அனல் காற்று

 ///ஜெயமோகனின் அனல் காற்று நாவலை முன்வைத்து



ஆண் பெண் உறவின் சிக்கலை,அதன் உள்ளிருக்கும் காமத்தை,அதன் உளவியலை தமிழில் சற்றே நெருங்கி எழுதிய எழுத்தாளர் என தி.ஜானகிராமனைச் சொல்லலாம்.


இது நாள் வரை சமூகம் சரியென கட்டி வைத்திருக்கும்  ஒழுக்க விதிகளின் மீறல் தான் தி.ஜா படைப்புகளின் அடிநாதம்.


மனித மனம் எதையும் மீறிப் பார்க்க திரியும் ஒரு மிருகம்.மீறல் ஒரு சுவாரஸ்யம்.மீறல் ஒரு துடுக்குத் தனம்.மீறல் ஒரு  சாகசம்.


அருண் என்பனின் அந்த மீறல் தான் அனல் காற்று நாவலின் உள்ளிருக்கும் வெப்பம்.


அடுத்து தமிழில் குறைவாக எழுதினாலும் மனித மனங்களின் அடித்தளங்களில்

இருந்த சின்ன தனங்களையும், காமத்தையும் வெளிப்படையாய் எழுதியவர் எழுத்தாளர் ஜி.நாகராஜன்.


குறி நுழைத்தலும்,குறி நுழைத்துக் கொள்ளுதலும் மட்டுமே குறிக்கோளாய் இருந்த ஆதி குரங்கினத்தின் நாகரிக நகல்கள் நாம்.


ஆண் பெண் கூடி வாழ்தலின் மைய விசையாக இருப்பது காமம் தானே.


காமத்தை வெளிப்படையாய் ஏற்றுக் கொள்ள தயங்கும் சமூகம் இது.


ஒருவனின் சூழலும்,வாழிடமும் தான் அவனை வழி நடத்துகிறது.அப்படி பெண்கள் மத்தியில் வளர்க்கப்படும் ஒருவனின் காதலும்,காமமும் கலந்த Extra martial affair கதையை அனல் காற்று என்ற பெயரில் நாவலாக்கியுள்ளார் ஜெயமோகன்.


காதலிக்க ஒருத்தியும், காமத்திற்கு ஒருத்தியும் என ஒருவனுக்குள் இரு வாழ்க்கை வாழ நினைக்கும் ஒருவனின் கதை இது.


பாலு மகேந்திராவின் திரைப்படத்திற்காக  ஜெயமோகன் எழுதிய குறுநாவல் இது.


ஜெயமோகன் பாணியல்லாத ஒரு களம்.ஆனாலும் விளையாடியிருக்கிறார் ஆசான்.


பக்கத்திற்கு பக்கம் மனக்குறியை விறைத்து நிற்கச் செய்யும் ஒரு நாவல்.


கல்லூரியில் வணிகவியல் பேராசிரியையாக பணியாற்றும் அருணின்  அம்மா சிவகாமியின் தோழி சந்திரா.


அருணின் அம்மாவை விட சந்திரா 13 வயது ஜூனியர்.அருணின் அம்மா பணியாற்றும் அதே கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக சந்திரா பணியாற்றுகிறாள்.அருணுக்கு அவள் தான் ஆங்கில பேராசிரியை.


தன்னை சிறுவயதிலிருந்தே தூக்கி வளர்த்தவ சந்திராவுக்கும்,அருணுக்கு ஏற்படும் பொருந்தா காமம் தான் நாவலின் மைய இழை.


ஆண் பெண் உறவை வலுப்படுத்துவதும், உடைப்பதும் காமம் தான்.


காமம் தன்னை காதலாக,கனிவாக, கடமையாக,ரசனையாக உருமாற்றிக் கொள்கிறது.வெறுப்பாகவும் அருவருப்பாகவும் மாறிக் கொள்கிறது.


காமம் பாவம் என்கிறது பைபிள். அதனால் தான் அதில் பிறக்கும் மனிதர்களை பாவப்பட்டவர்கள் என்கிறது பைபிள்.


ஒரு  ஆணின் அந்தரங்க மனம் என்பது வேசைகளின் விடுதியைப் போன்றது.அங்கு அவன் நிறைய பெண்களை நினைவில் இழுத்து வந்து புணர்கிறான்.


முதல் உடலுறவு சந்திராவுக்கும் அருணுக்கும் முடிந்த பின் அருண் இவ்வாறு கூறுவான்.


"நான் சாரி என்றெல்லாம் சொல்லப் போறதில்லை.ஏன்னா இப்ப செய்ததை எல்லாம் நான் மனசால பல தடவை செஞ்சாச்சு.அது இப்பதான் தெரிஞ்சுது" என்று.


ஒழுக்கத்தால் செய்யப்பட்ட ஒர் ஆண் தான் தனக்கு வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் வேண்டுகிறாள்.


அப்படிப்பட்ட ஓர் ஆண் உலகத்தில் பிறக்கவே இல்லை,பிறக்கப்போவதும் இல்லை.


எல்லா மனித மனமும் அழுக்கானவை.


அருணின் தந்தை வீட்டு வேலைக்காரியுடன் உடலுறவு கொள்வதை பார்த்துவிடும் அருணின் அம்மா அந்த நொடியிலிருந்து அருணின் அப்பாவை பிரிந்து வாழ்கிறாள்.


அருண் அவனுடைய அப்பனைப் போல் ஆகிவிடக்கூடாது என்று அவனை பொத்தி பொத்தி வளர்க்கிறாள்.


ஆனால் அருணுக்குள் இருக்கின்ற ஆம்பளைக்கு அவனுடைய முறைப்பெண் சுசியும், அவனுக்குள் இருக்கிற பையனுக்கு சந்திராவும் தேவைப்படுகிறார்கள்.


ஒரு ஆம்பளைக்கு இரண்டு மனைவி தேவை ஒருத்தி அம்மா மாதிரியும், இன்னொருத்தி தோழி மாதிரியும் வேண்டும் என்கிறான் அருண்.


நாவலில் அருணின் கள்ள உறவு தெரிந்தும் அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் இலண்டனில் வளர்ந்த சுசி பாத்திரம் செயற்கைத்தனமாக உள்ளது.


நாவலில் ஜெமோ நேர்மையாக உருவாக்கிய பாத்திரம் சந்திரா தான்.


கணவனை இழந்த ஒருத்தி சந்தர்ப்பவாத காமத்தில் தன் முழு கட்டிலிருந்தும் தன்னை உடைத்து கொள்வது சரியானது என்றாலும்,


14வது அத்தியாயத்தில் சந்திரா தன் மணிக்கட்டை பிளேடால் அறுத்து ரத்த வெள்ளத்திலிருக்கும்போது அருண் அவளை ஜன்னல் கம்பிகளை உடைத்து காப்பாற்றிய பின் உடலெல்லாம் ரத்தம் தோய்ந்து இருவரும் உடலுறவு கொள்வது சைக்கோத்தனமாக உள்ளது.


சந்திராவின் மனதில்  நெருப்பாய் பொங்கிக்கொண்டேயிருக்கிறது காமம்.அது அணையாமல் ஊதிப் பெருக்க அவளுக்கு அருண் தேவைப்படுகிறான். 


ஓரிடத்தில் சந்திரா அருணின் புகைப்படத்தை பார்த்து சுயகயமைத்தனம் செய்து கொள்கிறாள்.


அருணின் தந்தை வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துகிறார்.

அருண் அவனுடைய அம்மாவுக்கு தெரியாமல் அவனுடைய தந்தையை போய் பார்த்து வருகிறான்.


அருணின் சந்திராவுடனான உறவு,தந்தையுடனான உறவு என எல்லாமும் ஒரு கட்டத்தில் அருணின் அம்மா சிவகாமிக்கு தெரிந்து விடுகிறது.


உன் அப்பன் எனக்கு துரோகம் செய்தவன்.அவனைப் போய் பார்த்துவிட்டு வருகிறாயா?

நீயும் உன் அப்பனை போலத்தான் என சிவகாமி கூறும் போது ஆமா நானும் என் அப்பனை போலத்தான். நானும் என் அப்பனும் துரோகிகள். ஒழுக்கம் கெட்டவர்கள்.


நீ என் அப்பனை பிரிந்த பிறகு மனதளவில் வேறு எந்த ஆணையும் ஒரு தடவை கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று வந்து சத்தியம் செய் அம்மா எனும் இடத்தில் சிவகாமி உடைந்து உட்கார்ந்து விடுகிறாள்.


அருணின் தந்தையின் மரணத்திற்கு பிறகு அருணின் சித்தி,அவனது இரண்டு தங்கைகள் சுபா,ராணி எல்லோரும் சமாதானமாகி ஒரே குடும்பமாகி விடுகிறார்கள்.அவர்களை அருணின் அம்மா சிவகாமி ஏற்றுக்கொள்கிறாள்


ஒரு கட்டத்தில் அருணுக்கும் சந்திராவுக்கும் இருக்கும் உறவை சந்திராவே முன்வந்து தன் மகன் நவீனுக்காக முறித்துக்கொள்கிறாள்.


ராஜம்மா கிழவி பாத்திரம் என்பது கள்ள உறவை கண்காணிக்கும் சமூகத்தின் கண்கள் என கொள்ளலாம்.


நாவல் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு விடுதியில் அருண் கை மணிக்கட்டை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்வதில் தொடங்குகிறது.


அப்போது அவனை பின் தொடர்ந்து வரும் சந்திராவும் அவள் மகன் நவீனும்  அருணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.


அருணை விட்டு பிரிந்து லண்டனுக்குத் செல்லும் சுசியை சந்திராவும் அருணும் பேசி சமாதானப்படுத்தி மும்பை ஏர்போர்டிலிருந்து அருணை பார்க்க வரச் செய்கிறார்கள்.


அவள் வருவதை எதிர் நோக்கி அவனது நினைவுகள் வழியாக சுசியிடம்  கதை சொல்வதைப் போல நாவல் எழுதப்பட்டுள்ளது.


ஆசானின் படைப்புகளில் சற்று மாறுபட்ட படைப்பு அனல் காற்று.



அடிக்கோடிட்டு வாசிக்கக்கூடிய வாக்கியங்களை ஆசான் இந்நாவல் முழுக்க எழுதியிருக்கிறார்.அவற்றில் சில


"பெண்மையின் முடிவிலா ஜாலங்களில் சிக்கி  அழிவதையே ஆணுக்கு இன்பமென வைத்திருக்கிறான் உலகியற்றிய முட்டாள்"


"அவள் வயிற்றுப்பகுதியில் பிரசவத் தழும்புகள் ஆற்றுநீரோடிய மணல் வரிகள் போல இருந்தது"


"நாம் மிக நேசிக்கும் ஒருவருக்கு நாமளிக்கும் ஆகச் சிறந்த பரிசேஅவர் மிக விரும்பும் ஒரு நடிப்பு தான் இல்லையா?"


"புத்தியுடன் விளையாடலாம்,மனதுடன் விளையாடலாம் ஆத்மாவுடன் விளையாடலாம், ஆனால் ஒருபோதும் நாம் உடலுடன்  விளையாடக்கூடாது"


ஆசானின் அனல் காற்று அக வெப்பம் கூட்டும் ஒரு நாவல். வாசிக்கலாம்///


Velu malayan

27.3.2021

Comments

Popular posts from this blog

திருச்சி ஜெயில்: எஸ்.எல்.கரையாளர்

ஜனநாயகச் சோதனைச் சாலையில்

மாயாதீதம் - என்.ஸ்ரீராம்