இக்கிகய்(ikigai)

 ///Hector Garcia and Francesc Miralles எழுதிய இக்கிகய்(ikigai) நூலை முன்வைத்து



அலுவலக நாட்களில் என் அலுவலகத்தின் முன்னால் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பது வழமை.


அப்படி ஒரு நாள் நானும் என்னுடன் பணிபுரியும் நண்பர் ரமேஷ் அவர்களும் டீ குடித்துக் கொண்டே அந்த டீ கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தோம்.


அப்போது அவர் அவருடைய பையனை பற்றி பேச ஆரம்பித்தார். என் பையனுக்கு உங்க வயசு தான் சார் ஆகும் என்று என்னை காட்டி பேசினார்.


உங்க பையனுக்கு என்ன வயது என்று நான் கேட்டேன்.43 என்று சொன்னார்.பக்கத்தில் இருந்த ரமேஷ் என்னை பார்த்து சிரிக்க தொடங்கினார்.


தொண்டையில் இறங்கிய டீ எனக்கு கசக்கத் துவங்கியது.

முடி விழுந்த வழுக்கை தலை,சற்று உயரமான உருவம், தாடைகளை எப்போதும் தாயகமாக கொண்டிருக்கும் மழிக்காத தாடி இவை எல்லாம் நான் சற்று வயது கூடியவன் என்பதற்கான அவருடைய அனுமானிப்பிற்கு காரணமாக இருந்திருக்கலாம்.


எனக்கு இப்போது 35 வயது தான் ஆகிறது என்று டீ கடைக்காரரிடம் சொல்லி விட்டு நானும்,நண்பரும் அலுவலகத்திற்குள் நுழைந்தோம்.


சிறுவயதிலேயே வயதை தாண்டி மூப்படைந்தவராக நம் உருவம் மாறுவதற்கு இந்த அவசர கதியான புழுதிப்பாய்ச்சல் வாழ்க்கை முறை, முறையற்ற உணவு முறை,

உடற்பயிற்சியின்மை,மன அழுத்தம் என நிறைய காரணங்களை நாம் சொல்லலாம்.


கடந்த ஐந்தாறு வருடங்களாக நான் தொடர்ச்சியான உடற்பயிற்சி செய்வதில்லை.


என் தேகம் தேங்கி ஒரு சதை சாக்கடையாகி விட்டது.

என் உடலை ஒழுங்காக கவனித்துக் கொள்ளாமல் உதாசீனம் படுத்தியதால் உபாதைகளின் உறைவிடமாக மாறிவிட்டது என் உடல்.


நம் உடலை நாம் உற்றுப்பார்த்து கவனிக்காமல் போகும்போது நம் உடலே நமக்கு பாரமாக போய்விடுகிறது.


குறிப்பாக 35 வயதை தாண்டும் போது உடலுக்குள்ளே உடலுக்கு எதிரான நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.


உலகில் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழும் ஜப்பானின் ஒகினாவா தீவில் உள்ள ஒரு கிராமத்தை முன்மாதிரியாக கொண்டும்,அதுபோலவே உலகில் அதிக வயது வரை வாழும் பகுதிகளான


 1.ஓக்கினாவா

(ஜப்பான்)


2. சார்டீனியா (இத்தாலி)


3.லோமா லிண்டா

(கலிபோர்னியா)


4. நிக்கோயா தீபகற்பம்

(கோஸ்டாரிக்கா) 


5. இக்காரியா(கிரீஸ்)


ஆகிய 5 நீல மண்டலங்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கை முறை,உணவுமுறை ஆகியவற்றைப் பற்றிய தரவுகளை முன்வைக்கிறது இந்நூல்.


                (Hector Garcia and Francesc Miralles)

இது ஒரு உபதேச உருட்டல் வகை நூலாக தெரிந்தாலும் நாம் மூப்படைவதிலிருந்து தப்பிக்க இந்த வாழ்வை எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ரகசியத்தை கூறுவதில் இந்நூல் முக்கியத்துவம் பெறுகிறது.


தீவிர இலக்கிய வாசகர்களுக்கு தீவிர அலர்ஜியை கூட இந்நூல் ஏற்படுத்தலாம்.


தீவிர இலக்கியம் வாசிப்பவர்கள் புனைவையே பெரிதும் விரும்புவர்.


இது சுயமுன்னேற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்த ஒரு வகையான நூல் என்றே சொல்லலாம்.


இக்கிகய் என்ற ஜப்பானிய மொழிச் சொல்லின் அர்த்தம் "எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் ஏற்படுகின்ற மகிழ்ச்சி" என்பதாகும்.


"ஹரா ஹாசி  பூ" தான்  நீண்டஆயுளுக்கான ரகசியம் என்கிறது இந்நூல். 


ஹரா ஹாசி பூ என்பது உங்கள் வயிற்றை சுமார் 80 சதவீதம் மட்டுமே நிரப்புங்கள்.அதாவது பசி இருக்கும் போதே சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகும்.


வாழ்வில் நமக்கு எதிரான எக் கணத்திலும் மனமுடையாமையும், மீண்டெழுதலும் மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது இந்நூல்.


உங்களால் உண்மையில் ஜீவனுடன் இருக்க முடிகின்ற கணம் நிகழ்கணம் மட்டும்தான் அந்த நிகழ்கணத்தில் லயத்திருங்கள் என்பதே இக்கிகய் கூறும் இன்னொரு ரகசியம்.


இக்கிகய் பத்து விதிகளை நம் முன் வைக்கிறது


1.எப்போதும்  மும்முரமாக இருங்கள். வேலையிலிருந்து ஓய்வு பெறாதீர்கள்.


2.அவசரப்படாதீர்கள்.


3.வயிறு நிறைய சாப்பிடாதீர்கள்.


4.உங்களைச் சுற்றிலும் நல்ல நண்பர்களை வைத்து கொள்ளுங்கள்.


5.உங்களுடைய அடுத்த பிறந்த நாளுக்குள் ஒரு நல்ல உடற்கட்டைப் பெற உறுதி பூணுங்கள்.


6.புன்னகை புரியுங்கள்


7.இயற்கையுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்


8.நன்றி உணர்வுடன் இருங்கள்


9.நிகழ் கணத்தில் வாழுங்கள்


10.உங்களுடைய இக்கிகயை பின்தொடருங்கள்.


வாழும் கலையைப் பற்றி பேசும் இக்கிகய் நூல் நம் வாழ்க்கைக்கான அர்த்தத்தை தேடுவதற்கான பாதையை காட்டும் பதாகையாக இருக்கிறது என்பது என் எண்ணம்///


velu malayan

11.3.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்