங்கள் ஆன்மாவை நிரப்பும் என்பதாகும்.


into the Wild என்ற ஆங்கிலப் படம் பயணம் செய்யும் ஒரு இளைஞனைப் பற்றிய படம். நான் பார்த்தவரை பயணம் பற்றிய படங்களில் சிறந்த படம் into the Wild என்பேன்.


அன்றாட செக்கு மாட்டு வாழ்வின் சலிப்பிலிருந்து நம்மை ஆசுவாசப்படுத்தி கொள்ள பயணங்களே உதவுகின்றன.


என் பயண அனுபவங்கள் என்பவை நான் சிறுவயதில் இருக்கும்போது நேர்த்தி கடனுக்காக மொட்டை அடிக்க பழனி கோயிலுக்கு என் அப்பா என்னை கூட்டிச் சென்றதையும்,பிறகு கல்லூரி காலங்களில் ஊட்டி,கேரளா என்று கல்விச் சுற்றுலா சென்றதையும்,


அதன் பிறகு நண்பர்கள் உடன் 2018 ஆம் ஆண்டு நான்கைந்து நாட்கள் ஆந்திரா கர்நாடகா சுற்றுப்பயணம் மேற்கொண்டதையும்   என் வாழ்வின் பயண அனுபவங்கள் என்று சொல்லலாம்.


பொதுவாக நிறையப் பயண நூல்கள் வரலாற்று புராதன சின்னங்கள்,கோயில்கள் கோட்டைகள் புகழ்பெற்ற நகரங்கள் ஆகியவற்றை சுற்றிப் பார்த்த அனுபவங்களாகத்தான் இருக்கும்.


ஆனால் நடந்தாய் வாழி காவேரி என்ற இந்த நூல் முழுக்க முழுக்க காவிரியின் தோற்றம் முதல் அது கடலில் கலப்பது வரையான ஒரு முழுமையான சித்திரத்தை நமக்கு கொடுக்கிறது.


எழுத்தாளர்கள் சிட்டி என்கிற ராஜகோபாலன் மற்றும் தி. ஜானகிராமன் ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் குடகில் தோன்றும் தலைக்காவேரி முதல் அது கடலில் கடக்கும் இடமான காவிரிபூம்பட்டினம் வரையில் தாங்கள் மேற்கொண்ட பயண அனுபவங்களை இன்னும் தெளிவாக எடுத்துரைக்கிறது.


குடகு பற்றியும்,குடகின் வளம் பற்றியும்,அதன் தலைநகரான மெர்க்காரா பற்றியும் இந்நூலில் பதிவு செய்துள்ளார்கள்.


ஆனால் கூடையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளக்கூடிய ஒரு ஆவணமாக இருப்பது ஏகே செட்டியார் அவர்கள் எழுதிய குடகு நூல்தான்.


அது வெறுமனே ஒரு பயண நூல் மட்டுமல்ல குடகு மக்களின் வாழ்க்கைமுறை,கலாச்சாரம் ஆகிய பற்றிய ஒரு முக்கிய ஆவணம் எனக் கருதுகிறேன்.


நடந்தாய் வாழி காவிரி நூலில் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி, காவிரியுடன் இணையும் அர்க்காவதி ஆறு,மேகேதாட், காவிரி ஆற்றில் உள்ள ஹன்னடு சக்ர எனப்படும் பன்னிரண்டு சுழி இடம் எனநிறைய இடங்களை பார்த்து அனுபவங்களைப் பதிவு செய்கிறார்கள்.


சிட்டியும்,தி.ஜாவும் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது அந்தப் பகுதியில் காலரா பரவி இருந்ததால் ஒழுங்காக ஸ்ரீரங்கப் பட்டினத்தை சுற்றிப் பார்க்க முடியவில்லை என்று பதிவு செய்திருக் கிறார்கள்.


நான் சுற்றுப்பயணம் செய்ய போது ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனையை சுற்றிப் பார்த்தேன்.மிகுந்த கலை நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள அரண்மனை அது.


அரண்மனையில் திப்பு சுல்தான் பயன்படுத்திய உடைகள்,வாள்,அவர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகிறது.


நான் ஸ்ரீரங்கப்பட்டணம் சென்றிருந்தபோது அது மழைக்காலம் என்பதால் காவிரியில் எங்கு பார்த்தாலும் கரைபுரண்டு வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.


ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயத்தை காண நாங்கள் சென்றபோது சரணலாயம் செல்வதற்கான முகப்பு சாலையிலேயே முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.அங்கு காவலுக்கு நின்றிருந்த காவல்துறைஅதிகாரிகள் சரணாலயம் முழுவதும் நீர் சூழ்ந்து விட்டதால் சரணாலயத்திற்கு செல்ல முடியாது என்று கூறியதால் ஏமாற்றத்துடன் நாங்கள் வந்து விட்டோம்.


அதேபோலவே இந்த நூலிலும் சிட்டியும்,தி.ஜானகிராமனும் ரங்கன் திட்டு பறவைகள் சரணாலயத்தை காலரா காரணமாக பார்க்க முடியாமல் போனதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார்கள்.


கர்நாடகத்திலிருந்து ஒகேனக்கல்லை கண்டுவிட்டு அப்படியே சேலம்,தஞ்சாவூர்,திருச்சி என பயணத்தை தொடர்கிறார்கள்.


உண்மையில் காவிரி கரையில் அமைந்துள்ள நகரங்களைப் பற்றியும்,அங்குள்ள கோயில்களைப் பற்றியும் மிக நுட்பமான வரலாற்றுத் தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.


காவிரியின் அது சார்ந்து பலன் அடையக்கூடிய நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு முழுமையான ஆவணமாக இருக்கிறது இந்நூல்.


காவிரி நதியின் உபநதிகள்,அவை உற்பத்தியாகும் இடங்கள்,அதனால் வளம் பெறும் பகுதிகள், காவிரிக்கரையில் அமைந்துள்ள தொழிற்பேட்டைகள் என ஏராளமான தகவல்கள் கொண்ட காவிரியைப் பற்றிய ஒரு முழுமையான ஆய்வு நூல் என கருதலாம்.


பயண நூல் என்பதைத் தாண்டி இசை,வரலாறு,புராணங்கள்,கோயில்கள் பற்றிய நுண்ணிய வரலாற்றுத் தகவல்களுடன் எழுதப்பட்ட ஒரு சிறந்த பயண நூல் நடந்தாய் வாழி காவேரி///


velu malayan

1.6.2021

❤️❤️❤️❤️

Comments

Popular posts from this blog

இலட்சிய இந்து ஓட்டல்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

வீடில்லா புத்தகங்கள்