The Great Indian kitchen

 ///The Great indian kitchen படம் பற்றிய ஒரு பார்வை



குடும்பம் என்பது சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் ஒரு வன்முறையின் வடிவம் என்பேன்.


குடும்ப அமைப்பின் அதிகார மையத்தின் ஆணிவேராக ஆண் இருக்கிறான்.அவனின் அதிகார நிழலின் கீழ் தான் ஒரு பெண் வாழ வேண்டும் என்ற நியதி இங்கு வகுத்து வைக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக குடும்பத்தில் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இரு அதிகார இடங்கள் சமையலறையும்,கட்டிலறையும் தான்.


படுக்கையறைக்கும், சமையலறைக்கும் இடைப்பட்ட தூர சேவையிலேயே பெண்களின் வாழ்நாள் தேய்ந்து விடுகிறது.


திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் தன் கணவனுக்கும்,மாமானாருக்கும் வடித்து கொட்டியும்,அவர்களுக்கு பணிவிடை செய்வதையுமே 1.30 மணி நேரங்களுக்கு மேல் திரையில் காட்டுகிறது "The Great indian kitchen" என்ற மலையாளப்படம்.


 படத்தின் பெரும்பகுதி கேமிராவின் கோணம் சமையலறையையும், சாப்பாட்டு மேசையையும் தாண்டி செல்வதில்லை.


சமையலறையை அதுவும் மேலிருந்து கீழாக காட்டும் உயர் கோண கேமிரா காட்சிகள்.


மாமானார் சட்னியை அம்மியில் அரைக்க சொல்வது,சாதத்தை குக்கரில் வைக்காமல் நெருப்பில் வேக வைக்க சொல்வது,Washing machine-ல் துணி துவைக்காமல் கையில் துவைக்க சொல்வது என எவ்வித அதிகாரமும் இன்றி அமைதியாக அதிகாரம் செய்கிறார் அந்த கிழவர்.


சமையலறை கழிவுகளை வெளியேற்றும் குழாயில் கசிவு ஏற்படுவதை அடைக்க கணவனிடம் பலமுறை சொல்லியும் கண்டுகொள்ளாமலிருக்கும் கணவன்,அதை ஒரு பிரச்சனையாகவே கருதுவதில்லை.

வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம்.சாப்பிடுவது மட்டுமே தன் வேலை என இருக்கும் ஒரு ஆணாதிக்க மன நிலைகொண்ட கணவனை கண்முன் நிறுத்துகிறார் நடிகர் சுராஜ் வெஞ்சமுரடு.


பகலும் இரவும் சமைத்து விட்டு எல்லா வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு படுக்கப்போகும் போது  அவள் மீது கணவன் இயங்கும் காட்சியில் அவள் நினைவெல்லாம் சமையலறை கழிவுகளை கொட்டும் சாக்கடை குழியும்,சமையலறை குழாயில் கசியும் அழுக்குத் தண்ணியும், மீந்துபோன,வீணான உணவின் மீது மொய்க்கும் ஈ போன்றவையே அவள் மண்டைக்குள் வந்து போகிறது.


பொழுதும் வேலை செய்வதும், சமையலறை வேலைகளும்  அச்சுருத்தி சலிக்கச் செய்கிறது அவளை.


அவள் கணவனுடன் கலவி கொள்வதை  ஈ மொய்க்கும் பழைய உணவுகள்,மீந்துபோன உணவுகளை கொட்டும் சாக்கடையை காட்டி காட்சிபடுத்தியிருப்பது brilliant thinking.


தான் dance Teacher வேலைக்கு apply செய்வதை கணவனும் மாமனாரும் மறுக்கிறார்கள்.


எதார்த்த  காட்சிகளின் இழை பின்னலில் நகர்கிறது படம். 


புனிதம் என்ற பெயரில் இந்திய குடும்பங்கள் கடைபிடிக்கும் பெண்களின் மாதவிடாய் தீட்டு,பெண்களின் கோயில் நுழைவு உரிமை என நிறைய விஷயங்களை படம் எவ்வித வலிதலுமின்றி பதிவு செய்கிறது.


சுராஜ் வெஞ்ச முரடும்,நிமிஷா சஜனும் நிஜமான கணவன், மனைவியை திரையில் பிரதிபலிக்கிறார்கள். 


படத்தின் கடைசி 15 நிமிடம் தான் பரபரப்பே.


இது வரைக்கும் மனைவிக்கு சமையலறையில் எந்த உதவியும் செய்யாமல் அதட்டி சாப்பாடு கொண்டு வா என கேட்கும் கணவன்கள் நிச்சயம் இந்த படம் பார்த்தால் கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி கொள்வார்கள்.


உண்மையில் சமையலறை தான் பெண்களின் அதிகாரம் உள்ள இடம் என நாம் வகுத்து வைத்துள்ளோம். பெண்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். 


எழுத்தாளர் அம்பையின் "வீட்டின் மூலையில் ஒரு சமையலறை" என்ற சிறுகதை வட இந்திய குடும்பத்தில் உள்ள பெண்கள் சமையலறையில் வேலை செய்தே அவர்கள் சுரண்டப்படுவதைப் பேசுகிறது.


இந்த கதையில் 


"ஒளியற்ற,ஜன்னல் குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண் கால் போல் அதிகாரங்கள் நீண்டு வளைத்துப் போட்டன.கால்கள் இறுக இறுகக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக.அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும்,காலைச் சுற்றினால் கொலுசு என்றும்,தலையில் பட்டால் கிரீடம் என்றும் வைத்துக் கொண்டனர். பெண்கள் நாலா புறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்துகொண்டு அதை ராஜ்ஜியம் என்று அரசோச்சினர்.

இன்று மட்டன் புலாவ்,நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகளை எடுத்தனர்.பேடி அதிகாரம்" என்ற வரிகள் வரும்.


அம்பையின் கதையில் வரும் குடும்பத்தலைவி ஜீஜி,மீனாட்சி என்ற பெண்ணிடம் இவ்வாறு கூறுகிறாள்:


"சமையலறையை ஆக்கிரமித்துக் கொள்.அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே.இரண்டும் தான் உன் பலம் அதிலிருந்து தான் அதிகாரம்" என்கிறாள்.


ஆனால் மீனாட்சியோ ஜூஜியை சமையல் அறையை விட்டு வெளியே வா என்கிறாள்.


ஜீஜி சமையலறை,மாதவிடாய் போனால் கவலை மாதவிடாய் நின்றால் கவலை என நிறைய விஷயங்களை மூளையின் இழுப்பறைக்குள் இழுத்துப்போட்டுக்கொண்டு சமையலறையே உலகம்,பிள்ளை பெற்றுக்கொள்வதே பெண்ணின் கடமை என இல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் புதுக்கண்டங்களை கண்டுபிடித்திருக்கலாம்,கைலாய பர்வதத்தில் அமர்ந்து காவியம் படைத்திருக்கலாம் என்கிறாள்.


பெண்களின் உலகம் சமையலறையில் இல்லை அதைவிட்டு வாங்க ஜீஜி என்பதோடு அந்த கதை முடியும். 


இந்த The Great Indian kitchen படத்திலும் நாயகி கடைசியில் சமையலறைத் தொட்டியின் குழாயில் கசியும் அழுக்குத் தண்ணியை தனது கணவன் மற்றும் மாமனார் முகத்தில் ஊற்றி விட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.


தனக்கு பிடித்த Dance Teacher வேலையில் அவள் சேர்வதுடன் படம் முடிகிறது.


உண்மையில் நான் சமீபத்தில் பார்த்த படங்களில் சிறந்த படம் "The Great Indian kitchen" என்பேன்.


ஒரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்து கொள்வது தனக்கு பிள்ளை பெற்றுக் கொடுப்பதற்கும்,தனக்கு பணிவிடைகள் செய்வதற்கும் வாய்த்தவள் என்பதைத் தாண்டிய ஒரு அக நேசிப்பை,அவள் விருப்பங்களுக்கு கொஞ்சம் செவிகொடுங்கள் என்பதை இப்படம் மெதுவான காட்சி மொழிகளில் சத்தமாய் பேசுகிறது///


Velu malayan

9.4.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்