தகப்பன் கொடி

 ///அழகிய பெரியவனின் தகப்பன் கொடி நாவலை முன்வைத்து



நிலம் அதிகாரத்தின் குறியீடு.நிலம் இழந்தவன்,நிலம் இருப்பவனிடம் கையேந்தி விவசாயக் கூலியாக மாற்றப்பட்ட, ஏமாற்றப்பட்ட தலித் குடிகளின் வரலாற்று உண்மையின்  வலியை பதிவு செய்கிறது தகப்பன் கொடி நாவல்.


தலித்துகள் நிலமிழந்து ஒடுக்கப்பட்டவர்களாக மாறியதன் வரலாற்றை சொல்லும் ஒரு எதார்த்தவாத நாவல் தகப்பன் கொடி.


எனக்கு எப்பொழுதும் பிடித்த எதார்த்தவாத எழுத்தாளர் பூமணியின் "பிறகு" நாவலில் வரும் அழகிரி பகடையை நியாபகப்படுத்துகிறான்  தகப்பன் கொடி நாவலில் வரும் அம்மாசி.


சொந்த மண்ணில் ஆதிக்க சாதி ஆண்டைகளால் நிலம் பிடுங்கப்பட்டு அகதியாய் திரியும் பறக்குடியில் பிறந்த அம்மாசி என்பவனின்  வாழ்க்கை வழியே பஞ்சமி நிலங்கள் தலித்துகளிடமிருந்து எப்படி பறிக்கப்பட்டது, அவர்கள் எப்படி விவசாய அடிமை கூலிகளாய் ஆனார்கள் என்பதை பேசுகிறது நாவல்.


நாவலின் களம் வட தமிழகத்தின் குடியாத்தம்,ஆம்பூர் என்பதால் அதன் நிலப்பரப்பு அங்குள்ள சாயுபுகள், தோல் தொழிற்சாலை,பீடி தொழிற்சாலைகள் ஆகியவற்றை நாவல் பதிவு செய்கிறது.


நாவலின் பெரும் பலம் நாவலில் காட்டப்படும் மனிதர்களின் வாழ்க்கையும்,வாழ்க்கை மொழியும் அசல் தன்மையோடு பதிவு செய்யப்பட்டது தான்.


சொந்த நிலமிழந்த அம்மாசி தாமுத்தன் நாயக்கரிடம் அடிமைக் கூலி வேலை,தோல் தொழிற்சாலையில் வேலை,பிறகு மாட்டு வியபார தரகர் என பல்வேறு வேலை செய்கிறான்.


நாவலில் வரும் அம்மாசி மற்றும் அவனது மனைவி அபரஞ்சியின்  உருவங்கள் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒட்டுமொத்த தலித் தொல் குடிகளின்  ஆதி உருவங்கள்.


இன்றைய நவீன வாழ்க்கை சாதிய கட்டுமான இறுக்கத்தில் சில நெகிழ்வுகளை கொடுத்திருக்கிறது. ஒன்றாக படிப்பது,ஒன்றாக பணிபுரிவது,சாப்பிடுவது,ஒரே அறையில் தங்குவது என.


ஆனால் 20 வருடங்களுக்கு முன் என் ஊரிலே ஆதிக்க சாதித்தெருவில் தலித்துகள் செருப்புக்காலுடன் நுழைய முடியாது என சொல்லக்கேட்டிருக்கிறேன்.


தோளில் துண்டு போடமுடியாதாம்.இது போன்ற நிகழ்வுகளை நாவல் பதிவு செய்து செல்கிறது.


இந்த நிலை இன்னமும் கூட இந்தியாவின் ஏதாவது ஒரு கிராமத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.


இன்னமும் சாதியம் கூர்மையாக இருக்கும் இடம் இந்திய கிராமங்கள் தான்.


இதுபோன்ற சக மனிதன் மீது நிகழ்ந்தப்படும் அவலங்களை இந்நாவல் ஆவணப்படுத்துகிறது.



நாவல் உணர்ச்சி நெகிழ்வுகளைத் தாண்டி எழுதப்பட்டிருந்தாலும் நாவலில் விஷப்பூச்சி கடியில் நிறைமாத கர்பிணியாய் இருக்கும் அம்மாசியின் மனைவி அபரஞ்சி இறந்து போகும் இடம் மனதை உணர்ச்சி நெகிழ்விற்கு உள்ளாக்குகிறது.


அம்மாசி,முத்துமாரி மற்றும் சின்னசாமி ஆகியோர் ஆதிக்கசாதி வெங்கடாசலத்திடமிருந்து கருவா சேட்டுவின் பாட்டி ஆதிகண்ணாம்மா பெயரில் உள்ள பத்து ஏக்கர் Depressed class Land யை மீண்டும் கருவா சேட்டுவிற்கு வாங்கி கொடுக்கிறார்கள்.


இன்னமும் நிறைய பஞ்சமி நிலங்கள் தலித் அல்லாதவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.


திருமலய்யன் நிலத்தை பிடுங்கி விடுவதால் ஊரை விட்டு கிளம்பும் போது அம்மாசியின் தகப்பன் நல்லான் "வெட்டன கெணத்திலேயே குடிச்சவனும் கிடையாது.கட்ன ஊட்லயே வாழ்ந்தவனும் கிடையாது" என்று கையறு நிலையில் நொந்து நிற்கிறான்.


மயில்பட்டியிலிருந்து வேறு ஊருக்குப் போகும் போது டேய் நல்லான் அப்படி என்னடா இங்க கருப்பு வந்துடுச்சு ஊறவிட்டு போறீங்க என ஒரு ஆண்டை கேட்கும் போது நல்லானின் பதில் "நொய்யரிசி எல்லாம் கொதிக்கு தாங்காது ஆண்ட" என்று நடக்கிறான்.


தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசை பெற்ற தகப்பன் கொடி நாவல் தலித்துகளின் உரிமையும்,நிலமும் பறிக்கப்பட்டதை ஆவணப்படுத்திய விதத்திலும்,எதார்த்த தொனியில் எழுதப்பட்ட விதத்திலும் முக்கியமான படைப்பாகிறது///


velu malayan

31.3.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்